Wednesday, October 7, 2015

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் பேட்டி

இணையத்தால் உலகை ஒன்றிணைப்போம்!-
பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தையொட்டித் தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஊடகவியலாளர்களை ‘ஃபேஸ்புக்’ தலைமையகத்தில் சந்தித்தார் மார்க் ஸக்கர்பெர்க். உற்சாகமான உரையாடல் விவாதங்களைத் தாண்டி, அவருடைய கனவுகளிலும் பயணமானது.
மக்கள் பயன்படுத்தும் ஒரு சமூக ஊடகத் தளமாக மட்டும் அல்லாமல், மரபார்ந்த ஊடகங்கள் செய்தி அறிவிப்புகளை வழங்குவதற்கான தளமாகவும் உருவாகியிருக்கிறது ஃபேஸ் புக். எனினும், சரிபார்க்கப்படாத தகவல்களை, வதந்திகளைச் சமூக விரோத சக்திகள் பரப்புவதன் மூலம், சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த சமூக ஊடகம் பயன்படுத்தப்படுவதாக இந்தியாவில் கவலை நிலவுகிறது. இப்படியான சமயங்களில், விஷத் தகவல்களைத் தடுப்பதில் சமூக ஊடக நிறுவனங்கள் உடனடி நடவடிக்கைகளை எடுப்பதில்லை என்று இந்திய அரசு நினைக்கிறது. அதனாலேயே அந்தச் சமயங்களில் ஒட்டுமொத்தமாக இணையத்தையே முடக்க வேண்டியிருக்கிறது என்றும் இந்திய அரசு சொல்கிறது. இதற்கு உங்கள் பதில் என்ன?

ஃபேஸ்புக்கில் எந்த விதமான பயங்கரவாத கருத்துகளையும் நாங்கள் விரும்புவதில்லை. ஒவ்வொரு நாளும் எக்கச்சக்கமான விஷயங்களை நாங்களே நேரடியாகக் கண்காணிக்க வேண்டியிருக்கிறது. ஆனால், நாங்கள் செய்வது என்னவென்றால், மக்கள் எதை முக்கியமான விஷயமாகக் கருதுகிறார்களோ அதைப் பற்றி எங்களுக்குத் தகவல் தெரிவிக்கும் வகையிலான வசதிகளுக்காக முதலீடு செய்வதுதான். பகிர்ந்துகொள்ளப்படும் விஷயங்களில் கவனிக்க வேண்டியவை என்று ஃப்ளாக் (flag) செய்யப்படுவனவற்றைக் கவனித்துக்கொள்ள எங்களிடம் ஒரு பெரிய குழுவே இருக்கிறது. அத்துடன், உலகம் முழுவதும் உள்ள சட்ட அமலாக்க அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம். பல்வேறு நாடுகளிலிருந்து அந்தந்த அரசியல் சட்டத்தின் அடிப்படையில், சட்டரீதியான உதவி கோரி வரும் கோரிக்கைகள் என்று நாங்கள் கருதுவனவற்றைப் பரிசீலிக்கவே செய்கிறோம்.

நாங்கள் செய்ய வேண்டியவை அதிகம். அதேசமயம், 150 கோடிப் பேர் கொண்ட ஃபேஸ்புக்கில் வன்முறை, பயங்கரவாதம் தொடர்பான உள்ளடக்கம் கொண்ட பதிவுகளை மக்கள் பதிவிடாத வகையில் நடவடிக்கை எடுப்பதற்காக நிறைய முதலீடு செய்ய வேண்டியிருக்கிறது. அதற்குத்தான் நாங்கள் முயற்சி செய்துவருகிறோம்.

இந்தியா போன்ற நாடுகளில், மரபார்ந்த இணையம் சென்றடையாத சாதனங்களையும் ஃபேஸ்புக் சென்றடைகிறது; 50 டாலருக்குக் கிடைக்கும் சாதனங்களையும் ஃபேஸ்புக் சென்றடைகிறது. ஆனால், அவற்றில் பொதுவாக வெப்-ஆப் செயல்படாது. இந்தச் சூழலில், இன்டர்நெட்.ஆர்க் போன்ற திட்டங்களின் அடிப்படையில், நீங்கள் இணையான இணையம் அல்லது இணையத்துக்கு இணையான அமைப்பு என்று உங்களைக் கருதுகிறீர்களா?

இல்லவே இல்லை. நாங்கள் இணையத்தைப் பரப்ப விரும்புகிறோம்; இணையம் மொத்தத்தையும்! அதைச் செய்வதற்காக, மக்களைச் சென்றடையும் வகையில் இன்டர்நெட்.ஆர்க் திட்டத்தின் பகுதியாகப் பல விஷயங்களைச் செய்கிறோம். புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம். ‘ஃப்ரீ பேசிக்ஸ்’ போன்ற, புதிய வணிக மாதிரிகளை அறிமுகப்படுத்துகிறோம். எல்லோரிடமும் 3ஜியோ அல்லது 4ஜியோ இருப்பதில்லை. பலரிடம் 2ஜிதான் இருக்கும். அதன் வேகம் குறைவு. எனவே, நாங்கள் ‘ஃபேஸ்புக் லைட்’ எனும் சேவையை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். குறைந்த டேட்டாதான் இதற்குச் செலவாகும். எனவே, குறைந்த வேகம் கொண்ட இணைப்புகளிலும் இதைப் பயன்படுத்த முடியும். சுமார் 150 கோடி மக்களை, பெரும்பாலான இணையச் சேவைகள் சென்றடைவதில்லை. எனினும், ஒவ்வொருவரையும் இணையம் சென்றடைய வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். அதற்கு, தொலைதூரத்தில் இருக்கும் மக்களுக்கு இணையம் சென்றடையும் வகையில், பலவீனமான இணைப்பைக் கொண்டிருக்கும் கிராமங்களையும், (பொருளாதார வசதி இல்லாததால்) மரபார்ந்த இணைய கட்டமைப்புகள் குறைவாக உள்ள பகுதிகளையும் சென்றடைவதற்கான பணிகளைச் செய்ய வேண்டும். உண்மை என்னவென்றால், பல நிறுவனங்களின் இணைய சேவைகள் குறிப்பிட்ட சில மக்களைச் சென்றடைவதில்லை. எனவே, அவர்களைச் சென்றடைவதற்கு, இணையத் தொடர்பு வசதியை மேம்படுத்த ஆளில்லா விமானங்கள் போன்ற சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும். விரிவான இந்தத் திட்டங்கள் தொடர்பாக நாங்கள் செய்துவரும் விஷயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும்.

இணைய சமவாய்ப்பு, இணைய நிர்வாகம் மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பான பல விஷயங்கள் இந்தியாவில் விவாதிக்கப்படுகின்றன. ஃபேஸ்புக்கின் எதிர்காலம் தொடர்பான உங்கள் சிந்தனைகளில் இதுபோன்ற விஷயங்கள் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன?
இணையப் பயன்பாட்டைப் பரவலாக்குதல் மற்றும் இணையச் சமவாய்ப்பைப் பொறுத்தவரை, அவை தொடர்பான கட்டுப்பாடுகளைப் பல நாடுகள் கொண்டுவந்திருக்கின்றன. இணையத்தைப் பயன்படுத்துவது என்பது உலக அளவிலான பிரச்சினை. இந்தியாவில் பலருக்கு இணைய வசதி இல்லை. 10 பேர் இணையத்துடன் தொடர்புகொண்டிருக்கிறார்கள் என்றால், ஒருவருக்கு வேலை கிடைக்கும்; ஒருவர் ஏழ்மையிலிருந்து விடுபடுவார் என்பதை அறிந்திருக்கிறோம். எனவே, இந்தியாவில் இணையத் தொடர்பை உறுதிசெய்வது முக்கியமான விஷயம். எனவே, இணையச் சமவாய்ப்பு, பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டின் புதிய மாதிரிகளை உருவாக்கும் பணி ஆகிய இந்த இரண்டு விஷயங்களையும் கையாளும் வகையிலான கட்டுப்பாட்டு அமைப்பை உறுதிசெய்வது அவசியம். அதேசமயம், இந்த விவாதத்தைச் சரியாக அமைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஏனெனில், இணைய வசதி இல்லாத ஏராளமான மக்கள் இருக்கும் நாடு இந்தியா. இந்த மக்களுக்கு இணைய வசதி வழங்குவதன் மூலம், உலகத்துக்குப் பலன் கிடைக்கச் செய்ய முடியும்.

இணையச் சமவாய்ப்பு தொடர்பாக எழும் குரல்கள், உங்கள் தயாரிப்புகளின் மேம்பாட்டின் அடிப்படையில், இணைய பயன்பாட்டுப் பிரச்சினையைப் பற்றி நீங்கள் பேச விரும்புவதைப் பாதிக்கிறதா?

ஆமாம், ‘ஃப்ரீ பேசிக்ஸ்’ திட்டத்தை உலகம் முழுவதும் கொண்டுவர முடியும் (ஏற்கெனவே 20 நாடுகளில் இது தொடங்கப்பட்டிருக்கிறது). ஆனால், இந்தியாவில் இணையச் சமவாய்ப்பு தொடர்பான விவாதத்தைச் சரியாக அமைத்துக்கொள்ளவில்லை என்றால், இந்தச் சமநிலை சரியாக இல்லை என்றால், எனது அனுமானத்தின்படி அது உலகுக்கே பின்னடைவு தந்துவிடும்.
நமக்குத் தாக்கம் தரும் கதை, இந்திய கணித மேதை னிவாச ராமானுஜனின் கதை. மிகவும் திறமைசாலியான அவருக்கு சிறந்த அடிப்படைக் கல்வி அமையவில்லை. ஆனால், அவரிடம் ஒரு கணிதப் பாடப் புத்தகம் இருந்தது. அதை வைத்துக்கொண்டு நவீன கணிதத்தையே அவரால் மறு உருவாக்கம் செய்ய முடிந்தது. அவரால் மொத்த இணையத்தையும் பயன்படுத்த முடிந்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்வோம். புத்தகமே கிடைக்காத ராமானுஜன்கள் நம்மிடம் எத்தனை பேர் இருக்கிறார்கள், அவர்களிடம் இணைய வசதியை நாம் கொடுத்தால் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதுடன் ஒட்டுமொத்த உலகுக்கும் மிகச் சிறந்த பங்களிப்புகளை வழங்க முடியும் அல்லவா! எனவேதான், இந்தியாவில் இந்த விவாதம் சரியாக அமைக்கப்பட வேண்டும் என்பது முக்கியம். இந்தியாவில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகுக்கும் இது மிக முக்கியம்.

பேஸ்புக் நிறுவனம் பெரிய அளவிலும் சிறப்பாகவும் வளர்ந்துவரும் நிலையில், சந்தையுலகில் அதைப் பற்றி முரண்பாடான கருத்துகள் நிலவுகின்றன. விமர்சகர்களுக்கு உங்கள் பதில் என்ன?

எங்கள் பார்வையில், நாங்கள் இன்னமும் சிறிய நிறுவனம்தான் என்றாலும், கிட்டத்தட்ட வெற்றிகரமாகச் செயல்படும் எல்லா நிறுவனங்களும் நீங்கள் குறிப்பிடும் பிரச்சினையை எதிர்கொள்கின்றன. நான் ஃபேஸ்புக்கைத் தொடங்கிய காலகட்டம் அது. கணினி அறிவியல் பாடங்களை என் நண்பனுடன் இணைந்துசெய்வது வழக்கம். அவன் இப்போது ஃபேஸ்புக் நிறுவனத்தில் இருக்கிறான். ஹார்வர்டு பள்ளியில் இதன் முதல் படிவத்தைத் தொடங்கிய பின்னர், ஒருநாள் இரவு பீட்ஸா சாப்பிட வெளியில் சென்றிருந்தோம். தொழில்நுட்பத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று பேசிக்கொண்டோம். தொழில்நுட்பத்தின் எதிர்காலம் தொடர்பாக நினைத்துக்கொண்டிருந்த நாங்கள், வெறுமனே எங்களைப் பற்றி மட்டும் பேசிக்கொண்டிருக்கவில்லை. வேறு ஏதோ ஒரு நிறுவனம்தான், உலகை இணைக்கும் பணியைச் செய்யப்போகிறது என்று நாங்கள் நினைத்துக்கொண்டிருந்தோம். ஆயிரக்கணக்கான ஊழியர்களைக் கொண்ட கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள்தான் அதைச் செய்யும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால், மக்களை இணைக்கும் விஷயத்தில் நாங்கள் செயலில் இறங்கக் காரணம், அதைப் பற்றிய தொடர் அக்கறையுடன் நாங்கள் மட்டுமே இருந்தோம் என்பதுதான்.
‘சமூக ஊடக’த்தை உருவாக்கும் வாய்ப்பு மற்ற நிறுவனங்களிடம் இருந்தது. ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை. நாங்கள் கல்லூரி மாணவர்களாக இருந்தாலும் அதில் இறங்கிச் செய்து காட்டினோம். அந்த மனப்பான்மையை இன்றும் உயிர்ப்புடன் வைத்திருக்க விரும்புகிறோம்.
உலகத்தில் இருக்கும் ஒவ்வொருவரையும் இணையத்துக்குள் வர வைக்க வேண்டும் என்பதுதான் அடுத்த இலக்கு. அவர்களை இணையத்துக்கு அழைத்து வராமல், ஒவ்வொருவரையும் இணைக்கும் பணியை எங்களால் பூர்த்திசெய்ய முடியாது. நாங்கள் அதைச் செய்து முடிக்க வேண்டும் என்றே நினைக் கிறோம்.

நாங்கள் பெரிய நிறுவனம் போலத் தோன்றலாம். ஆனால், எங்கள் மனதில் அப்படி ஒரு எண்ணம் எங்களுக்கு இல்லை. இணைய தொடர்பு விஷயத்தை மேற்கொள்ளத் தேவையான வளங்கள் பிற நிறுவனங்களிடமும் இருப்பது எங்களுக்குத் தெரியும். எனினும், அதை நாங்களும் செய்ய விரும்புகிறோம்.

அனைவருக்கும் இணையம் எனும் நோக்கத்துடன், இந்தியாவில் நிதியுதவி போன்ற விஷயங்களுக்காக முதலீடு செய்கிறீர்களா?

ஆமாம், நிச்சயமாக. ஃபேஸ்புக்கின் மூலம் ஏராளமான செல்வத்தை ஈட்டியிருக்கிறேன். எனவே, சமுதாயத்துக்கு அதைத் திருப்பிக் கொடுப்பது எனது கடமை என்பதை உணர்கிறேன்!

© ‘தி இந்து’ (ஆங்கிலம்)

தமிழில்: வெ. சந்திரமோகன்

நன்றி :-தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.