Monday, June 30, 2014

நினைவு தினங்கள்

ஆண்டு முழுவதும் சில நாள்கள், சர்வதேச தினங்களாகவும், இந்தியத் திருநாட்டின் தினங்களாகவும், தமிழ்நாட்டில் மட்டும் கொண்டாடும் அல்லது நினைவு கூரும் தினங்களாகவும் கருதப்படுகின்றன. இத்தகைய நாள்களை ஐ.நா. சபையும், இந்திய அரசும், தமிழக அரசும் அறிவித்துள்ளன. தினமணி, சிறுவர் மணி போன்ற இதழ்களில் மாதத் தொடக்கத்தில் எல்லோரும் அறிந்து கொள்ள அம்மாத முக்கிய நாள்களின் பட்டியலைப் பார்க்கலாம்.

இத்தகைய நாள்களைக் கொண்டாடுவது அல்லது நினைவு கூர்வது என்பது நாளின் சிறப்பு, தலைவர்களின் தோற்றம், மறைவு, நிகழ்வுகளின் முக்கியத்துவம் கருதியே ஆகும். எடுத்துக்காட்டாக, உலகச் சுற்றுச் சூழல் தினம். அன்னையர் தினம், குழந்தைகள் தினம், ஆசிரியர் தினம், தியாகிகள் தினம், தேசிய ஒருமைப்பாட்டு தினம், பயங்கரவாத ஒழிப்பு தினம், விடுதலை நாள், குடியரசு நாள் போன்றவற்றைக் கூறலாம்.

இந்த நாள்களில் என்ன செய்கிறோம்? அன்று மட்டும் அந்நாளின் சிறப்பைப் பேசிவிட்டுப் பின்னர் மறந்து விடுகிறோம். இது, "மரம் நடுவிழா அன்று அதே நாள், அதே மேடை, அதே குழி, நட்ட கன்றும், நட்ட தலைவரும்தான் வேறு வேறு' என்று கேலி செய்வது போல உள்ளது. "பிளாஸ்டிக் ஒழிப்பு தின'த்தன்று ஊர்வலம், முழக்கங்கள், நிறைவில் குடிநீரும், தேநீரும் பிளாஸ்டிக் கோப்பைகளில் வழங்கி, அவ்விடத்தைப் பிளாஸ்டிக் குப்பை மேடாக்கி விடுகிறோம். தியாகிகள் தினமும், தேசிய ஒருமைப்பாட்டு உறுதி மொழியும் இவ்வாறே.

இந்நாள்களை கொண்டாடுவதன், கடைப்பிடிப்பதன் நோக்கம் நாம் நடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்ப்பதற்கும், எவற்றையெல்லாம் பின்பற்றியிருக்கிறோம். இன்னும் இலக்கை அடைய என்ன செய்ய வேண்டும் என்ற சிந்தனைக்குத்தான்.

ஆனால் இன்று இது ஒரு சடங்குபோல ஆகிவிட்டது. விளம்பரம், விழாக் கொண்டாட்டம், படங்களுடன் செய்தி இவ்வளவுதான். நோக்கம் காற்றோடு கலந்து போய்விடுகிறது.

இந்தச் சூழ்நிலையில்தான் தென்னக ரயில்வே பொது மேலாளர், ராஜேஷ் சர்மா அவர்கள் "மே முதல்' நாளை சென்னையில் நடந்த குண்டுவெடிப்பில் பலியான பெண்ணின் பெயரால் சுவாதி தினம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என அறிவித்திருக்கிறார். சுவாதியின் மரணம் குறித்து அனைவரும் வருத்தப்பட்டோம். குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினோம். குண்டு அவருக்காக வைக்கப்படவில்லை. யாருக்காகவும் அவர் தியாகம் செய்யவில்லை. அரசின் மெத்தனத்தால் தற்செயலாக நேர்ந்தது. இவர் இல்லையென்றால் இன்னொருவர் பலியாகியிருப்பார். எனவே, அவரது குடும்பத்திற்கு ஆறுதல், நிதியுதவி, வேலைவாய்ப்பு எனப் பல வகையில் வாழ்நாளெல்லாம் அரசு உதவலாம். அவரைத் தலைவர்கள் போல தியாகியாக்கிக் கொண்டாட வேண்டியதில்லை. பிறருடைய தியாகமும் இதனால் கொச்சைப்படுத்துவதுபோல் உள்ளது.

காந்தியின் தியாகிகள் தினமும், இந்திராகாந்தியின் தேசிய ஒருமைப்பாட்டு தினமும், ராஜீவ் காந்தியின் பயங்கரவாத ஒழிப்பு தினமும் கொண்டாடப்படுவது கேலியாகிவிடும். கும்பகோணத்தில் இறந்த பள்ளிக் குழந்தைகள் மரணமும், சுனாமியில் இறந்த பலரின் மரணமும் இவ்வாறு நினைவு தினங்களாக அறிவிக்கப்படவில்லை. குடும்பத்தினர் மட்டுமே இன்றும் கண்ணீர் சிந்துகின்றனர். மற்றவர்களை அது பாதிக்கவில்லை. 

"நினைவு தினங்கள்' கடைப்பிடிப்பது உணர்வுபூர்வமாக மட்டும் இருந்து விடக்கூடாது. அறிவுபூர்வமாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் வருங்காலத்திலும் கொண்டாடப்படும் அவர்களது நல்லெண்ணம். கொள்கைகள் நிறைவேற்றப்படும். "சுவாதி'யை எவ்வாறு நினைவு கூர்வது? அவரது மனிதாபிமானமா? வீரதீரச் செயலா? தேசத்திற்கு தன்னை அர்ப்பணித்தாரா? அதுவும் மே முதல் நாளான தொழிலாளர் தினத்தன்று? அக்டோபர் 2 காலையில் காந்தி ஜெயந்தியும் மாலையில் காமராஜர் நினைவு தினமும் போல இந்நாளைக் கொண்டாட வேண்டுமா? அத்தகு சிறப்பு எப்படி வந்தது? அரசின் பாதுகாப்பு குறைபாட்டால் ஏற்பட்ட தவறான இழப்பைக் கொண்டு அரசு தனக்குத்தானே பெருமை தேடிக் கொள்வது போல் உள்ளது. இது சரியா?

நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை; எல்லா நாளும் இனிய நாளே என்பதை மனத்திற்கொண்டு அனைத்து நாள்களின் சிறப்பையும், நோக்கத்தையும் நினைவு கூர்வோம்? அது நமக்கு மனநிறைவையும் செயலாற்றும் வலிமையையும் நல்கும் என்பது திண்ணம்.

அ.கருப்பையா, பொன்னமராவதி, கருத்துக்களம், தினமணி.

0 comments:

Post a Comment

Kindly post a comment.