Monday, November 18, 2013

வானம்பாடிக் கவிஞர் சேலம் தமிழ்நாடன் மறைவு




சேலம் தமிழ்நாடன் அவர்கள் இன்று (09.11.2013) பிற்பகல் இரண்டு மணியளவில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

1941 ஆம் ஆண்டு சூலைத்திங்கள் ஒன்றாம் நாள் இருசாயி(எ) கமலபூபதி அம்மையாருக்கும் ஆறுமுகம் அவர்களுக்கும் மகனாகப் பிறந்தவர் சேலம் தமிழ்நாடன். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்பதாகும். தொடக்க,உயர்நிலைப் பள்ளி வகுப்புக் கல்வியைச் சேலத்தில் படித்தவர். 1959 இல் சேலம் கல்லூரியில் படித்தவர். 1962 இல் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்.17.09. 1964 இல் ஆசிரியர் பணியில் இணைந்தார். இக்காலகட்டங்களில் கவிதை எழுதத் தொடங்கியவர். இதே காலகட்டத்தில் தமிழர் தந்தை ஆதித்தனார் தொடர்பு ஏற்பட்டது. 1965 இல் இந்தி எதிர்ப்புப் போராட்ட மாணவர் தலைவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. 1966 இல் எழுத்து சி.சு. செல்லப்பா அவர்களின் தொடர்பு ஏற்பட்டது.

1968 இல் கலைவாணி அவர்களை இல்வாழ்க்கைத் துணைவியாக ஏற்றவர். ஒரு மகனும்(மறைவு), ஒரு மகளும் மக்கட் செல்வங்களாக வாய்த்தனர்.

1972 இல் புதுக்கவிதைக்கான வானம்பாடிக் கவிஞராக அறிமுகம் ஆனார். 1985 இல் சேலத்துச் செம்மல் விருது பெற்றவர். 1995 இல் திருப்பூர்த் தமிழ்ச்சங்க விருது பெற்றவர். சாகித்திய அகாடமி விருது இவரின் ஒரிய கவிதை நூல் மொழி பெயர்ப்பிற்காகப் பெற்றவர்.

30.06.1999 இல் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெற்றவர்.

தமிழ்நாடன் அவர்கள்  பெரியார் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழி ஆய்வுப் பேராசிரியராகப் பணியாற்றியவர். இவர் ஓர் அறிஞர் – கலைஞர் – ஓவியர் – சிற்பக் கலைஞர் – தோல் சிற்பக் கலைஞர் – நாட்டார் சொல் கவிதை வழக்கு கலை இலக்கிய கர்த்தா – தமிழர் பண்பாட்டு நாகரிகத் தொன்மை விளக்கப் படைப்புகளை ஏராளமாக படைத்திருக்கிறார் - அல்லும் பகலும் ஆய்வுகளிலேயே நேரத்தை செலவிடுபவர் – சேலத்தின் தொன்மை சிறப்பை – அருங்காட்சியகத்தைவிட அதிகமான செய்திகளை நினைவில் நிறுத்தி பகிரக்கூடியவர்.

எழுபத்தியிரண்டாம் அகவையில் இயற்கை எய்திய சேலம் தமிழ்நாடன் அவர்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி எழுத்தாளராக, ஓவியராக, கவிஞராகப் பன்முகத் தன்மையுடன் தமிழுலகில் அறியப்பட்டவர்.

    தொல்லியல் களப்பணியாளர், பன்னாட்டார் பட்டயம் எனும் செப்பேடு கண்டறிந்து பதிப்பித்தவர்.



    கர்னல் ரீடு அறிக்கையை (கி.பி. 1800) முதன் முதலாக முழுவடிவத்தில் வெளியிட்டவர்.



    -பாவேந்தரின்  குமரகுருபரர் (1944) நாடகத்தைக் கண்டுபிடித்து முதன் முறையாக அச்சேற்றியவர் (2000).



    சேலத்தில் பரிதியார் உரையோடு திருக்குறள் சுவடி கண்டறிந்தவர்.



    தமிழ் மொழியின் முதல் அச்சுப் புத்தகத்தை முழுதாக மறு அச்சு செய்தவர். (1995). தஞ்சையில் நடைபெற்ற உலகத் தமிழ்மாநாட்டின் சிறப்பு வெளியீடாக வந்து தமிழ்மக்களின் மதிப்பினைப் பெற்ற நூல்.



    கொங்கு மண்டலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வரங்குகள் நடத்திய கொங்கு ஆய்வகத்தின் பொதுச் செயலர் (1980).



    கொங்கு ஆய்வகம் கல்லூரி மாணவர்க்கு நடத்திய முகாம்களில் பங்களித்த துறை வல்லுநர்.அதன் வெளியீடுகளின் தொகுப்பாளர், பதிப்பாளர். கொங்கு களஞ்சியம் பதிப்பாசிரியர் குழுவினர்.



-தருமபுரி மாவட்டத்தில் இயங்கும் விவேகானந்தா அறக் கட்டளைச் செயற்குழுவினர், அதன் பல்வேறு கருத்தரங்குகளின் முன்னவர்.

    கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மைய ஆய்வர்.
    பழங்குடி மக்கள் ஆய்வுகளில் ஈடுபாடு கொண்டவர்
    புலவர் இராசு ஆவர்களுடன் இணைந்து பல அகழ்வாய்வுகளில் ஈடுபட்டுவர்.
    கொடுமணல் அகழ்வாய்வுப் பணியில் புலவர். செ.இராசுவுடன் இணைந்து பணியாற்றியவர்.
    சேலத்துச் செம்மல் தமிழ்நாடன் நடுவண் அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்.
    தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றவர்
    கவிஞர் சிற்பி அறக்கட்டளை இலக்கிய விருது பெற்றவர்



சேலம் தமிழ்நாடன் எழுதிய வரலாற்று நூல்கள்:

    தமிழ்மொழியின் முதல் அச்சுப் புத்தகம் (1995, 97, 2010)
    வள்ளல் கந்தசாமிக் கவுண்டர் *பரமத்தி வேலூர்) (1995)
    பரமத்தி அப்பாவு (1800 இல் வெள்ளையரை எதிர்த்த வீரைன் வரலாறு)
    சேலம் : கலையும் இலக்கியமும் (1995)
    சேலம் திருமணி முத்தாறு (2006, 2010)
    கொங்கு நாட்டில் கும்பினி ஆட்சி, புதுமலர், ஈரோடு (2009)
    2000 yeas of Salem (1976)
    The Story of India Indra 1975
    அன்புள்ளம் அருணாசலம் 2005
    சேலம் மையப்புள்ளி 2010



தொகுத்த நூல்கள்

    South Indian Studies (1981)
    சேலம் மாவட்டம்: சில ஆய்வுகள், காவ்யா(1988)
    தருமபுரி மாவட்டம்:புதிய ஆய்வுகள், விவேகானந்தா (1996)
    தமிழ்நாட்டு மலைவாழ் பழங்குடி மக்கள் (1996)
    தாரமங்கலம் கெட்டி முதலி அரசர்கள் (1996)
    கொங்குக் களஞ்சியம், மெய்யப்பன் ( 2008)


அண்மையப் படைப்பு – ”அல்குல்” – காவ்யா வெளியீடு – கரிசல் கதைசொல்லி கி.ராவின் முன்னுரையோடு அமைந்த நூல். அருமையான வெளிப்பாடு – இதன் பதிவுக்குச் சங்க இலக்கியம் – மேலை நாட்டு மொழி அறிஞர்களின் மனப்பதிவுகள் - எடுத்துக்காட்டுகள் - இடுகுறிகள் என ஒரு சங்க இலக்கிய திறனாய்வுக் கண்ணோட்ட்த்துடன் எழுதி இருக்கிறார்.

கட்டுரை ஆக்கியவர்
முனைவர் மு.இளங்கோவன்

http://muelangovan.blogspot.in/
 
வலைப்பூவிலிருந்து மீள்பதிவு

0 comments:

Post a Comment

Kindly post a comment.