உலக அளவில் நிதிச் சேவையைப் பொருத்தவரையில் வங்கிகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. அன்னிய நாட்டு வங்கிக் கிளைகள் உள்பட தற்போது இந்தியாவில் சுமார் 300 வர்த்தக வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், பிராந்திய வங்கிகள், அன்னிய நாட்டு வங்கிக் கிளைகள் என பல தளங்களில் பல தரப்பினரும் செயல்பட்டு வருகின்றனர்.
பொருளாதார மேம்பாட்டில் வங்கிகளின் பங்கு அளப்பரியது. வங்கி என்றால் என்ன, அதன் செயல்பாடு என்ன என்பதைப் பற்றி நேற்றுவரை அறியாத குக்கிராம மக்கள்கூட, இன்று வங்கியைப் பற்றித் தெரிந்து வைத்துள்ளனர்.
பஸ் போகாத ஊரில் கூட இன்று நடமாடும் வங்கி வசதி செய்யப்பட்டுள்ளது. அரசின் திட்ட மானியங்களும், கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணியாற்றுவோருக்கான ஊதியமும் வங்கிக் கணக்கிலேயே வரவு வைக்கப்படுகின்றன.
விவசாயிகள், தொழில்முனைவோர், மகளிர் என ஒவ்வொரு பிரிவினருக்கும் பிரத்யேக கிளைகள் உள்ளன.
வங்கி குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பள்ளிப் பருவத்திலேயே வங்கியில் கணக்குத் துவங்க ஊக்கப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிலும் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும் என்ற நோக்கில் வங்கிகள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. ஆனால், வங்கியின் நோக்கம் முழுமையாக நிறைவேறுவதில்லை என்பதே இப்போதைய பிரச்னை.
24 மணி நேரத்துக்குள் தேவையான கடன் வசதியைப் பெறலாம் என வங்கிகள் விளம்பரப்படுத்துகின்றன. ஆனால், அது அவ்வளவு எளிதான விஷயமல்ல. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் வீடு கட்ட ரூ.5 லட்சம் கடன் பெற ஒரு வங்கியை அணுகுவாரேயானால், அவர்கள் கேட்கும் ஆவணங்களிலேயே அவருக்கு தலைசுற்றல் ஏற்படும்.
பல நாள்கள் அலைந்து திரிந்து ஆவணங்களைச் சேகரித்து, வங்கி அதிகாரியிடம் வழங்கினால், அவற்றில் சில குறைபாடுகளைக் கண்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்யுமாறு கூறுவார்.
அதையும் நிவர்த்தி செய்து கொடுத்தால், வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி, ஒப்புதல் பெற்ற பிறகே கடன் வழங்கப்படும் எனத் தெரிவிப்பார்.
கடன்பெறச் செல்லும் வாடிக்கையாளரிடம் 50 பக்கங்கள் கொண்ட விண்ணப்பப் படிவத்தில் குறைந்தது 20 கையெழுத்தையாவது பெறுகின்றனர்.
தமிழ் மொழியிலே கையெழுத்துக் கூட போட முடியாதவரிடம், ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட விண்ணப்பத்தில் கையெழுத்தைப் பெறுகின்றனர். அவரும் நீட்டிய இடத்தில் கையெழுத்திட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால், வங்கிக்கு லாபமாக இருக்கலாம். வாடிக்கையாளரின் நிலை?
கல்விக் கடன் இத்தனை லட்சம் பேருக்கு இத்தனை லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்று புள்ளிவிவரங்களை வெளியிடுகின்றனர்.
ஆனால், தகுதியான மாணவர்கள் பலர் கல்விக் கடன் பெற முடியாத நிலையில், நீதிமன்றங்களை நாட வேண்டிய நிலையையும் பார்க்கிறோம்.
தற்போது நகரங்களை விட்டு கிராமங்களை வங்கிகள் குறிவைக்கத் தொடங்கி விட்டன. இதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றன.
கிராமத்துக்கு இத்தனை வங்கிக் கணக்குகள் தொடங்க வேண்டும் என்றும் இலக்கும் நிர்ணயிக்கின்றன. நல்ல விஷயம்தான். கணக்கு மட்டும் தொடங்கினால் போதுமா? தொடர் நடவடிக்கை கண்காணிக்கப்படுகிறதா? இல்லையே! என்ன பயன்? மரக்கன்றுகள் நடுவது போன்ற கதைதான் இதுவும்!
அதுபோல, கிராம மக்களிடம் ஆடு, மாடு வாங்க கடன் பெற்றுத் தருகிறேன் எனக் கூறி, இடைத்தரகர்கள் பலர் ஏமாற்று நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
இதனால் பாதிக்கப்படுவது வாடிக்கையாளரே. இதற்கான முறையான நடவடிக்கை இல்லை.
வங்கிக் கிளைகள் அதிகம் திறக்கும்போது, ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்று கூறுகிறார்கள்.
ஆனால், நகர்ப்புறங்களில் உள்ள வங்கிகளில் வாடிக்கையாளர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்கு அவர்கள் கூறும் காரணம், போதிய பணியாளர்கள் இல்லை என்பதே.
இது பற்றிய கவலையே இல்லாமல் கிராமப்புறங்களில் புதிய வங்கிக் கிளைகள் கொண்டுவதால் என்ன பயன்?
கடைசியாக ஒரு வார்த்தை. கிராமங்களில் வங்கிக் கிளைகள் திறப்பது, குறைந்த வட்டிக்குக் கல்விக் கடன் வழங்குவது, விவசாயக் கடன் வழங்குவது எல்லாமே அரசுத்துறை வங்கிகள் மட்டும்தான் செய்ய வேண்டுமா? தனியார் வங்கிகள் லாபகரமான சேவைகளுக்கு மட்டும்தானா?
இதை ஏன் நிதியமைச்சர் அனுமதிக்கிறார் என்று கேட்க, இந்தியாவில் யாருக்குமே தோன்றவில்லையே, ஏன்?
தினமணி
0 comments:
Post a Comment
Kindly post a comment.