Thursday, April 9, 2015

2015 : சென்னை புத்தகத் திருவிழா ஏப்.13-இல் ஆரம்பம் !


சென்னை புத்தக சங்கமம் எனும் புத்தகக் கண்காட்சி ஏப்ரல் 13-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற உள்ளது.
நேஷனல் புக் டிரஸ்ட்- இந்தியா, பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனம் ஆகியவை இணைந்து இதற்கு ஏற்பாடு செய்துள்ளன.
இது குறித்து சென்னை புத்தக சங்கம ஒருங்கிணைப்பாளர்கள் வி.அன்புராஜ், அ.புகழேந்தி, கோ.ஒளிவண்ணன் உள்ளிட்டோர் சென்னையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
இளம் தலைமுறையினரிடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நடைபெற உள்ள இந்த புத்தகக் கண்காட்சி வார நாள்களில் பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடைபெறும். இந்த கண்காட்சியுடன், பல்வேறு பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் கலந்துகொள்ளும் சொற்பொழிவுகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.
சிறுவர்களுக்கான போட்டிகள்:இது தவிர, 5 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான நினைவாற்றல், பிழையின்றி தமிழ் எழுதுதல், அடிப்படை புகைப்படக்கலை உள்ளிட்ட போட்டிகள் ஏப்ரல் 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறும்.
இதில் பங்கேற்க விரும்புவோர் ஏப்ரல் 12-ஆம் தேதிக்குள் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும்.
10 சதவீத கழிவு: கண்காட்சியில் இடம்பெறும் அனைத்துத் துறை சார்ந்த புத்தகங்களும் 10 சதவீத கழிவு விலையிலும், உலக புத்தக நாளான ஏப்ரல் 23-ஆம் தேதி 15 சதவீத கழிவு விலையிலும் புத்தகங்கள் கிடைக்கும்.
இலவச அனுமதி: புத்தகக் கண்காட்சியை காண வரும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், தங்கள் அடையாள அட்டையை காண்பித்தால் இலவச அனுமதி அளிக்கப்படும். மற்றவர்களுக்கு நுழைவுக் கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படும்.
மேலும், வாசகர்கள் பயன்படுத்திய நூல்களை கிராமப் புற நூலகங்களுக்கு வழங்க "புத்தக வங்கி' திட்டமும் கண்காட்சியில் உள்ளது.
இதில், புத்தகங்களை நன்கொடையாக வழங்குபவர்களுக்கு, அவர்கள் புதிய புத்தகம் வாங்கும்போது சிறப்பு கழிவு அளிக்கப்படும். புத்தகக் கண்காட்சி குறித்த மேலும் விவரங்களை
 www.chennaiputhagasangamam.com 
என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் .
நன்றி :- தினமணி


0 comments:

Post a Comment

Kindly post a comment.