Friday, October 31, 2014

கைதான போலி ஐபிஎஸ் அதிகாரி 9 பெண்களை மணந்து, 150 சவரன் நகைகள் மோசடி


கைதான போலி ஐபிஎஸ் அதிகாரி 9 பெண்களை மணந்து, 150 சவரன் நகைகள் மோசடி



சென்னை அயனாவரம் பழனி ஆண்டவர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலமணிகண்டன் (வயது 27). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் மீது, சென்னை கல்லூரி மாணவி ஒருவர் திடுக்கிடும் புகார் மனு ஒன்றை, சென்னை டி.பி.சத்திரம் போலீசில் கொடுத்தார்.

தன்னை ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி என்று பொய் சொல்லி, பாலமணிகண்டன் காதலித்தார் என்றும், அவர் தன்னை பதிவு திருமணம் செய்து, 90 சவரன் நகைகளை பறித்துக்கொண்டார் என்றும், புகாரில் தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக டி.பி.சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலமணிகண்டனை கைது செய்தனர். அவர் தற்போது புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரைப்பற்றி, தோண்ட, தோண்ட வரும் புதையலைப்போல போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது. 

இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- 

பாலமணிகண்டன், பாலா, சூர்யா போன்ற பல்வேறு பெயர்களில், ஐ.பி.எஸ். அதிகாரியாக நடித்து, நிறைய பெண்களிடம் இணையதளம் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். பெரும்பாலும் டாக்டர் மற்றும் என்ஜினீயரிங் படித்த பெண்களிடம் மட்டும் பேசுவார். அவர்களிலும் பண வசதி படைத்தவர்களாக இருந்தால், அவர்களிடம், இனிக்க, இனிக்க பேசி வளைத்து போட்டுவிடுவார். முதலில் காதலிப்பார். பின்னர் பதிவு திருமணமும் செய்து கொள்வார். அந்த பெண்களிடம் காம களியாட்டத்திலும் ஈடுபடுவார். பின்னர் அந்த பெண்களிடம் நகை மற்றும் பணத்தை மோசடி செய்து விட்டு, கைகழுவி விடுவார்.

‘அலைபாயுதே’ சினிமா பாணியில் ரகசிய, பதிவு திருமணம்தான் செய்வார். திருமணம் செய்த பெண்ணுடன் சேர்ந்து வாழமாட்டார். ரகசியமாக உறவு மட்டும் வைத்துக்கொள்வது இவரது ஸ்டைல். இவருடைய மாய வலையில் சிக்கி 1 பெண் டாக்டர், 2 பெண் என்ஜினீயர்கள், 2 கல்லூரி மாணவிகள் உள்பட 9 பெண்கள் மோசம் போய் உள்ளனர். இந்த பெண்களிடம், 150 சவரன் தங்க நகைகள் மற்றும் கார்களை பறித்துள்ளார். இதில் 65 சவரன் நகைகள், ஒரு கார் மட்டும் அவரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. மீதி நகைகள் மற்றும் கார்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். பாலமணிகண்டனின் தந்தை ரெயில்வேயில் வேலை பார்க்கிறார். கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்த இவர் இதுபோன்ற செக்ஸ் உல்லாசம் மற்றும் நகை மோசடியில் ஈடுபட்டு தவறான பாதைக்கு போய்விட்டார். 

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

சென்னை எழும்பூரில் பெண் என்ஜினீயர் ஒருவரையும் காதலித்து மணந்து, 40 சவரன் நகைகளை, பாலமணிகண்டன் மோசடி செய்துள்ளார். இதுதொடர்பாக எழும்பூர் போலீசாரும், அவர் மீது ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே எழும்பூர் போலீசாரால், பாலமணிகண்டன் மீண்டும் கைது செய்யப்படுவார் என்று தெரியவந்துள்ளது. 

பாலமணிகண்டனின் மோசடி லீலைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ராமகிருஷ்ணன், உதவி கமிஷனர் ஜோஸ்தங்கையா, டி.பி.சத்திரம் இன்ஸ்பெக்டர் ரெஜிஸ்பாபு ஆகியோரை கமிஷனர் ஜார்ஜ், கூடுதல் கமிஷனர் ஆபாஷ்குமார், இணை கமிஷனர் தினகரன் ஆகியோர் வெகுவாக பாராட்டினார்கள்.

நன்றி :- தினமலர்

0 comments:

Post a Comment

Kindly post a comment.