Tuesday, November 11, 2014

கார்த்திகை திருநாளில் ஒளிவீசத் தயாராகும் கிளியாஞ்சட்டிகள்: கேரளாவுக்குச் செல்லும் குருவாயூர் விளக்குகள்

கேரளாவுக்கு அனுப்பத் தயாராக உள்ள குருவாயூர் விளக்குகள்.

மாற்றுத்திறனாளி பாண்டியராஜனின் கைவண்ணம்.

கார்த்திகை தீபத் திருநாளுக்கு (டிசம்பர்-5) ஒளி வீசத் தயாரா கும் பலவகை மண்பாண்ட விளக்கு களும், கிளியாஞ் சட்டிகளும் மானாமதுரையில் தயாராகி வருகின்றன. கேரளாவுக்குச் செல்லும் குருவா யூர் விளக்குகளும் இங்கு தயாரிக்கப்படுகிறது
.
சிவகங்கை மாவட்டம், மானா மதுரையில் வைகை ஆற்றை ஒட்டியுள்ள குலாலர் தெருவில் பல நூறு மண்பாண்டத் தொழிலாளர் குடும்பங்கள் வசிக்கின்றன. இதைச் சுற்றியுள்ள சுந்தரநடப்பு, நத்தபுரக்கி, செய்களத்தூர், வேதியரேந்தல் பகுதி கண்மாய்களில் கிடைக்கும் களிமண், சவடு மண், ஆற்றுமணல்தான் மண்பாண்டங்களின் உற்பத்திக்கு ஆதாரம்.

இவற்றில் கைவினைஞர்கள் சேதாரமின்றி மூன்றுவகை மண் ணெடுத்து பக்குவமாய் கலந்து, பதமாக தண்ணீரில் பிசைந்து அழகழகாய் மண்பாண்டங்களை தயாரிக்கின்றனர். பிசையும் மண்ணில் இசையாய் எழும் கடம் முதல், தண்ணீர் பானைகள் வரை இங்கு உருவாக்கப்படுகின்றன.

பருவத்துக்கேற்ப மண்பாண்டங் கள் தயாரிப்பது இவர்களின் தனிச்சிறப்பு. தற்போது கார்த்திகை மாதம் தொடங்க உள்ளதால், தீபத் திருநாளுக்காக விதவிதமான அலங்கார விளக்குகள் தயாரிக்கப் படுகின்றன.

இருளகற்றும் அகல் விளக்கு, பாவைகள் ஏந்திவரும் பாவை விளக்கு, பாத விளக்கு, மாடவிளக்கு, மூன்று முகம், ஐந்து முகம், ஏழு முகம், சர விளக்குகள், ஓரடுக்கு, ஈரடுக்கு, மூன்றடுக்கு என ரகம் ரகமாய் விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன. சிவன், விநாயகர், முருகன், திருமால், லட்சுமி, சரஸ்வதி, காமாட்சி முக விளக்குகளும் இவர்களின் கைத்திறனுக்கு கட்டியம் கூறுகின்றன. கூடுதலாக இலை விளக்கு, தேங்காய் விளக்கு, தட்டு விளக்குகளும் தயாரிக்கப்படுகின்றன.

எப்படி உருவாகின்றன?

பதமாக பிசைந்த களிமண் கலவையை, மின்உருளையில் வைத்து விளக்குகளை உருவாக்கும் கைவினைஞர்கள், மிதமான வெயிலில் அவற்றை காயவைத்து, இயற்கை மண் சாயம் பூசி, காய்ந்த கருவேலமரச் சுள்ளி, வைக்கோல் சூளையில் வைத்து இளஞ்சூட்டில் வேகவைத்தால், பத்துநாளில் பக்குவ மாய் உருவாகின்றன பளபளக்கும் விளக்குகள். பார்ப்பதற்கே ஈர்க்கும் இந்த விளக்குகளை வாங்குவதற்கு போட்டிபோட்டு வருகின்றனர் வெளிமாவட்ட வியாபாரிகள்.
இங்குள்ள கூட்டுறவுச் சங்கம் மூலமும் வெளி மாநிலங்களுக்கு விளக்குகள் அனுப்பப்படுகின்றன. வேலைப்பாடுகளுக்கு தகுந்தவாறு ஒரு விளக்கு 65 பைசா முதல் ரூ.170 வரை விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன.

பிறவியிலேயே ஒரு கையை இழந்த நிலையிலும், அழகிய மண் விளக்குகளை லாவகமாக உருவாக்கும் பாண்டியராஜன் கூறும்போது, ‘கார்த்திகை மாதத்துக் குரிய விளக்குகள், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேவை அதிகரித்துள்ளது. தற்போது மழை பெய்து கண்மாயில் தண்ணீர் நிரம்பிக் கிடப்பதால் மண் எடுக்க வழியின்றி உற்பத்தி சற்று குறைந்துள்ளது. இருப்பு வைத்திருந்த மண்ணை வைத்து விளக்குகளை உற்பத்தி செய்து சமாளித்து வருகிறோம். எதிர்பார்த்த வருவாய் கிடைக்கவில்லை. கேரளாவுக்குச் செல்லும் குருவாயூர் விளக்குகளும் இங்கு தயார் செய்கிறோம் என்றார்.


நன்றி :- தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.