Friday, October 9, 2015

எத்தகைய கல்விமுறை வேண்டும்?



‘‘கல்வி என்பது வாழ்க்கையின் ஆயத்தம் என்பது அல்ல. வாழ்க்கையே கல்விதான்’’ என்றார், மறைந்த அமெரிக்க தத்துவவாதியும், கல்வி சீர்திருத்தவாதியுமான ஜான் டேவே. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் கல்விதான் அடிப்படையான பங்கு வகிக்கிறது. கல்வி ஒரு மனிதனுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித்தருகிறது, அவனது வாழ்க்கைக்கு வளம் சேர்க்கிறது என்றாலும், அதன் முதல்நோக்கம் அவன் அறிவை வளர்ப்பதும், மனதை விசாலமாக்குவதும்தான். ஆனால், கல்வி என்பது எப்போதும் நிலையான முறையில் நிச்சயமாக இருக்கமுடியாது.

மாறிவரும் காலத்துக்கேற்ப கல்வியின் முறைகளிலும், பாடத்திட்டங்களிலும் தொடர்ந்து மாற்றங்களை உருவாக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இந்த மாற்றம் என்பது கற்பிக்கும் முறைகளையும், உள்கட்டமைப்பு வசதிகளையும் சேர்ந்ததாகும். ஞானத்துறவி விவேகானந்தர் கூட எத்தகைய கல்வி வேண்டும்? என்று குறிப்பிடும்போது, மனிதனை மனிதனாக்கும் கல்வி வேண்டும் என்றார். அந்த உன்னதமான நோக்கத்தை நிறைவேற்றவேண்டும் என்றால், இப்போதைய கல்வி முறையில் சில மாற்றங்கள் தேவையாக இருக்கிறது. இன்றைக்கு வளர்ச்சி அடைந்த நாடுகள் அனைத்திலும் தரமான கல்வி போதிக்கப்படுவதால்தான், அவற்றின் வளமான நிலைக்கு காரணமாக இருக்கிறது. சில நாடுகளில் தேர்வுகள் முறையே இல்லை. சில நாடுகளில் அந்தந்த ஆசிரியர்களே பாடத்திட்டத்தை வகுத்துக்கொள்ள முடிகிறது. சில நாடுகளில் மாணவர் களோடு சேர்ந்து பாடத்திட்டத்தை தயாரிக்கிறார்கள். அத்தகைய ஒரு முயற்சியில் மத்திய அரசாங்கம் தற்போது ஈடுபட்டுள்ளது. 

நாட்டில் புதிய கல்விக்கொள்கையை வகுக்கும் முயற்சியில் மத்திய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உத்தரவின்பேரில், மத்திய செகண்டரி கல்வி வாரியம் தனது இணையதளத்தில் ஒரு பக்கத்தை உருவாக்கியுள்ளது. அதில், இந்த கல்விக்கொள்கையை உருவாக்க மாணவர்களின் கருத்துக்களை கேட்கும் வகையில், 28 கேள்விகள் இடம்பெற்றுள்ளன. இந்த கேள்விகளுக்கு 6–ம் வகுப்பில் இருந்து 12–ம் வகுப்பு மாணவர்கள்வரை பதில் அளிக்கலாம். அவர்கள் பெயர் விவரங்களெல்லாம் ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கும். இப்போதைய கல்வித்திட்டம் எப்படி இருக்கிறது?, ஆசிரியர்களோடு உங்கள் அனுபவம் எப்படி இருக்கிறது?, கல்வி சூழ்நிலை, பள்ளிக்கூட சூழ்நிலை எப்படி இருக்கிறது?, பாடத்திட்டம் முழுவதையும் ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்து விடுகிறார்களா?, மாணவர்களின் பணிகளை மதிப்பிடுவதில் ஆசிரியர்கள் நியாயமாக நடந்துகொள்கிறார்களா?, அன்றாட வாழ்க்கையில் உங்கள் கல்வி எந்த அளவுக்கு துணை நிற்கிறது?, பிரச்சினைகளை தீர்க்க உதவுகிறதா?, மாணவர்களை ஆசிரியர்கள் எப்படி நடத்துகிறார்கள்?, பயிற்றுமொழி என்னவாக இருக்க வேண்டும்?, எத்தகைய பாடத்திட்டம் வேண்டும்? போன்ற பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க மாணவர்களை ஊக்குவிக்கவேண்டும்.

தங்களுக்கு எத்தகைய கல்வி வேண்டும் என்று மாணவர்களிடம் கருத்துக்கேட்பது நல்லதுதான். அந்த வகையில், இது வரவேற்கப்படவேண்டிய ஒன்றுதான். ஆனால், இன்றைய சூழ்நிலையில், அவர்களுக்கு எத்தகைய கல்வி வேண்டும் என்பதை அவர்களால் மட்டும் தீர்மானிக்க முடியாது. அதற்கேற்ப வயதும், அனுபவமும், ஆற்றலும் நிச்சயமாக இளம் வயதில் இருக்கமுடியாது. பெற்றோர் என்ன எதிர்பார்க்கிறார்கள்?, ஆசிரியர்கள் என்ன தெரிவிக்கிறார்கள்?, கல்வியாளர்களின் கருத்துக்கள் என்ன?, ஒழுக்கநெறி சிந்தனையாளர்கள் என்ன சொல்கிறார்கள்?, வேலைவாய்ப்பு அளிக்க காத்து இருக்கும் தொழில் அதிபர்களின் எதிர்பார்ப்புகள் என்ன?, கல்வித்துறை அதிகாரிகளின் கணிப்பு என்ன? என்பது போன்ற விவரங்களையும் திரட்டி, அரசாங்கத்தின் கொள்கைகளையும் இணைத்து, மாநில அரசுகளின் ஒத்துழைப்போடு புதிய கல்விக்கொள்கையை வகுக்கவேண்டும். கல்வி என்பது மாணவர்களுக்கு கல்லாக இல்லாமல், கற்கண்டாக இனிக்கவேண்டும்.

நன்றி :- 09-10-2015, தினத்தந்தி தலையங்கம்

0 comments:

Post a Comment

Kindly post a comment.