Wednesday, February 19, 2014

திருக்குறளில் ‘ஒறுத்தல்' - செ.கணேசலிங்கன்

ஒப்புமை காண்டல், ஒப்பீடு செய்தல். ஒப்பீடான மதிப்பீடு வாழ்வோடு ஒன்றியவை, இரு பொருட்கள், உணர்வுகளை ஒப்பீடு செய்தல் எனலாம்.

இலக்கியத்தில் உவமை, உவமை அணி, உருவகம் என பெயரடை, வினையடை மாறுதலைக் கூறுவர். பெரும்பாலும் இலக்கியத்தில் மிகைபடக் கூறி விளக்க முயல்வர்.

ஆங்கில மரபில் ஷேக்ஸ்பியர் ஒப்பிடுவதை வெறுப்பு, எதிர்ப்பாகத் தன் நாடகத்தில் கூறியுள்ளார். இந்திய முன்னாள் பிரதமர் நேருவும் ஒரு பேச்சில் ஒப்புமை செய்வதை வெறுப்பதாகக் கூறினார்.

ஒப்புமை என்பது சமத்துவம், தராதரம் பார்த்தல், மதிப்பீடு உறவு காணல் எனலாம். தொல்காப்பியர் ஒப்பு, உரு, வெறுப்பு, கற்பு, அழகு, வேட்கை, நுகர்தல் போன்றவற்றை நெஞ்சால் உணர முடியும், நுண்பொருளை, பருப்பொருளாகக் காட்ட முடியாது (1993) என்பார். பருப்பொருள் கண்ணால் பார்த்து, தொட்டுப் பார்க்கக்கூடியது.

பண்டைய கலை, இலக்கியங்களில் ஒப்புமை உட்பட யாவையும் மிகைப்படுத்திக் கூறுவதைக் காணலாம். கலை என்று பார்த்துப் பின்பற்றி, போலி செய்தல் என்ற விளக்கமும் உண்டு.

வள்ளுவர் ஒப்புமையில் மிகைபடக் கூறல், அவற்றுக்குத் தப்பான விளக்கங்கள் கூறப்படுவதும் வியப்பல்ல.

வள்ளுவர் சமண சமயத்தவர் என்பதில் சந்தேகமில்லை. வேத, உபநிடதக் கோட்பாடுகளுடன் எழுந்த கௌடில்யரின் அர்த்தசாஸ்திரக் கோட்பாடுகளுக்கு மாற்றாக எழுந்த சமண, புத்த மதக் கருத்துகளைத் திருக்குறளில் காணலாம்.

அர்த்த சாஸ்திரம், கொலை, இறைச்சிக் கடை, கள், சூது, பாலியல் தொழிலை எதிர்க்கவில்லை. வள்ளுவர் இவற்றை எதிர்த்தார். சிறப்பாகக் கொலையை, உயிர்க் கொலையை முதன்மையாகக் கூற வேண்டும்.

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்

பின்சாரப் பொய்யாமை நன்று(323).

இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த நிலையில் வைத்துக் கூறக்கூடியது பொய்யாமை.

மேலும், கொல்லாமை என்ற அதிகாரத்தில் அறம் என்பது கொல்லாமை, நல்வழி போற்றக் கூடியது, தன் உயிர்நீப்பினும் கொல்லாமையே சிறந்தது. கொல்பவன் புலைத்தொழிலிலும் தாழ்ந்தவன், தீய வாழ்க்கை கொலைத் தொழில் என்றெல்லாம் கண்டித்துக் கூறுவார்.

மேலும், உயிர்களைக் கொல்லாதிருப்பின், விலையின் பொருட்டு ஊன் விற்பனையாளர் இல்லாது போவர் என்றார்.

தினற்பொருட்டால் கொல்லாது உலகு எனின் யாரும்

விலைப்பொருட்டால் ஊன் தருவார்இல்(256).

வள்ளுவர் ‘வெறுப்பு' சார்ந்து கூறிய ‘ஒறுத்தல்' என்ற சொல் கூறும் குறள்களைக் கவனிக்கலாம்:

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்

பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து(155).

தீங்கு செய்தவரை பொறுக்காமல் வருத்தின் அவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார். ஆனால், பொறுத்தவரை பொன்போல் மனத்துள் மதிப்பர்.

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்

பொன்றும் துணையும் புகழ்(156).

தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தின வருக்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவருக்கு உலகம் அழியும்வரை புகழ் உண்டு.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண

நன்னயம் செய்து விடல்(314).

துன்பம் செய்தவரைத் தண்டித்தல், அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து, அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்துவிடுதலாகும்.

ஒறுத்து ஆற்றும் பண்பினார் கண்ணும் கண்ணோடிப்

பொறுத்தாற்றும் பண்பே தலை(579).

தண்டித்தற்குரிய தன்மை உடையவரிடமும் அவரது குற்றத்தைப் பொறுத்துக் காக்கும் பண்பே சிறந்தது.

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்

ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து(561).

செய்த குற்றத்தைத் தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக்குற்றம் செய்யாதபடி குற்றத்துக்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன்.

கொலையிற் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ்

களைகட்டத னோடு நேர்(550).

கொடியவர் சிலரை வேந்தன் தண்டித்தல் அரசன் பயிரைக் காப்பாற்றக் களையைக் களைவதற்கு நிகரான செயல்.

மீண்டும் குற்றம் செய்யாது தண்டிப்பவனே அரசன். அவன் கொலைத் தொழில் செய்பவன் அல்ல.

ஒறுத்தல் என்பதற்கு முன்னர் கூறிய மற்றைய குறள்களில் தண்டித்தல் எனக் கூறிய வள்ளுவர், மேலே கூறிய 550வது குறளில் கொலைத் தண்டனை என விளக்கம், தெளிவுரை கூறுவது வியப்பே.

வள்ளுவர் சமண சமயத்தவராக உயிர்க் கொலையைத் தொடர்ந்து எதிர்த்துவந்தவரே. மேலே கூறப்பட்ட குறளுக்கு அடுத்த குறளும் வருமாறு:

கொலைமேற் கொண்டார் கொடிதே அலை மேற்கொண்டு

அல்லவைசெய்து ஒழுகும் வேந்து(551).

குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத்தொழிலைக் கொண்டவரைவிடக் கொடியவன்.

குறள் 550-ல் செங்கோன்மை நிலையில் கூறியதற்கு மாற்றாகக் கொடுங்கோன்மை 551-ல் இவ்வாறு கண்டிப்பார் என்பது தெளிவு.

அரசன் தண்டிப்பதற்குப் பல வழிகள் உள; சிறை, தண்டத்தால் தண்டித்தல், பட்டினி போடல் போன்றவை சில.

விவசாயிகளை பிடுங்குபவன். அவற்றை வீசி விடுவதில்லை. ஆடு, மாட்டுக்கு உணவாக்குவான்; மண்ணில் புதைத்து எருவாக்குவான்.

வேந்தன் ஒறுத்தல் என்பதற்குக் கொலை என ஒப்புமை கூற முயல்வது மிகைப்படுத்தப்பட்டது. ஒப்புமைகள் தப்பாகவும் வெறுக்கப்படலாம்; ஒதுக்கப்படலாம்.

தி இந்து - 19 - 02- 2014 

மாற்றுக் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன?

0 comments:

Post a Comment

Kindly post a comment.