புனே திரைப்படக் கல்லூரியில் எனக்குப் பல ஆண்டுகள் சீனியர் பாலு மகேந்திரா. வீட்டில் வயதில் மூத்த சகோதரர்களுடன் இருக்கும் இடைவெளி மற்றும் மரியாதையுடனேயே என்றும் அவரை அணுகிவந்திருக்கிறேன்.
நான் புனே திரைப் பள்ளியில் மாணவனாக இருந்தபோது, பாலுவின் 'கோகிலா' வெளியானது. அதை அவருடன் சேர்ந்து ஒரு ப்ரிவ்யூ தியேட்டரில் பார்த்து நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தேன்.
பின்னர் குறுகிய காலத்துக்குள் அவர் ஒளிப்பதிவுசெய்து மகேந்திரன் இயக்கிய 'முள்ளும் மலரும்' மற்றும் அவர் இயக்கிய ‘அழியாத கோலங்கள்' படங்கள் வெளிவந்தன. அந்த இரண்டு படங்களிலும் நடித்த ஷோபா, துரை அவர்களின் ‘பசி' மூலமாக தமிழ்/இந்திய சினிமா வரலாற்றில் நடிப்பில் யதார்த்த பாணிக்குப் புதியதொரு தடம்பதித்து, தனது 17-வது வயதிலேயே சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.
கருப்பு-வெள்ளையின் கலைஞன்
அவரது அகாலமான மறைவு திரையுலகைச் சார்ந்த எல்லோரையும் பாதித்தது. முக்கியமாக, திரைப்படக் கல்லூரியில் பயின்று இயக்குநராக வேண்டும் என்ற கனவுகளுடன் இருந்தவர்களைக் கடுமையாகப் பாதித்தது.
பாலு மகேந்திராவை வைத்து ஒரு திரைக்கதையை அவரது ஒளிப்பதிவு மற்றும் ஆலோசனையுடன் எடுக்கலாம் என்று என்னைப் போன்ற இளைஞர்கள் திட்டமிட்டுக்கொண்டிருந்தோம்.
ஷோபாவின் மறைவு பாலுவையும் ஆழமாகப் பாதித்தது. அவர் அந்த இருண்மையான காலத்தில், அதிலிருந்து வெளிவர தனது ஒளிப்பதிவையே நாடினார். ஆயினும், ஷோபாவுடன் மறைந்துபோன கருப்பு-வெள்ளைப் படங்களில்தான் பாலு அவர்களின் ஒளிப்பதிவு சார்ந்த பங்களிப்பு இருப்பதாக ஒளிப்பதிவு மேதை கே.கே. மஹாஜன் அவர்கள் என்னிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார். மஹாஜனின் காலகட்டத்தையொட்டிய மிகச் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் பாலு மகேந்திரா.
சூரிய ஒளியின் கவிதைகள்
தமிழ் ஒளிப்பதிவு அழகியலுக்கு அவர் அளித்திருக்கும் கொடை ‘பேக் லைட் போட்டோகிராபி'. குறிப்பாக, சூரிய உதய அஸ்தமன காலகட்டங்களில் வெளிப்புறங்களில் கேமராவுடன் நேர்க்கோட்டில் மையல் கொள்ளும் சூரிய ஒளியின் ஊடாகக் கதாபாத்திரங்களை உலவவிட்டு, இருட்டுக்கும் வெண்மைக்கும் ஊடாக வாழ்வின் யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஓவியம் புனைவது போன்ற ஒளிப்பதிவு அது.
ஐரோப்பியப் புதிய அலை சினிமாவின் மேல் குறிப்பாக, பிரஞ்சு இயக்குநரான த்ருபோவின்பால் ஈர்ப்பு கொண்ட பாலு, அவருடைய ஒளிப்பதிவாளரான ராவுல் கூதாரின் பரம ரசிகர்.
சுருக்கமான பட்ஜெட்டில், சிக்கனமான செலவில், நல்ல படமெடுக்கத் துடிக்கும் இயக்குநர்களுக்கு ஒளிப்பதிவாளரே முதுகெலும்பு. நமது மண்ணுக்கும் நிலப்பரப்புக்குமே சொந்தமான சந்தியாகாலக் கதிரவனின் கீற்றுகளை நமது ஆழ்மன உணர்வுகளுக்கும் மனவெழுச்சிகளுக்கும் களமாக அமைத்துக் கதையாடலை அந்தக்களனில் சட்டகப்படுத்துவது ஒளிப்பதிவாளரே.
பின்னர், வண்ணத்தில் பாலுவின் வெளிப்புற ஒளிப்பதிவின் அழகியல் சூரிய ஒளியுடன் மஞ்சு நிறைந்த மலைப்பகுதிகள் (மூடுபனி, மூன்றாம் பிறை, ஓலங்கள்) மற்றும் டெலிபோட்டோ லென்ஸுகளைக் கொண்டு கட்புலன் மூலமாக உள்விரிந்து, கதைமாந்தரின் உள்ளுணர்வுகளை வணிகத் திரைப்படங்களிலும் சொல்ல முடியும் என்ற நம்பிக்கை விதைகளைத் தூவியது.
அவரது முக்கியமான படங்களான ‘வீடு' மற்றும் ‘சந்தியாராகம்' பற்றி அண்மையில் வெங்கட் சாமிநாதன் உட்பட சினிமா விமர்சகர்கள் மற்றும் ஆய்வாளர்களின் கட்டுரைகள் அவரது பங்களிப்பை நினைவுகூரும் விதத்தில் அமைந்திருந்தன.
அதைப் பற்றி அவருக்கு நிறைவிருந்தது. சொர்ணம் என்று என்னைச் செல்லமாக அழைத்த பாலுவின் மென்மையான குரல், பல தருணங்களில் உரிமையுடன், ஆவணப் படங்களைவிட யதார்த்தத்தைச் சித்தரிக்கப் புனைவுப் படங்களே சாத்தியங்கள் நிறைந்தவை என்று வாதாடியிருக்கிறது. அவரது படங்களும் அவரது ஒளிப்பதிவும் அதன் பிரத்தியேகத் தனித்துவமும் அந்தக் குரலின் சாட்சியாக என்றுமிருக்கும்.
- சொர்ணவேல், ஆவணப்பட இயக்குநர், திரைப்படப் பேராசிரியர், மிஷிகன் பல்கலைக்கழகம்.
தி இந்து
0 comments:
Post a Comment
Kindly post a comment.