Thursday, November 14, 2013

தஞ்சை, விளாரில், முள்ளிவைக்கால் நினைவு முற்றப் பூங்கா இடித்து அகற்றப்பட்டது

கைது செய்யப்பட்ட உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன்.

 முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்  -  பூங்கா  சுவரை இடிக்கும் காட்சி

முற்றத்தில் தர்ணா போராட்டம் மேற்கொண்ட வைகோ உள்ளிட்டோர்    
   
தஞ்சாவூர் விளாரில் அண்மையில் திறக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முன்பாக 24000 சதுர அடியில் அமைக்கப்பட்டிருந்த பூங்கா மற்றும் சுற்றுச்சுவரை அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு கட்டியதாகக் கூறி, நெடுஞ்சாலைத் துறையினர் புதன்கிழமை அதிகாலை இடித்து அகற்றினர்.

எதிர்ப்புத் தெரிவித்த தமிழ் அமைப்பினர் நெடுஞ்சாலைத் துறை அமைத்த கம்பி வேலிகளை பிய்த்தெறிந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ நெடுமாறன் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் அங்கே நாள் முழுதும் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

2011, ஆகஸ்ட் 25 ம் தேதி இந்த பூங்கா அமைத்துக்கொள்ள நெடுஞ்சாலைத் துறை அளித்த அனுமதி ஓராண்டுக்கு மட்டுமே பொருந்தும். அனுமதியை புதுப்பிக்க கோரிய மனு நிராகரிக்கப்பட்டுவிட்டது என்று நெடுஞ்சாலைத் துறை கூறியபோதிலும், கடந்த இரு ஆண்டுகளாக பூங்காவை மேம்படுத்தியபோதும், அண்மையில் நீதிமன்றத்திலும்கூட ஏன் இது குறித்து சொல்லவில்லை என்று தமிழ் அமைப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

விடியலின்போது இடித்தார்கள்:

இலங்கை முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட 1.50 லட்சம் ஈழத் தமிழர்களின் நினைவாக தஞ்சாவூர் அருகேயுள்ள விளாரில் இந்த நினைவு முற்றம் நவம்பர் 6-ஆம் தேதி திறக்கப்பட்டது. கடந்ச சில நாள்களாக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

புதன்கிழமை காலை 5 மணியளவில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜி. தர்மராஜன் தலைமையில் போலீஸாரும், கோட்டாட்சியர் தேவதாஸ் போஸ் தலைமையில் வருவாய்த் துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர் பொக்லின் இயந்திரங்களுடன் சென்று சுவரை இடித்து, பூங்காவை கையகப்படுத்தினர்.

அப்போது முற்ற வளாகத்தில் தங்கியிருந்த பழ. நெடுமாறன், தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். போலீஸார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் லேசான தடியடி நடத்தி 15 பேரைக் கைது செய்தனர்.

இதனிடையே நெடுஞ்சாலைத் துறையினர் அந்த இடத்தைக் கையகப்படுத்தி, கம்பி வேலி அமைத்தனர். அப்போது, முற்றத்துக்குச் செல்லும் பாதையையும் அடைக்க முற்பட்டதால், தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். பின்னர் கோட்டாட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் பாதையை விட்டு மற்ற இடங்களில் கம்பி வேலி அமைக்கப்பட்டது. மேலும், நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடம் என இரு அறிவிப்புப் பலகைகளையும் அமைத்துவிட்டு 9 மணியளவில் போலீஸார், அலுவலர்கள் திரும்பிச் சென்றனர்.

ஆனால் அப்பகுதியில் திரண்ட தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் சிலர் காலை 10 மணிக்கு நெடுஞ்சாலைத் துறையினர் அமைத்த வேலியையும், அறிவிப்புப் பலகைகளையும் அகற்றி எறிந்தனர்.

அப்போது, சம்பவ இடத்துக்கு வந்த தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் (பொறுப்பு) ஏ. அமல்ராஜ் உள்ளிட்ட போலீஸார், கம்பி வேலியை அகற்றி மறியல் செய்ததற்காக பழ. நெடுமாறன், அய்யனாபுரம் சி. முருகேசன், மதிமுக தலைமை நிலையப் பேச்சாளர் விடுதலைவேந்தன், நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் அ. நல்லதுரை உள்பட 60-க்கும் அதிகமானோரைக் கைது செய்து, நகரில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.

வைகோ தர்ணா:

பின்னர், நண்பகல் 12 மணிக்கு தொண்டர்களுடன் வந்த மதிமுக பொதுச் செயலர் வைகோ உள்ளிட்டோரை போலீஸார் தடுத்தாலும், அவர்கள் முற்றத்துக்குள் சென்று தர்னா போராட்டம் மேற்கொண்டனர்.

ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, அவ்வப்போது கூட்டத்தை கலைந்து போகச் செய்தனர். அச்சாலையில் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன. இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.

நியாயமற்ற செயல்: வைகோ

"ஈழத்தில் தமிழர்கள் சிந்திய ரத்தத்துக்குச் சாட்சியாக இந்த நினைவு முற்றம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முற்றத்துக்குள் யாரும் போகக்கூடாது என போலீஸார் தடுப்பது நியாயமற்றச் செயல். இது சர்வாதிகாரப் போக்கைக் காட்டுகிறது. முள்ளிவாய்க்கால் முற்றம் தமிழர்களின் சொத்து. இதற்குள் செல்லும் மக்களைத் தடுப்பதற்குக் காவல் துறையினருக்கு அதிகாரம் கிடையாது' என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.

அனுமதி ரத்து குறித்த தகவல் இல்லை

பூங்காவுக்கு அளிக்கப்பட்ட அனுமதி ரத்து குறித்த தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றார் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தைச் சார்ந்தவரும், நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளருமான அ. நல்லதுரை.

"இந்தப் பூங்கா அமைக்க 2011 ஆகஸ்ட் 25-ல் அனுமதி வழங்கப்பட்டது. ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க 2012 ஆகஸ்ட் 20-ம் தேதி நெடுஞ்சாலைத் துறையினரிடம் கடிதம் அளித்தோம். அதை அலுவலர்கள் வாங்க மறுத்துவிட்டனர். அதேசமயம் இந்த இடத்தைக் காலி செய்யுமாறு முன்னறிவிப்பும் கொடுக்கவில்லை.

எனவே, கடந்த 2 ஆண்டுகளாக இந்தப் பூங்காவை மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதற்கு நெடுஞ்சாலைத் துறையினர் தடையேதும் சொல்லவில்லை.

அண்மையில் உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கிலும் இந்த இடம் ஆக்கிரமிப்பில் உள்ளதாக அரசுத் தரப்பில் முன் வைக்கப்படவில்லை. இப்போது, இந்தப் பூங்கா சுவரை இடிப்பது குறித்த தகவலையும் முன்னதாகவே தெரிவிக்கவில்லை என்றார் அவர்.

சட்டவிரோத நடவடிக்கை: பழ. நெடுமாறன்

"இந்தச் செயலில் மத்திய, மாநில அரசுகள் இணைந்துதான் ஈடுபடுகின்றன. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தமிழக முதல்வர் பேசுவதும், பிரதமருக்கு கடிதம் எழுதுவதும், சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவதும் நாடகம் இப்போது தெரிய வருகிறது.

இந்த முற்றத்தை நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து பார்த்துச் செல்வதால், இனிமேல் இது இருக்கக்கூடாது என்பதற்காக இந்தச் செயலில் ஈடுபடுகின்றனர். இதைக் கண்டித்து, தோழமைக் கட்சிகளுடன் இணைந்து விரைவில் தமிழக மக்களைத் திரட்டி பெரும் போராட்டம் நடத்தப்படும்' என்றார் பழ. நெடுமாறன். 

நன்றி :- தினமணி-14-11-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.