Monday, November 10, 2014

தற்கொலைகளை தடுப்போம்

 


உலகில் 40 வினாடிகளுக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். 

இதுதொடர்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதால் அதை படித்துவிட்டுத் தற்கொலைக்கு முயல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்' என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமுதாயத்தின் மிகப் பெரும் பிரச்னையாக தற்கொலை உருவெடுத்துள்ளது. அதை தடுத்து நிறுத்த வேண்டியது நம் அனைவரின் தார்மிகக் கடமையாகும். வருவாய் அதிகம் உள்ள நாடுகளில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. வட கொரியா, இந்தோனேசியா, நேபாளம் போன்ற நாடுகளில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.

பூச்சி மருந்து குடித்தும், தூக்கில் தொங்கியும் தற்கொலை செய்து கொள்வது உலக அளவில் அதிகமாக வளர்ந்து வருகிறது. நகர்ப்புறங்களில் பல அடுக்குமாடி கட்டடங்களில் மேலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

உலக அளவில் பெண்களைவிட ஆண்களே அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றனர். மன அழுத்தம் உள்பட பல்வேறு பிரச்னைகளால் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகமாகிறது. ஏழை நாடுகளில் மருத்துவ வசதி இல்லாத காரணத்தால் நோயால் பாதிக்கப்பட்டு அவதிபடுவோர் தற்கொலை செய்து கொள்கின்றனர். 

உலக அளவில் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை கயானாவில் அதிகமாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக வட கொரியாவில் 38.5 சதவீதமும், தென் கொரியாவில 28.9 சதவீதமும் தற்கொலை விகிதம் உள்ளன. இலங்கையில் 28.8 சதவீதமும் லிதுவேனியாவில் 28.2 சதவீதமும் நேபாளம் மற்றும் தான்சானியா நாடுகளில் 24.9 சதவீதமும் புரூண்டி நாட்டில் 23.1 சதவீதமும், இந்தியாவில் 21.1 சதவீதமும், தெற்கு சூடானில் 19.8 சதவீதமும், ரஷ்யா மற்றும் உகாண்டா நாடுகளில் 19.5 சதவீதமும் ஹங்கேரியில் 19.1 சதவீதமும் ஜப்பானில் 18.5 சதவீதமும் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இந்திய அளவில் தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. குடும்பப் பிரச்னை, வரதட்சணை கொடுமை, வருமானம் இன்மை, நோய், காதல் பிரச்னை எனப் பல்வேறு காரணங்களுக்காக இந்த முடிவை எடுக்கின்றனர். திருமணம் செய்து கொண்டவர்களே அதிக அளவில் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இத் தகவலை தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது.


ஒவ்வோர் ஆண்டும் பல மில்லியன் மக்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். சில தற்கொலைகள் விளையாட்டுத் தனமாகவும் நடைபெறுகின்றன. தற்கொலைக்குத் தூண்டுபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

தேர்வில் தோற்றுப் போவது, கணவன் மனைவியிடையே சண்டை, வறுமை, வேலையின்மை, கடுமையான நோய், வரதட்சணை கொடுமை, பிளவுபட்ட குடும்பங்கள், குடிப் பழக்கத்திற்கு அடிமை, நம்பிக்கையின்மை, அன்பில்லாமை ஆகியவையே தற்கொலைக்கான அடிப்படை காரணங்கள் ஆகும்.

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 90 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனராம். இவர்களில் பெரும்பான்மையோர் 15லிருந்து 29 வயதுக்கு உள்பட்டவர்களாம். இவர்களில் பெண்களைவிட ஆண்கள்தான் அதிகமாக இந்த நிலைக்குத் தள்ளப்படுகிறார்களாம். தற்கொலைக்கு முக்கியக் காரணம் தோல்வி, அவமானம், மன நோய், தீராத வியாதிகள், மனச் சோர்வு, மன அழுத்தம், ஏமாற்றம் நம்பிக்கைத் துரோகம், கடன் சுமை, கைவிடப்பட்ட உணர்வு, காதல் பிரச்னைகள், சரியான புரிதல் இன்மை, வாழ்வில் வெறுமை என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இவையாவும் நம் மனதை எதிர்மறை உணர்ச்சிகளுக்கு உள்ளாக்குகின்றன.

இளைஞர்களை அதிகம் பாதிக்கும் உணர்ச்சிகளில் ஒன்று காதல். இந்தக் காதலில் தோல்வி ஏற்படும்போது அவர்களால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலைதான் ஒரே வழி என எண்ணுகின்றனர். எனவே நம்பிக்கையூட்டும் எண்ணங்கள், நேர்மறை எண்ணங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

தனிமைப்பட்டு இருப்பவர்களிடம்தான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்னும் எண்ணம் ஏற்படுகிறது. குடும்பங்களிலும் நட்பு வட்டத்திலும் யாரையும் தனிமைப்படுத்தாமல் உறுதியான பிணைப்புடன், இணக்கமாக வாழும்போது தற்கொலைகளைப் பெருமளவில் தடுத்திட முடியும்.

தங்க. சங்கரபாண்டியன் , சென்னை.

நன்றி :- கருத்துக்களம், தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.