Friday, October 16, 2015

இந்தியாவிலேயே முதல் முறை :சென்னை அரசு பொது மருத்துவமனையில் எலும்பு முறிவுக்கு ரத்தமில்லா அறுவைச் சிகிச்சை:



இந்தியாவிலேயே முதல் முறையாக எலும்பு முறிவுக்கு ரத்தமில்லா சிகிச்சை அளிப்பதற்கு பிரத்யேக அறுவைச் சிகிச்சை அரங்கம் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

மருத்துவமனையின் முடநீக்கியல் துறையில் இந்த அரங்கம் திறக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செவ்வாய்க்கிழமை இந்த அரங்கைத் திறந்துவைத்தார். 

தென்னிந்தியாவிலே முடநீக்கியல் துறையில் இந்த மருத்துவமனைதான் அதிக நோயாளிகளைக் கையாள்கிறது. நாள் ஒன்றுக்கு சுமார் 750 புற நோயாளிகள் இந்த மருத்துவமனைக்கு வருகின்றனர். 

 முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 20 லட்சம் செலவில் இந்த அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து முடநீக்கியல் மையத்தின் இயக்குநர் டாக்டர் தீன் முகமது இஸ்மாயில் கூறியதாவது:

இந்த அறுவைச் சிகிச்சை அரங்கத்தில் எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் ஊடுகதிர் கருவியைக் கொண்டு கம்பி பொருத்தி சிகிச்சை செய்யப்படும். இதன் மூலம், ரத்த இழப்பு ஏற்படாமல் எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளிக்க முடியும். 

மேலும், உள்வளைந்த கால்களுக்கான நுண்துளை அறுவைச் சிகிச்சை, மூட்டுப் பகுதியில் நுண்துளையின் மூலம் அறுவைச் சிகிச்சை உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும். ரத்த இழப்பில்லாத, நுண்துளை சிகிச்சைக்கு தனி அறுவைச் சிகிச்சை அரங்கம் அமைந்திருப்பது இந்தியாவிலேயே முதல்முறையாகும்.
 நாள் ஒன்றுக்கு சுமார் பத்து நோயாளிகளுக்கு அறுவைச் சிகிச்சை செய்ய முடியும். அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட தினமே நோயாளிகள் வீடு திரும்ப முடியும் என்று அவர் தெரிவித்தார்.

நன்றி :- தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.