Wednesday, November 13, 2013

எழுத்தை மட்டும் தொழிலாகக் கொண்டால் பட்டினிதான் மிஞ்சும் -ஸ்ரீவேணுகோபாலன் என்கிற புஷ்பாதங்கதுரை

எழுத்தாளர் இருவர் மறைந்தனர்

காலம் நமக்கு மிகப்பெரிய கண்ணாடியாகவே இருந்து வருகிறது.  "நியூ வேவ்' எழுத்தாளர் ஒருவரை நீங்கள் "நேருக்கு நேர்' நிகழ்ச்சியில் சந்திக்கப் போகிறீர்கள்... நிறைய வினாக்களோடு சூடான விவாதத்திற்கு தயாராகுங்கள்'' என்றார் வானொலி இளையபாரத நிகழ்ச்சி பொறுப்பாளராக இருந்தவர். அதுவே வானொலியில் எனது முதல் நேர்காணல்.

 புஷ்பா தங்கதுரை என்ற புனைபெயரில் இருப்பவர் யார் என்பதையே "தினமணி கதிர்' ரொம்பவும் ரகசியமாக வைத்திருந்தது. அன்று அந்த வானொலி நிகழ்ச்சிக்கு வந்த புஷ்பா தங்கதுரை, ஸ்ரீவேணுகோபாலன்தான் என்பதை அந்த நிகழ்ச்சி வாயிலாகவே முதன்முதலில் வெளிப்படுத்தினோம். என்னோடு அன்று அந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் "சலன்' உடன் இருந்தார்.

 அந்த பரபரப்பான நிகழ்ச்சிக்குப் பிறகு பலமுறை ஸ்ரீவேணுகோபாலனை நான் மேற்கு மாம்பலம் சீனிவாசா தியேட்டருக்கு பின்புறம் இருந்த வீட்டில் சந்தித்திருக்கிறேன்.அவரது அன்புக்குரிய தாயார் மெலிந்த தேகத்தோடும், கூன் விழுந்த முதுகோடும் வயது முதிர்ந்த நிலையில் உடனிருந்தார்.

 ஒவ்வொரு சந்திப்பின்போதும் எனக்கு அருமையான காப்பி கிடைப்பதோடு, கூடவே ஒரு எச்சரிக்கை மணியும் அவரிடமிருந்து கேட்டுக்கொண்டே இருக்கும்.

 "எழுத்தை மட்டுமே தொழிலாகக் கொண்டு விடாதே. உன்னை சென்னையிலிருந்து அது துரத்திவிடும். நான் அஞ்சல் துறையில் இருந்து எழுத்துலகுக்கு வந்தவன். எழுத்தை மட்டுமே இன்று தொழிலாகக் கொண்டால் பட்டினிதான் மிஞ்சும்' என்று எச்சரிப்பார்.
 "ஜூன்-16', "நந்தா என் நிலா', "ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது' போன்ற திரைப்படங்கள் இவரது நாவல்களில் இருந்து உருவானவை. "மல்லிகை பதிப்பகம்' என்று தியாகராய நகர் அஞ்சல் அலுவலகத்தின் பக்கத்துத் தெருவில் இருந்தது. அங்கேதான் "நந்தா என் நிலா' வளரத் தொடங்கி இருந்த சூழலில் அந்தக் குழுவினரோடுதான் புஷ்பா தங்கதுரையை சினிமா எழுத்தாளராக மீண்டும் நான் சந்தித்தேன்.

 பின்னர் வார இதழ் ஒன்றின் பொறுப்பில் நான் இருந்த காலத்தில் அவர் கே.கே. நகருக்கு இடம்பெயர்ந்திருந்தார். தொடர்ந்து தொடர் வாங்க; சன்மானம் தரவென்று பலமுறை அவரைப் பார்க்க நான் போனதுண்டு. அப்போது  அவரது தாயார் படமாகி நடு ஹாலில் நாற்காலி போன்ற ஒரு அமைப்பில் புதுப்பூக்கள் புடைசூழ, ஊதுபத்தி மணம் கமழ வைக்கப்பட்டிருந்தார்.

  புஷ்பா தங்கதுரை ஒரு சாப்பாட்டு பிரியர் என்பதோடு நல்ல சமையல் கலை தெரிந்த மனிதராக எனக்கு அந்த காலகட்டத்தில் தெரிந்தார். தான் திருமணம் செய்து கொள்ளாததற்காக அவர் கவலை கொண்டதில்லை.

 ஸ்ரீவேணுகோபாலனாக இவர் எழுதிய படைப்புகளுக்கும் புஷ்பா தங்கதுரையாக எழுதிய "நியூவேவ்' எழுத்துக்கும் கொஞ்சம்கூட தொடர்பே இருக்காது. இரண்டு வெவ்வேறு எழுத்தாளர்கள் எழுதுவதாகவே நம்பத் தோன்றும். இரண்டும் இருவேறு கோணங்கள்!

 சிறைக்கதைகள் - சிகப்பு விளக்கு கதைகள் - மனநோயாளிகளின் உண்மைக் கதைகள் என்று புஷ்பா தங்கதுரையாக இவர் எழுதிய கதைகள் புகழ்பெற்றது போலவே ஸ்ரீவேணுகோபாலனாக "மதுரா தரிசனம்', "திருவரங்கன் உலா', "சத்தியமே சாயி' ஆகியவை பலமுறை பலரால் படிக்கப்பட்டு வந்திருக்கிறது. பல வீடுகளில் இந்த நூல்கள் நூலக அடுக்குகளில் இன்றும் இருப்பதைப் பார்க்கிறேன்.

  சமீப சில ஆண்டுகளில் பல இலக்கிய நிகழ்வுகளில் இவரை நான் அதே உற்சாகத்தோடு சந்திக்க நேர்ந்ததுண்டு. அப்போது கருணையோடும் வாஞ்சையோடும் எனது கைகளைப் பற்றிக் கொண்டு "வீட்டுப்பக்கம் வாய்யா...' என்பார். ஏனோ அவரை சந்திக்கிற முயற்சி தள்ளிக்கொண்டே வந்து... இன்று தவறிப்போனது.

மிகக் கடைசியாக இவர் எழுதிய கட்டுரை தினமணி தீபாவளி மலரில் இடம் பெற்றிருந்தது.
 தமிழ் எழுத்துலகில் இருவேறு எழுத்தாளர்கள் இன்று ஒரே நாளில் மறைந்து போய்விட்டார்கள். இது பேரிழப்பு. ஆன்மிக வரலாற்று கதை வாசிப்போருக்கு ஸ்ரீவேணுகோபாலனின் மரணம் மிகப்பெரிய இழப்பு என்றால் "புஷ்பா.. உன்னைப் போல் எழுத யாரால் முடியும்?' என்றே இன்னொரு பக்கம் இளைய மனங்கள் கேட்கின்றன.                                                

கட்டுரையாளர் :-குடந்தை கீதப்பிரியன்

நன்றி :-தினமணி,12-11-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.