Wednesday, April 15, 2015

தமிழ்நாடு : தமிழ் வளர்ச்சித் துறை கொண்டாடிய தமிழ்ப் புத்தாண்டு விழா !

Displaying IMG_20150414_101121.jpg
திரு.முத்துலிங்கம் தலைமையில் கவியரங்கம்
Displaying IMG_20150414_113240.jpg
”றெக்கை கட்டி நீந்துபவர்கள்’ நூல் ஆசிரியர் பாரதிபாலன் பரிசு பெறும் காட்சி
Displaying IMG_20150414_113055.jpg
பரிசினைப் பெற்றவர் சரியானவகையில் படமெடுக்கப்படாத நிலையில்
அமைச்சர் கே.சி.வீரமணி அவரை மீண்டும் அழைத்திடும் காட்சி 
Displaying IMG_20150414_112505.jpg
திருக்குறள்
ஒப்புவிக்கும்
போட்டியில்
பரிசு பெற்ற
ஓர் மாணாக்கர்
Displaying IMG_20150414_112934.jpg
சென்னைப் பல்கலைக் கழக நிருவாகக் கட்டடக் கூட்ட அரங்கம்
சென்னைப் பல்கலைக்கழக நிருவாகக் கட்டடக் கூட்டஅரங்கம் நிரம்பி வழிந்தது. அமர்வதற்கு மட்டுமல்ல; நிற்பதற்குக்கூட இடமில்லை. 1330 திருக்குறளையும் ஒப்புவித்த மாணாக்கர், பேச்சுப்போட்டி – கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி – கல்லூரி மாணாக்கர் ( மாணக்கர் என்பது இரு பாலரையும் குறிக்கும் பொதுச்சொல் ) , சிறந்த நூல்களை எழுதியமைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளிகள், அந்தப் படைப்பாளிகளின் எழுத்துக்களைப் பிரசுரித்த பதிப்பகங்கள், அவர்களது பெற்றோர் சுற்றமும் நட்புமென என தமிழகம் முழுவதிலிருந்தும் தமிழினப்பற்றாளர்கள் வருகைதந்திருந்தனர். விடுமுறைநாளில் வருகைதந்த பெருந்திரள் கூட்டம் கண்டு எனதுளம் களிபேருவகை எய்தியது. ]
” இதுபோன்றதொரு கூட்டம் நடக்கிறது; நமக்குத் தெரிந்தோர் பலர் பரிசுகளைப் பெறுகின்றனர்; அவசியம் பங்கேற்கவேண்டும்;” எனவுரைத்த பன்முகத் திறனாளி வையவன் அவர்களுக்கு அகத்துள் பன்முறையும், கைப்பேசி வாயிலாக ஒரே ஒரு முறையும் நன்றி கூறினேன்.
தமிழக அரசின் மேனாள் கவிஞர் முத்துலிங்கம் தலைமையில் கவியரங்கம் நிகழ்ந்தது. கவிதாசன், சினேகன், ரேகா,  பா.கிருஷ்ணன், தங்க.காமராசு, மணிகண்டன்,  ஆகிய கவிஞர்கள் பங்கேற்றனர். ”தாயே ! தமிழே!” என்பது கவிஞர்களுக்குத் தரப்பட்ட தலைப்பு. கவிபாடியோர், ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்லர். ஒவ்வொரு வரியிலும், வார்த்தையிலும் அவரவர் திறமை பளிச்சிட்டது.
ஆனால், பார்வையாளர்களிடமிருந்து எழுந்த கரவொலி போதுமானதாக இல்லை. இது வருத்தம் தரும் தகவல். அந்நிய நாடுகளிலெல்லாம் ஒவ்வொருவரது நிகழ்ச்சிக்குப் பின்னும் அனைவரும் எழுந்துநின்று கரவொலி எழுப்புவர். கரவொலி தொடரும் நேரம் நிகழ்ச்சியின் சிறப்பிற்கேற்ப அதிகரித்துக்கொண்டே செல்லும். அப்படியொரு பழக்கம் நம்மிடையே இல்லை. நிகழ்ச்சியின் தன்மைக்கேற்ப கைதட்டிப் பாராட்டக் கூட முடியாதோரின் தமிழினச் சமூகப் பற்றினை எப்படி நொந்து கொள்வது ?
பரிசளிப்பு விழாவிற்கு வரவேற்புரை வழங்கியவர் , அரசுச் செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை மூ.இராசாராம்,  சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் இரா. தாண்டவன் முன்னிலை வகித்தார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி சிறப்புரையாற்றி பரிசுகள் வழங்கினார். அமைச்சர் ஆற்றியவுரை தெளிந்த நீரோடைபோன்று ஆரவாரமற்ற தன்மையும், இனிமையும் கொண்டிருந்தது. அவர் மைக் கிடைத்ததென்று தனக்குத் தெரிந்ததையெல்லாம் பேசவில்லை. இம்மேடைக்கு எது பொருத்தமோ அவற்றை மட்டுமே பேசினார். என்ன பேச வேண்டும் என்பதைத் தீர்மானித்து எழுதி எடுத்துவந்து பார்த்து வாசித்தமை மிகச் சிறப்பாக அமைந்தது.
சென்னை ஆழ்வார்ப்பேட்டை கஸ்தூரிரங்கன் சாலையில் அமைந்துள்ளது, சோவியத் தூதரகம். அங்கேயும் ஓர் சிறப்பான அரங்கம் உண்டு. கூட்டங்களும் அடிக்கடி நடக்கும். முன்னறிவிப்புடன் முயன்றால் இலக்கிய நிகழ்வுகளை இலவசமாகவே ஆங்கே நடத்திக்கொள்ளலாம். சோவியத் நண்பர்கள்  பங்கேற்கும் விழாக்களில் எல்லாம் இருவராகவே மேடைக்கு வருவர். பேச்சுக்கள் முன்னதாகவே செவ்வனே தயாரிக்கப் பட்டிருக்கும். ஒருவர்  தங்கள் தாய்மொழியான ருஷ்யனில் எழுதி எடுத்து வந்ததைப் பார்த்துப் படிப்பார். உரிய இடைவெளியுடன் பிறிதொருவர் அதன் ஆங்கில மொழியாக்கத்தைப் படிப்பார். அவர்களது தாய்நாட்டுப் பற்று போற்றத்தக்கது. அதே போன்று பொருளார்ந்த கருத்துச் செறிவுமிகு உரையினைத் தயாரித்து வந்து நல்கிய அமைச்சரை எத்தனைமுறை பாராட்டினாலும் அது தகுதியுடைத்ததே ஆகும். தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் / இலக்கியவாதிகள் அனைவரும் இம்முறையைப் பின்பற்றினால் எல்லோருக்கும் காலமும் நேரமும் மிச்சமாகும். மேடையில் பட்டிமன்றம் நடத்திக்கொண்டு இடையிடையே கொச்சையான / அர்த்தமற்ற பேச்சுக்கள் மூலம் கலகலப்பூட்டுவதே நடைமுறையாகிக் கேலிக்கூத்தாகி வருகின்றது மேடைப் பிரசங்கம் !
இந்நிலையில் அமைச்சரின் பேச்சு பெரிதும் கவர்ந்தது. பாராட்டுவதுதானே சரியான வழி. சொல்வதைச் செயலிலும் காட்டும் வாய்ப்பும் எதிர்பாராமல் கிடைத்தது. “பேச்சின் சிறப்பை எடுத்துரைத்தபின்,   ஒரு கோரிக்கையையும் முன்வைக்கும் வாய்ப்புக் கிட்டியது..
தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர் மட்டுமன்றி, பிறமொழியினருக்கும் 3 முதல் 6 வயதுக் குழந்தைகளுக்கு 30 நாட்களில் தமிழைப் பேச வைப்பதோடு மட்டுமன்றி, செய்தித் தாள்கள் படிக்குமளவிற்குக் கற்றுத்தர இயலும் என்ற பொள்ளாச்சி நசனின் ( thamizam.net – காண்க ) கருத்தையும் எடுத்துரைத்தேன். விரைந்து மண்டபத்தை விட்டுச் சென்று கொண்டிருந்த அமைச்சர், நின்று நிதானமாகக் கேட்டுக் கொண்டு, உதவியாளரிடம் எனது தொடர்பு எண்ணையும், முகவரியையும் குறித்துக்கொள்ளச் செய்தார். அவரின் வழிகாட்டுதலால் விருதுநகர் / மதுரை தமிழ் வளர்ச்சித்துறையின் உதவி இயக்குநர், வெ.குமாரிடம் தகவல்களைத் தர முடிந்தது.. அமைதியாகவும், பொறுமையுடனும் விபரங்களைக் கேட்டறிந்து உதவி இயக்குநர் குறித்துக்கொண்டார். tamilspeak.com , thamizham.net – குறித்தும் கூற முடிந்தது..
திருக்குறள்  1330-யும் ஒப்புவித்தோருக்கு தலா ரூ.10,000/- பரிசாகக் கிடைத்தது. பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் வென்றோருக்கு முதல் பரிசு 15,000/-, இரண்டாம் பரிசு 12,000/- மூன்றாம் பரிசு 10,000 என வழங்கப்பட்டன.  தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த நூலாசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.30,000/- வீதம் கிடைத்தது. சிறந்த பதிப்பகங்களுக்கு ரூ.10,000/- வீதம் பரிசுத் தொகை கிடைத்தது. அனைத்துமே ரொக்கமாக காசோலைமூலம் வழங்கியது சிறப்பானதாக இருந்தது. இவ்வகையில் 171 பேருக்குப் வழங்கப்பட்டன.
அனைத்து வகைப் பரிசுகளையும் இரு மடங்காக்கினால் சாலவும் நன்று. உரியோர் இதற்கான முயற்சிகளில் ஈடுபடுவர்; அடுத்த ஆண்டு பரிசுத்தொகை இரட்டிப்பாகும் என்று உறுதியாக எதிர்பார்ப்போம்.
”நாடு போற்றும் நான்காண்டு ஆண்டு ஆட்சியில் விஞ்சி நிற்பது தமிழ் வளர்ச்சியா ? தமிழக வளர்ச்சியா ? என்பது அன்று நிகழ்ந்த பட்டிமன்றத் தலைப்பாகும். நடுவராகத் திகழ்ந்தவர் கு.ஞானசம்பந்தன்.
நல்லதோர் நாளில் நல்லதோர் விழாவில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தமைக்குக் காரணமானோர் எல்லோருக்கும் நன்றி .

Displaying IMG_20150410_214809.jpg
சங்கர இராமசாமி ,  அவர்தம் தந்தையார்  கோ.சங்கரநாராயணன்
சங்கரன்கோவில் நூல் ஆசிரியர் ப.அருணகிரி

0 comments:

Post a Comment

Kindly post a comment.