Saturday, October 10, 2015

11 அணு விஞ்ஞானிகள் 4 ஆண்டுகள் இடைவெளியில் மர்மச் சாவு: இந்திய அணு சக்தித் துறை தகவல்

Image result for இந்திய அணுசக்தித் துறை

கடந்த 2009-13ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டங்களில் 11 அணு விஞ்ஞானிகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர் என்று இந்திய அணு சக்தித் துறை தெரிவித்தது.

 இதுகுறித்து ஹரியாணாவைச் சேர்ந்த ராகுல் ஷெராவத் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேட்டிருந்த கேள்விகளுக்கு இந்திய அணு சக்தித் துறை கடந்த 21ஆம் தேதி தெரிவித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது

 கடந்த 2009-13ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட கால கட்டங்களில் அணு சக்தித் துறையின் ஆய்வகங்கள், ஆராய்ச்சி மையங்களில் பணியாற்றிய 8 விஞ்ஞானிகள், பொறியாளர்கள் ஆகியோர் நீரில் மூழ்கியோ அல்லது தூக்கிட்டுக் கொண்டோ அல்லது ஆய்வகத்தில் உள்ள ரசாயனங்கள் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாகவோ பலியாகியுள்ளனர்.

 இதே கால கட்டங்களில் அணு சக்திக் கழகத்தைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். மேலும், மும்பை அருகேயுள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிவந்த 2 விஞ்ஞானிகள் கடந்த 2010ஆம் ஆண்டு அவர்களது வீடுகளில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.

 அதற்கடுத்ததாக, கடந்த 2012ஆம் ஆண்டு ரவட்பாதாவில் பணியாற்றிவந்த ஒரு விஞ்ஞானி அவரது வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.


 அதனைத் தொடர்ந்து, மும்பையில் ஒரு விஞ்ஞானி அவரது வீட்டில் கழுத்து நெறிக்கப்பட்டு கொலையுண்டு கிடந்தார். மேலும், ராஜா ராமண்ணா நவீன தொழில்நுட்ப மையத்தில் பணியாற்றிவந்த விஞ்ஞானி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 சென்னை அருகேயுள்ள கல்பாக்கம் அணு சக்தி மையத்தில் பணியாற்றிவந்த விஞ்ஞானி ஒருவர் கடந்த 2013ஆம் ஆண்டு கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், மும்பையில் உள்ள அணு விஞ்ஞானி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

 இறுதியாக, கர்நாடக மாநிலம் கார்வாரில் உள்ள காளி ஆற்றில் குதித்து அணு விஞ்ஞானி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்று அணு சக்தித் துறை தெரிவித்துள்ளது.

நன்றீ ;- தினமணி
 
 

0 comments:

Post a Comment

Kindly post a comment.