Sunday, October 26, 2014

சமையலறைக்கு ‘மைக்ரோவேவ் அவன்’ போதும்: ஆச்சி மசாலா தலைவர் ஏ.பத்மசிங் ஐசக் பேட்டி


1995-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆச்சி மசாலா நிறுவனம் 18 வருடங்களில் 750 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் நிறுவனமான வளர்ந்திருக்கிறது.

இந் நிறுவனம் தற்போது எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் எதிர்காலத்திட்டங்கள் ஆகியவை குறித்து நிறுவனத்தின் தலைவர் ஏ.பத்மசிங் ஐசக்கிடம் பேசினோம், அந்த விரிவான பேட்டியிலிருந்து..

ஏன் மசாலா நிறுவனம் ஆரம்பித்தீர்கள்? ஆச்சி என்பதன் பெயர் காரணம் என்ன?

கோத்ரெஜ் நிறுவனத்தின் ஏரியா மேனேஜராக இருந்தேன். ஐஐஎம்-ல் நிர்வாக படிப்பு இல்லாததால் அடுத்த நிலைக்கு போக முடியாது. மேலும் அப்போது வேறு வாய்ப்புகளும் இல்லை. மசாலா என்பது வளர்ந்து வரும் துறையாகும். அதனால் மசாலா துறைக்கு வந்தேன்.

10 வருடங்கள் பன்னாட்டு நிறுவனத்தில் இருந்ததால் பிராண்டின் மதிப்பு தெரியும். பெயர் இல்லாமல் இங்கு ஒரு பொருளை விற்க முடியாது.

அதனால் நிறுவனம் ஆரம்பிக்கும் போது ஆச்சி என்னும் பெயரை பதிவு செய்துதான் தொழிலை தொடங்கினேன். ஆச்சி என்பது பொதுவான வார்த்தை. மதிக்கக்கூடிய பெண்களை ஆச்சி என்று கூறுவது வழக்கம்.

வேறு பெயர்களை நீங்கள் பரிசீலனை செய்யவில்லையா?

பெண்கள் சம்பந்தமாக நிறைய பெயரை யோசித்தேன். இதில் அரசி, அம்மா, ஆச்சி என இதேபோல பல பெயர்களை யோசித்தேன். இதில் ஆச்சியை தேர்வு செய்தேன்.

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சுவை இருக்கும். ஆனால் இதை எப்படி மற்ற மாநிலங்கள், மற்ற நாடுகளில் விற்பனை செய்ய முடிகிறது. இதில் எதாவது பிரச்சினை இருக்கிறதா?

வாஸ்கோடகாமா இந்தியா வந்ததுக்கு காரணமே ‘ஸ்பைஸஸ்’தான். அதனால் இதை விற்பதில் பெரிய சிக்கல் இல்லை. மேலும் நாங்கள் செய்வது அடிப்படையான மசாலா பொருள்தான். அதன் பிறகு அதை பயன்படுத்துபவர்கள், அதில் என்னவேண்டுமானாலும் சேர்க் கலாம். அவர்களின் தேவையை பொறுத்தது. நாங்கள் 18 மாநிலங்களில் விற்றுக்கொண்டிருக்கிறோம்.

அதில் எந்த பிரச்சினையும் இல்லை. அனைத்து மக்களும் பயன்படுத்த கூடிய குளோப்ஜாமுன் மிக்ஸ், பாதம் மிக்ஸ் ஆகியவையும் இருக்கிறது.

உங்களின் தயாரிப்பு தொழிற்சாலை தமிழகத்தில் இருக்கிறது. ஆனால் மற்ற மாநிலங்களில் விற்பனை செய்யும்போது லாஜிஸ்டிக்ஸ் பிரச்சினை இருக்குமே?

மொத்த வருமானத்தில் வட இந்தியாவின் பங்கு மிக குறைவுதான். ஒரு சதவீத அளவில்தான் இருக்கும். அந்த இடங்களில் வளர்ச்சிக்கான வாய்ப்பினை ஆராய்ந்து வருகிறோம். விரைவில் மத்தியபிரதேசம் அல்லது ஆந்திரா எதாவது ஒரு இடத்தில் தொழிற்சாலை அமைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

நீங்கள் இருப்பது பாரம்பரிய மிக்க உணவுகளில். ஆனால் மக்களின் மனம் மேற்கத்திய உணவு பக்கம் திரும்பி இருக்கிறதே. இதை எப்படி சமாளிக்கப்போகிறீர்கள்?

அது போன்ற உணவகங்களில் இருப்பது 20 முதல் 30 வயதுக்குள் இருப்பவர்கள் மட்டும்தான். இருந்தாலும் இதை உணரந்து, நூடுல்ஸ் கொண்டு வரப்போகிறோம். ஆச்சி கிச்சன் என்னும் உணவகம் கூடிய விரைவில் திறக்க இருக்கிறோம்.

எப்.எம்.சி.ஜி பிரிவில் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் உங்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டினார்களா?

நாங்கள் காய்க்கும் மரம். எங்கள் மீது அவர்களுக்கு ஆர்வம் இருக்கும். ஆனால் இது என்னுடைய குழந்தை. இப்போதுதான் வளர ஆரம்பித்திருக்கிறது. இன்னும் வளர்ந்து பலருக்கு நிழல் தருவதை பார்க்கவேண்டும். மேலும் இதை சர்வதேச நிறுவனமாக வளர்க்க வேண்டும் என்பது ஆசை. பிற்காலத்தில் எதாவது நிறுவனங்கள் வரும்போது அவற்றை நாங்கள் வாங்கலாம்.

முன்பு மசாலா அரைப்பதற்கு நேரம் இல்லாமல் இருந்தது. இப்போது காய்கறி உள்ளிட்டவற்றை அரியவே நேரம் இல்லையே? அதற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?

இஞ்ஜி பூண்டு பேஸ்ட் இருக்கிறது. இதுபோல இன்னும் பல பொருட்களை கொண்டுவர இருக்கிறோம். சமையல் அறைக்கு டைனிங் டேபிளும் மைக்ரோவேவ் அவன் இருந்தால் மட்டும் போதும் என்பதை இலக்காக வைத்து பொருட்களை தயாரித்து வருகிறோம்.

உங்கள் துறைக்கு இருக்கும் சவால்கள் என்ன?

மூலப்பொருட்கள் விலையேற்றம்தான் மிகப்பெரிய சவால். இன்னும் அந்த பிரச்சினையை சமாளித்து வருகிறோம். மூலப்பொருள் விலை ஏறியது என்பதற்காக பொருட்களின் விலையை உயர்த்த முடியாது.

உங்களின் வெற்றிக்கு நீங்கள் காரணமாக நினைப்பது எது?

விளம்பரம்தான் வெற்றி என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல. அனைவரும் 100 கிராம் பாக்கெட்டில் விற்கும் போது, நான் 50 கிராம், அதற்கும் கீழே விற்க ஆரம்பித்தேன்.
மேலும் எங்களுடைய டிஸ்ரிபியூஷன் நெட்வொர்க்கை பலப்படுத்தி அனைத்து கடைகளிலும் கிடைக்குமாறு பார்த்துக் கொண்டேன்.

இதற்கு பிறகுதான் விளம்பரம் எல்லாம். விளம்பரத்துக்கு அதிகம் செலவு செய்து, பொருள் கடையில் இல்லை என்றால் வீண்தான். தரம், அனைத்து கடைகளில் கிடைப்பதை உறுதி செய்த பிறகுதான் விளம்பரத்தில் ஈடுபடவேண்டும்.

பங்குச்சந்தையில் பட்டியலிடும் திட்டம் இருக்கிறதா?

பங்குச்சந்தையில் பட்டியலிடும் திட்டம் இருக்கிறது. இப்போதைக்கு ஆண்டுக்கு 750 கோடி ரூபாய் வருமானம் ஈட்டிவருகிறோம். 1,000 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் வரும்போது பங்குச்சந்தையில் பட்டியலிடுவோம்.

அனைத்து துறைகளும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்வது நடக்கிறது. உங்களது திட்டம் என்ன?

விரைவில் ஆரம்பிக்கும் திட்டம் இருக்கிறது. இந்தியா முழுக்க டிஸ்ரி பியூஷன் இருக்கிறது. விளம்பரம் செய் கிறோம். ஆனாலும் சில பகுதிகளில் எங்களது பொருட்கள் கிடைக்காமல் இருக்கலாம். அந்த சந்தையை குறி வைத்து ஆன்லைன் விற்பனையை அறிமுகப் படுத்தப் போகிறோம்.

ஆச்சி நிர்வாக கல்லூரியில் தொழில்முனைவு படிப்பு இருக்கிறது. தொழில்முனைவு என்பது இயல்பிலே இருப்பதுதானே. அதை பாடம் மூலம் சொல்லிக்கொடுக்க முடியுமா?

எல்லாருக்கும் தொழில் தொடங்கவேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கு சில பிரச்சினைகள் தடையாக இருக்கும். எது தடையாக இருக்கிறதோ அதை நீக்கி ஒருவரை ஊக்குவிக்கும் பட்சத்தில் யார்வேண்டுமானாலும் தொழில் முனைவோர் ஆகலாம். பொதுவாக என்ன பிஸினஸ், எப்படி கடன் பெறுவது, எப்படி விற்பது ஆகியவைதான் பெரும் பிரச்சினையாக இருக்கும்.

karthikeyan.v@thehindutamil.co.in


நன்றி :- தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.