Sunday, June 22, 2014

"அ 'கரம் தமிழுக்குச் சிகரம்! - இடைமருதூர் கி.மஞ்சுளா


""அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு'' (1)


என்றார் வள்ளுவர். ("அ"  leads letters; the Ancient Lord Leads and lords the Entire World ) உலகத்தின் முதலாக இருப்பது கடவுள். அதாவது, உலகம் தோன்றுவதற்கு முன்பு தோன்றியவர் கடவுள். அதுபோல தமிழ்மொழியின் நெடுங்கணக்கிலுள்ள 247 எழுத்துகளில் முதன்மையானதாக "அ' எழுத்து இருக்கிறது. எப்படி தமிழ்மொழியில் "அ' என்ற எழுத்து முதலாவதாக இருக்கிறதோ, அதுபோல இந்த உலகத்திற்குக் கடவுள் முதலாகவதாக இருக்கிறார் என்பது பொருள்.



""அகரஉயிர் எழுத்து அனைத்து மாகி வேறாய்

அமர்ந்ததுஎன அகிலாண்டம் அனைத்துமாகிப்

பகர்வன எல்லாமாகி அல்லவாகிப்

பரமாகி சொல்லரிய பான்மையாகித்

துகளறுசங் கற்பவிகற் பங்கள் எல்லாம்

தோயாத அறிவாகிச் சுத்தமாகி

நிகரில்பசு பதியான பொருளை நாடி

நெட்டுயிர்த்துப் பேரன்பால் நினைதல் செய்வாம்''

(பொருள் வணக்கம். பா-13)

 என்பது தாயுமானவர் சுவாமியின் பாடல். ""அகரம் என்று சொல்லக்கூடிய உயிரெழுத்து அனைத்து எழுத்துகளுக்கும் தானாகி, (அவைகளுக்கு) வேறாகவும் (அப்பாலாய்) பொருந்தி இருத்தல் போல, அண்ட சராசரங்கள் அனைத்தும் தானேயாகி, சொல்லக்கூடிய பொருள்கள் யாவுமாகி, அதற்கு வேறாகவும் ஆகி, எல்லாப் பொருள்களுக்கும் மேலான பொருளாகி, எடுத்துக் கூறுவதற்கு முடியாத தன்மையாகி, குற்றமற்ற திடச்சித்தங்கள் மற்றும் மாறுபட்ட சித்தங்கள் எல்லாவற்றிற்கும் பொருந்தாத அறிவாகி (ஞானமாகி), பரிசுத்தத் தன்மையாகி, எவற்றிற்கும் நிகரில்லாத ஜீவர்களுக்குத் தலைவனாகிய

(இறைவனாகிய) வஸ்துவை (பரம்பொருளை) நெருங்கிப் பெருமூச்சு விட்டு, பேரன்பு கொண்டு (நாம்) தியானம் செய்வோம்'' என்கிறார் தாயுமானவர்.

"அ' என்னும் தொனி உள்ளிருந்து உண்டாகும் நாதத்துடன் கலந்திருக்கிறது. நாதத்தைக் கண்டுபிடிப்பதே யோகம் எனப்படும். நாதமானது மற்ற உயிரெழுத்துகளுடன் கலந்து அவற்றுக்கு அப்பாலும் உள்ளது என்பதை சுவாமிகள், ""அகரவுயி ரெழுத்துமாகி வேறாய் அமர்ந்தது என'' என்கிறார்.

 ""அகர முதல் என உரை செய் ஐம்பத்தோர் அக்ஷரமும்'' என்று ஆன்றோர் கூறியுள்ளபடி, முதலில் நாத வடிவாமாகப் பிரணவ மந்திரம் உண்டாயிற்று. பிரணவம் மூன்றாகப் பிரிக்கப்பட்டது. அப்பிரணவத்திலிருந்து ஐந்து எழுத்துகளாக பஞ்சாக்ஷர மந்திரம் பிறந்தது. அவ்வைந்து எழுத்துகளும் 51 அக்ஷரமாயின. அவை வருமாறு:


(காண்க வரைபடம்) (ந- என்பதை 9 என்று குறித்திருக்கிறது. அ, க, ங, ச, ஞ, ட, ண, த, ந = 9 எழுத்துகள் இவ்விதமாகச் சொல்லிக்கொண்டே போனால், ஒவ்வொரு எழுத்துக்கும் மேற்குறித்தவாறு எண்கள் வரும். அவற்றைக் கூட்டினால் 51 வரும்). மற்றொரு பாட்டில், "ஓங்காரமாம் ஐந்தெழுத்தால் புவனத்தை உண்டு பண்ணும் பரம்பொருள்' என்கிறார் தாயுமானவர். மேற்கூறிய உலக உற்பத்திக்குக் காரணம், பரம்பொருளேயாகும். இவ்வுலக உற்பத்திக்குக் காரணம் என்ன என்பதைப் பற்றிப் புராணக் கதையில், பார்வதியை பரமசிவன் நகத்தால் கிள்ளியதாகவும், அச்சமயம், பார்வதிதேவி "அ' என்று அலறியதால், உலகம் உற்பத்தி ஆயிற்று என்றும், "அ' என்ற வார்த்தை அச்சம் காரணமாக உண்டாகிறது என்றும் கூறியிருக்கிறது. பிரணவத்திற்குப் பொருள் கூறும் சமயம், அகர, உகர, மகரம் என மூன்றாகப் பிரித்தால் அகரமானது உலக உற்பத்தி என்றும், உகரம் வியாபித்தல் (காத்தல்) என்றும், மகரம் அழித்தல்(சம்ஹாரம்) என்றும் கூறப்படும்.


பிரணவம் பழுத்த இடம் ஒளி பிறக்கும்படியான இடம். அதாவது, அகரம் பிறக்குமிடம். ஒளி பிறக்குமிடத்தில் மந்திரமும் பிறக்கிறது'' என்பார் தவத்திரு கோ.மு.சுவாமிஜி. (தாயுமானவர் பாடல் விளக்கவுரை, யோகாசன ஆலய விஜயம்).

""அகரமுமாகி அதிபனுமாகி அதிகமுமாகி - அகமாகி

அயனெனவாகி அரியெனவாகி அரனெனவாகி - அவர்மேலாய்''

 என்பது அருணகிரிநாதரின் திருப்புகழ்.

""எழுத்துகள், உயிரும் ஒற்றும் என இருவகைப்படும். உயிருடைய பொருளும் உயிரிலாப் பொருளும் என உலகமும் இருவகைப்படும். அகரம் எல்லா எழுத்துகளிலும் கலந்து அவைகளை இயக்கும்; தானும் தனித்து இயங்கும். அதுபோல், இறைவன் எப்பொருளையும் கலந்து, அவைகளை இயக்குவன்; தானும் தனித்து இயங்குவன். அகரம் இயங்காதேல், எந்த எழுத்தும் இயங்காது; அதுபோல் இறைவன் அசையானேல், ஓர் அணுவும் அசையாது. ஆசிரியர் தொல்காப்பியனார்,

 ""அகர முதல் னகர இறுவாய்

முப்பஃ தென்ப''

என முதற் சூத்திரத்தில் முழங்கினார். இதன்படி அகரம் முதலிலும், னகரம் இறுதியிலும் இருப்பதை அறிகிறோம். அந்த அருமையை அறிவிக்க எண்ணிய வள்ளுவரும் ""அகர முதல எழுத்தெல்லாம்'' என ஆரம்பித்து, 1330-ஆம் குறளில் ""கூடி முயங்கப் பெறின்'' எனக் காட்டிய அருமையும் கருதத்தகும்.

ஒலி வேறுபாட்டில் உதிக்காமல், வாய் திறந்து எழும் ஒலி மாத்திரமான இயற்கையாகப் பிறக்கும் அகர நிலை. ""மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்'' எனும் தொல்காப்பியமும், "இறைவன் இயங்குதிணை நிலைத்திணை எவையினும் அவற்றின் தன்மையாய் நிற்றல்போல், அகரம் எல்லா எழுத்துகளினும் கலந்து அவற்றின் தன்மையாய் நிற்கும் என்ற அதன் உரையும் எண்ணத்தகும். மேலும், மொழியை அமைத்தற்குத் தொடுத்த ஒலிகளுள் "அகரம்' முதல் நாதம் ஆகும்.

வாமன புராணத்தில். "அகரம் எல்லாச் சொற்களுக்கும் மூலம் ஆதலாலும், பிரஹ்மம் எப்பொருட்கும் மூலம் ஆதலாலும், "அ' என்று பிரஹ்மத்திற்குப் பெயர்' என்பதும் எவ்வளவு அருமையான அறிவிப்புகள்'' என்பார் ஏ.உத்தண்டராம் (திருச்செந்தூர் நீரோட்டக யமக அந்தாதி உரை விளக்கம்).

உமாபதி சிவாச்சாரியார் அருளிச்செய்த திருவருட்பயன் நூலில், "பதிமுதுநிலை' என்னும் முதல் அதிகாரத்தில், இறைவனது மேலான பொது இயல்பைக் கூறுமிடத்து,


""அகர உயிர்போல் அறிவாகி எங்கும்

நிகரில் இறை நிற்கும் நிறைந்து''

என்று "அ'கரத்தை இறைவனுக்கு நிகராக்கி, சிகரத்தில் ஏற்றிவைத்துள்ளார். அதாவது, ""அகரமாகிய உயிர் எழுத்தின் ஒலி, மற்றைய எழுத்துகளுக்கு முதலாய், அவற்றில் கலந்து இருப்பது போல, தனக்கு ஓர் உவமன் இல்லாத் தலைவன் ஆகிய கடவுள், அறிவுள்ளனவும், அறிவில்லாதனவும் ஆகிய பொருள்கள் எல்லாவற்றிலும் நிறைந்து, அறிவே உருவமாகித் தொடக்கமும் ஒடுக்கமும் இன்றி நிற்பர். வாயைத் திறந்தவுடன் உண்டாவதாகிய அகர ஒலி, மற்றைய எழுத்துகள் எல்லாவற்றிலும் கலந்து இருப்பது போல கடவுள் எல்லாப் பொருள்களிலும் கலந்து இருக்கிறார்.

 ""ஆதியாய் நின்ற அறிவு முதல் எழுத்து

ஓதிய நூலின் பயன்''(1)

என்பது ஒளவையின் ஞானபோதம். தமிழில் முதல் எழுத்து "அ'. வேதத்தின் முதன்மை எழுத்து, "ஓம்' எனும் பிரணவம். இந்த முதல் எழுத்தின் மூலத்தை அறியச்செய்த நூலின் பயனே அறிவின் நிறைவாகும். அறிவைத் தருவது நூல். அந்நூலை அறிய வைப்பதும் அறிவே ஆகும் என்கிறார். இன்னொரு பாடலிலும் (3-10) இதை உணர்த்தியுள்ளார்.

ஆக, இறைவனை நிகர்த்தது தெய்வத் தமிழ்ச் சொல்லாகிய - இறைமொழியாகிய தமிழ் "அ'கரம் என்பது புலனாகும். "அ' கரத்தில் தொடங்கும் அரன், அரி, அயன், அம்மா, அப்பா, அக்கா, அண்ணன், அண்ணி, அத்தை, அண்டம், அன்பு, அறிவு, அறம், அடக்கம், அமைதி, அகம், அழகு, அறிஞர், அகம், அண்ணல் முதலிய அகரத்தில் தொடங்கும் சொற்கள் அனைத்தும் மிக உயர்ந்தவற்றைக் குறிக்கவே தோன்றியுள்ளன.

உய்யவந்த தேவநாயனார், திருக்களிற்றுப்படியார் என்ற சித்தாந்த நூலின் முதல் பாடலை, ""அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்று அறிக'' என்றும்; ஒளவையார், ஆத்திசூடியை ""அறம் செய்ய விரும்பு'' என்றும், கொன்றை வேந்தனை ""அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்'' என்றும்; குமரகுருபரர் தம் நீதிநெறி விளக்கத்தின் முதல் பாடலை ""அறம் பொருள் இன்பம் வீடும் பயக்கும்'' என்றும் இவர்கள் அனைவரும் "அ'கரத்தையே முதன்மைப்படுத்தி பாடல்

களைத் தொடங்கியுள்ளனர். இவ்வாறு சங்க இலக்கியங்களிலிருந்தும் சமய இலக்கியங்களிலிருந்தும் பல பாடல்களை உதாரணம் காட்டலாம்.
தொல்காப்பியர், திருவள்ளுவர், உமாபதி சிவாச்சாரியார், உய்யவந்த தேவநாயனார், அருணகிரிநாதர், ஒளவையார், குமரகுருபரர் முதலிய பல அருளாளர்களின் முதற்பாடல்களிலும் "அ'கரம் முதலிடம் பிடித்து, தமிழுக்குச் சிகரமாகவும் இறைவனுக்கு நிகராகவும் திகழ்வது நம் தமிழ்மொழிக்கே உரிய தனிச்சிறப்பன்றோ...!                     
தமிழ்மணி, தினமணி





0 comments:

Post a Comment

Kindly post a comment.