Monday, January 12, 2015

மாதொருபாகன் - நாவலுக்கு பெருமாள் முருகன் எழுதியுள்ள முன்னுரை

மாதொருபாகன்

என்னுடைய ஐந்தாவது நாவல் 'மாதொருபாகன்.' காலச்சுவடு பதிப்பக வெளியீடு. 07.01.11 வெள்ளியன்று மாலை ஆறு மணிக்குச் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ஈரோடு மாவட்ட முன்னாள் ஆட்சியரும் தற்போது மகளிர் மேம்பாட்டு ஆணையராக உள்ளவருமான திரு.த.உதயச்சந்திரன் அவர்கள் வெளியிடுகின்றார். என் நாவல்களின் தீவிர வாசகர் அவர். 'நிழல் முற்றம்' என்னும் என் நாவல் அவருக்கு மிகவும் பிடித்தமானது எனப் பல இடங்களில் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். அந்த அடிப்படையில் அவரை இந்நாவலை வெளியிட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டேன். 

இந்நாவலைப் பற்றி நானே சொல்வது சரியல்ல. இதன் உருவாக்கம் குறித்துச் சிறு முன்னுரை ஒன்று எழுதியுள்ளேன். அது இங்கே.

ரகசிய ஊற்றுக்களில் ஒன்று

'மாதொருபாகன்' என்னும் பெயரைக் கேட்டதும் நண்பர் ஒருவர் 'சைவ நெடியடிக்கும் தலைப்பு' என்றார். உண்மைதான். இது சிவனின் பெயர்களுள் ஒன்று. பெண்ணுக்குத் தம் இடப்பாகத்தைக் கொடுத்து ஆண் பாதி பெண் பாதி எனக் காட்சி தரும் அர்த்தநாரீசுவர வடிவத்தைக் குறிக்கும் பெயர். அர்த்தநாரீசுவரன், அம்மையப்பன், மங்கைபங்கன் ஆகிய பெயர்களும் இதே பொருளைத் தருவன. எனினும் எனக்குள் ஒருவித மயக்கத்தை உருவாக்கிய பெயர் 'மாதொருபாகன்.' பொதுவாக நாவலை முடித்த பிறகே தலைப்பை யோசிப்பது என் வழக்கம். ஆனால் இந்நாவலை எழுதத் தொடங்கும் முன்பே தலைப்பு எனக்குள் தோன்றிவிட்டது. எனினும் அதை ஒத்தி வைத்துவிட்டுப் பல தலைப்புகளை யோசித்துக் கொண்டிருந்தேன். எனினும் இதற்கு ஈடான நிறைவை வேறு எதுவும் தரவில்லை.


மாதொருபாகனாகச் சிவன் காட்சி தருவது திருச்செங்கோட்டில் மட்டுமே. இவ்வுருவம் இக்கோயிலில் அமைய ஊகத்திற்கு உட்பட்டும் ஊகத்திற்கு அப்பாற்பட்டும் காரணங்கள் இருக்கலாம். சைவம், கோயிலின் பூர்வ வரலாறு ஆகியவற்றைவிட மக்களிடையே கோயில் பெற்றிருக்கும் மிதமிஞ்சிய செல்வாக்கே என்னை ஈர்த்த விஷயம். வாழ்வின் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஏதோ ஒரு வடிவில் கோயில் முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது. மலை அடிவாரம் முதல் உச்சி வரை மக்கள் குறை தீர்க்க்கும் படையாகத் தெய்வங்கள் அணிவகுத்திருக்கின்றன. அந்தந்தச் சமயத்திற்கு ஏற்றாற்போலத் தெய்வங்களைத் தேர்வு செய்துகொள்ளலாம்.

திருச்செங்கோடு தொடர்பான என் தேடலில் எவ்வளவோ விஷயங்கள் கிடைத்தன. என் சிறுவயது முதல் அறிந்த ஊர், எனக்குள் ஊறிக் கிடக்கும் ஊர் என்னும் அகந்தையைத் தகர்த்துப் புதுப்புது அறிதல்களைக் கண்டடைந்தேன். இந்த ஊர் தனக்குள் வைத்திருந்த ரகசியமான ஊற்றுக்களில் ஒன்றை எனக்குக் காட்டிய தருணம் அற்புதமானது. சுற்று வட்டார ஊர்களில் 'சாமி குடுத்த பிள்ள' என்றும் 'சாமி கொழந்த' என்றும் குறிப்பிட்டுச் சொல்லப்படுபவர் பலருண்டு. அவர்கள் எல்லாம் சாமியிடம் வேண்டிப் பிறந்தவர்கள் என்பது நம்பிக்கை எனக் கருதியிருந்தேன். ஆனால் கோயில் திருவிழாவுக்கும் சாமி குழந்தைக்கும் இருக்கும் தொடர்பை எதேச்சையாகக் கண்டறிந்தேன். மனிதனின் ஆதி உணர்வுகளை இன்னும் பலவகையில் இந்தச் சமூகம் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அந்தத் திறப்பின் நூலைப் பிடித்தபடி சென்றபோது எனக்குள் சம்பவங்கள் காட்சியாகின. மனிதர்களின் முகங்கள் துலக்கமாயின. புழங்கித் திரிந்த இடங்களின் அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முந்தைய தோற்றம் நோக்கிப் போக முடிந்தது. எனக்குள் நாவலின் முழுவடிவம் உருக்கொண்ட போதும் நிதானமாகவே எழுதினேன். காரணம் இடையிடையே உலகியல் உள்ளிட்ட வெவ்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்ததுதான்.


எழுத்தைப் பொருத்தவரை படுசோம்பேறி நான். முடிந்த அளவு தள்ளிப் போட்டுக்கொண்டே இருப்பதும் ஏதோ ஒரு நெருக்கடியின் அழுத்தத்தால் பீறிட்டு வெளிப்படுவதும் என் இயல்பு. வேறு எந்தச் சிந்தனையும் பணியும் என்னைப் பற்றி இழுக்காத தனிமை வாய்க்குமானால் சில மாதங்களில் என்னால் எழுதிவிட முடியும். அதை உருவாக்கிக்கொள்ளப் பெரிதும் சிரமப்பட்டேன். இந்நாவலை எழுதி முடித்துக் கிட்டத்தட்ட ஓராண்டு முடிந்திருக்கும். ஆறப் போட்டு எடுத்துப் பார்ப்பது மிக நல்லது என்பது என் அனுபவம். கால இடைவெளி சில செதுக்கல்களுக்கும் சேர்க்கைகளுக்கும் உதவிற்று.


என் நாவல்கள் பற்றிய பரபரப்புக்களை உருவாக்குவதில் எப்போதும் நான் முனைவதில்லை. முந்தைய என் நாவல்கள் மிக மெதுவாகவே வாசகர்களிடம் சென்று சேர்ந்திருக்கின்றன. 'கங்கணம்' வெளியாகி மூன்றாண்டுகளுக்குப் பின் இப்போதுதான் பரவலாகக் கவனம் பெறுகின்றது. எனக்கும் ஒன்றும் அவசரமில்லை. இந்நாவல் தொடர்பாகவும் அதே மனநிலையில்தான் இருக்கின்றேன்.
                                                    -------------

1 comments:

  1. குறிஞ்சிநெட்டில் என் புத்தக அறிமுகக் கட்டுரை. பெருமாள்முருகனின் கங்கணம் நாவல்.

    /மறந்து போவது வயதாவதன் சாதாரண அறிகுறியாக இருப்பினும் அதன் உச்சத்தில் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றும் கலந்துவிடுகின்றன. நிறைவேறாத ஆசைகளைச் சுமந்துகொண்டிருக்கும் ஆழ்மனது, மூளை பலவீனப்படும் இந்த இறுதிக்காலத்தைப் பயன்படுத்திக்கொண்டு மேலே வந்து தன் ஆட்டத்தை ஆரம்பிக்கிறது. உச்சமான போதையின் பிடியிலும் இது நிகழ்வதைக் காணலாம்/

    http://kurinjinet.blogspot.sg/2015/05/10.html?m=1

    ReplyDelete

Kindly post a comment.