Wednesday, October 29, 2014

இயற்கைச் சீற்றம்: ஆபத்தை எதிர்நோக்கும் கடற்கரைக் கோயில்

மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலைச் சூழ்ந்துள்ள கடல் நீர்.

இந்திய அளவில் கடற்கரைக் கோயில்களில் சிறப்புப் பெற்றதும், வரலாற்றுச் சிறப்புமிக்கதுமான மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், இயற்கைச் சீற்றங்களில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றன.
தமிழகத்துக்கு இரண்டு கடற்கரைக் கோயில்கள் சிறப்பு சேர்க்கிற வகையில் விளங்குகின்றன. ஒன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், இரண்டாவது முருகக் கடவுளின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் திருத்தலம்.
இவற்றில் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் புராதனம் மிக்கது. வங்காள விரிகுடா கரையில் அமைந்துள்ள இக் கோயில் கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் பல்லவர் கால ஆட்சியில் 2-ஆம் நரசிம்ம வர்மன் எனும் ராஜசிம்மர் காலத்தில் கட்டப்பட்டது.
அந்தக் காலத்தில் கடற்கரைக் கோயில் கப்பல் மாலுமிகளுக்கு வழிகாட்டியாக விளங்கியதாக வரலாற்றில் கூறப்படுகிறது.
உலகப் புராதனச் சின்னங்களில் சிறப்பு வாய்ந்த மாமல்லபுரம் கடற்கரை நகரமும், கடற்கரைக் கோயிலும் யுனெஸ்கோ நிறுவனத்தால் உலகப் பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
லட்சக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கடற்கரைக் கோயில் வடிவமைப்பைக் கண்டு மகிழ்கின்றனர்.
ஒருகாலத்தில் மாமல்லபுரத்தில் 7 கடற்கரைக் கோயில்கள் இருந்ததாகவும், அவை "செவன் பகோடாஸ் (ள்ங்ஸ்ஹய் ல்ஹந்ர்க்ஹள்)' என்று அழைக்கப்படுவதாகவும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய சிறப்புமிக்க கடற்கரைக் கோயில் தற்போது இயற்கைச் சீற்றம், நாள்தோறும் கடல் சீற்றம் காரணமாக மணல் அரிக்கப்பட்டு, கடற்கரைக் கோயிலுக்கு ஆபத்து நெருங்கி வரும் சூழ்நிலையைக் கண்டு வரலாற்று ஆர்வலர்களும், உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வேதனை தெரிவிக்கின்றனர்.
மணல் அரிப்பதைத் தடுப்பதற்காக தொல்லியல் பாதுகாப்புத் துறையினர் கடற்கரைக் கோயிலைச் சுற்றிப் பாறைகளை அமைத்துள்ளனர்.
இந்தப் பாறைகளும் பல ஆண்டுகளுக்கு முன்பு கொட்டப்பட்டது. எனினும், நாளுக்கு நாள் கடல் சீற்றம் காரணமாக பேரலைகள் கடற்கரைக் கோயிலை தழுவிச் செல்கின்றன.
இந்த நிலையில், சமீபத்தில் காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வானிலை மாற்றத்தால் மழைநீரும், கடல்நீரும் கடற்கரைக் கோயிலைச் சூழ்ந்து வருவது கோயிலுக்கு வரும் ஆபத்தை உணர்த்துவதாக இயற்கை ஆர்வலர்களும், தொல்லியல் ஆர்வலர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.
ஒவ்வொரு முறையும் பருவமழை பெய்யும் போதெல்லாம் இதே போன்று கடற்கரைக் கோயிலைச் சுற்றி மழைநீர் தேங்குவதும், கடல்நீர் உள்புகுவதும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. மேலும், சுனாமிக்குப் பிறகு அகழ்வாராய்ச்சித் துறையினரால் அகழ்ந்து எடுக்கப்பட்ட விஷ்ணுவின் அவதாரமான பூவராகவரின் (பன்றி முகக் கடவுள்) சிறிய கோயிலைச் சுற்றியும் கடல்நீரும், மழைநீரும் அகழியைப் போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளன.
மேலும், இப்படி கடல்நீர் உள்புகும் போது சுற்றுலாப் பயணிகள் உடனடியாக வெளியேற முடியாமல் தொல்லியல் துறை வேலியும் அமைத்துள்ளது.
எனவே, தொல்லியல் பாதுகாப்புத் துறையினர் விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சர்வதேச சுற்றுலா மையத்தின் பொக்கிஷமாக விளங்கக் கூடிய கடற்கரைக் கோயிலைப் பாதுகாக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
நன்றி :-தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.