Tuesday, September 30, 2014

உலக மசாலா: 8 வயது சிறுவனின் 6 கோடி சம்பாத்தியம்



இஸ்ரேலைச் சேர்ந்த எலீ தஹரி ஃபேஷன் டிசைனர். அமெரிக்காவில் வசிக்கிறார். ஆப்பிள் ஐபோன் மீது மிகுந்த அபிமானம் கொண்டிருந்தவருக்கு, டெக்னாலஜியையும் ஃபேஷனையும் இணைக்க வேண்டும் என்ற யோசனை தோன்றியது. கறுப்பு வண்ண உடையில் 50 ஐபோன்களைத் தைத்து, புதுவிதமான ஆடையை உருவாக்கி விட்டார்! அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஒரு விழாவில், மாடல் இந்த ஆடையை அணிந்தபடி வலம் வருவார். எந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் ஐபோன் தெரியும். ஸ்டீவ் ஜாப்ஸ் மீது மிகுந்த அன்பு கொண்டிருக்கும் எலீ, அவருக்குச் செய்யும் மரியாதையாக இதைக் கருதுகிறார்!

ம்ம்… இவர் சொல்லிட்டாரு ஈஸியா… மாடலுக்குத்தானே ஐபோன் டிரஸ் கஷ்டம் தெரியும்!
சீனாவின் சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டிருக்கிறார் ஜாவோ. மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்யும் ஜாவோ, புத்தகத்தைப் பார்க்காமல் ஒரு சில நிமிடங்களில் உலக வரைபடத்தை அச்சு அசலாக வரைந்துவிடுகிறார்! ஆசிரியராக இருந்து காலம் எல்லாம் உலக வரைபடம் வரைந்து பழகியிருந்தாலும், பார்க்காமல் சில நிமிடங்களில் வரைந்து முடிப்பது அதிசயம் என்று கொண்டாடுகிறார்கள் சீனர்கள்.

ஜாவோ, உங்க நினைவாற்றலை நினைச்சா உண்மையிலேயே கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கு!

8 வயது சிறுவன் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறான் என்றால் நம்ப முடிகிறதா? இவான் கேமராவுக்கு முன்னால் பொம்மைகளை வைத்து விளையாடுகிறான், வீடியோ கேம்ஸ் விளையாடுகிறான், விமர்சனம் செய்கிறான். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இவானின் விளையாட்டுகளைப் படம் பிடித்து இணையத்தில் ஏற்றினார் அவனின் அப்பா ஜேர்ட். இவானின் யுடியூப் வீடியோக்களைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தைத் தொட்டு, மலைக்க வைத்தது. விரைவிலேயே இவானின் வீடியோக்களை வைத்து, பிரமாதமான பிஸினஸை ஆரம்பித்துவிட்டார் ஜேர்ட். இன்று பல கோடி பேர் இவானின் வீடியோக்களைப் பார்க்கிறார்கள். விளம்பரங்களும் குவிகின்றன. ஆண்டுக்கு சுமார் 6 கோடி ரூபாய் சம்பாதிக்கிறான் இவான். 6 வயது தங்கை ஜில்லியனும் இவானுடன் இப்போது பங்கேற்கிறாள்.

ஆஹா! ஒரு வித்தியாசமான முயற்சி, இன்னிக்கு எவ்வளவு பெரிய பிஸினஸாக வளர்ந்திருக்கு!

நன்றி :- தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.