Thursday, October 17, 2013

போதுமே நாடகங்கள்! -சமஸ் -தொடர்புக்கு: writersamas@gmail.com


 பெரிதும் மதிக்கும் மூத்த பத்திரிகையாளர் ஒருவரிடம் கேட்டேன்: “எனக்குத் தெரிந்து காமன்வெல்த் அமைப்பு உருப்படியாக எதையும் செய்ததில்லை. உங்கள் அனுபவத்தில் அப்படி ஏதும் ஞாபகத்தில் இருக்கிறதா?”

அவர் சொன்னார்: “இங்கிலாந்து ராணியிடமே இந்தக் கேள்வியைக் கேட்டாலும், அவரும் ‘இல்லை’என்றுதான் சொல்வார்.”

உண்மை.

இங்கிலாந்து பேரரசின் முன்னாள் காலனி நாடுகளுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான அரசுத் தொடர்புகள் நீடிக்க முக்கியமாக, இங்கிலாந்தின் வியாபார நலன்கள் பாதிக்கப்படக் கூடாது என்கிற நோக்கில் தொடங்கப்பட்ட அமைப்பே காமன்வெல்த். காலனிய ஆதிக்க அடிமைத்தனத்தின் நீட்சியான இந்த அமைப்பில் இப்போது 53 நாடுகள் உறுப்பினராக இருக்கின்றன. இந்த நாடுகள் எந்தச் சட்டத்தாலும் இணைக்கப்படவில்லை. முழுக்க சுயவிருப்பத்தின் அடிப்படையிலான இணைப்பு. உலகப் பரப்பளவில் நான்கில் ஒரு பகுதி அளவுக்கு மட்டுமே உள்ள இந்த நாடுகளில்தான் உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதி இருக்கிறது. 9.767 டிரில்லியன் டாலர்கள் உற்பத்தி மதிப்பைக் கொண்ட இந்தச் சந்தைதான் காமன்வெல்த்தைப் பிணைத்திருக்கும் ஆதார சுருதி. கலாசாரம், மனித உரிமைகள் என்றெல்லாம் வெளியே கூவினாலும், தடையற்ற வர்த்தக மண்டலம், விசா தேவைப்படாத சுற்றுலா அனுமதி, பொதுவான வெளியுறவுக் கொள்கை போன்ற பொருளாதார நலன்களும் சர்வதேச அரசியல் அபிலாஷைகளுமே காமன்வெல்த்தின் இருப்பைத் தீர்மானிக்கின்றன.

தன்னுடைய உறுப்பு நாடுகள் அனைத்துக்கும் சம உரிமையையும் அந்தஸ்தையும் காமன்வெல்த் வழங்குகிறது. எந்த நாட்டையும் இதிலிருந்து யாரும் வெளியேற்ற முடியாது. கொடும் குற்றங்களில் உறுப்பு நாடுகள் ஈடுபட்டாலும்கூட, குறிப்பிட்ட காலகட்டதுக்கு இடைநீக்கம் மட்டுமே செய்ய முடியும். ஒருவேளை உறுப்பு நாடுகள் தாங்களாக விரும்பினால் தாராளமாக விலகிக்கொள்ளலாம்.

- இப்போது யோசித்துப்பாருங்கள். இப்படிப்பட்ட ஓர் அமைப்பின் மாநாட்டை இலங்கை நடத்தக் கூடாது என்பதிலோ, அதில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதிலோ, இலங்கையை இந்த அமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என்பதிலோ - இலங்கைத் தமிழர்கள் நலன் சார்ந்து - ஏதாவது பைசா பிரயோஜனம் இருக்கிறதா?

இந்தக் கோரிக்கைகளுக்காகத்தான் நீரிழிவு நோய்க் கொடுமையையும் சுமந்து தமிழக தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலர் தோழர் தியாகு 15 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கிறார். ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் என்று வரிசையாக தமிழகத்தின் முன்னணிக் கட்சித் தலைவர்களும் தமிழ்த் தேசியவாதிகளும் அவருடைய கோரிக்கைக்கு ஒத்தூதுகின்றனர் (உள் அரசியலைக் கவனிக்க: நெடுமாறனைக் காணவில்லை). உச்சகட்டமாக தி.மு.க. தலைவர் கருணாநிதி பிரதமருக்கே ஆள் அனுப்புகிறார். பிரதமரும் அசராமல், “கொழும்பில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது தொடர்பான எந்த முடிவும் தமிழ் மக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டே எடுக்கப்படும்” எனப் பதில் கடிதம் அனுப்புகிறார். நம்முடைய அரசியல்வாதிகளின் அக்கறையில் சிலிர்த்துப்போகிறான் சாமானியத் தமிழன்!

நாடக அரசியல் நம்முடைய அரசியல்வாதிகளுக்குப் புதிதல்ல. இன்னும் எவ்வளவு காலத்துக்கு இலங்கைத் தமிழர்களை அதற்குப் பயன்படுத்தப்போகிறோம் என்பதுதான் கேள்வி.

போர் தந்த கொடும் இழப்புகளுக்கும் பெருந்துயரத்துக்கும் பிறகு, மீள் குடியேற்றத்தில் உள்ள பிரச்சினைகள், ராணுவமயமாக்கல், சிங்களமயமாக்கல், பொருளாதார நெருக்கடிகள்... இவ்வளவுக்கும் நடுவில், கால் நூற்றாண்டுக்குப் பின் இப்போதுதான் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடந்திருக்கிறது. 70% மக்கள் அதில் வாக்களித்திருக்கிறார்கள். மொத்தம் உள்ள 38 இடங்களில் 30 இடங்களில் வெற்றியைக் குவித்திருக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட சி.வி. விக்னேஸ்வரன் விருப்ப வாக்குகள் பட்டியலிலும் முதலிடம் பெற்றிருக்கிறார். விக்னேஸ்வரனின் வெற்றி அவர் மீது தமிழ் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கான அத்தாட்சி மட்டும் அல்ல; அவர்களுடைய இன்றைய எண்ணங்களின் உறுதியான போக்கையும் பிரதிபலிக்கின்றன.

முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் தொடங்கி, துணிச்சலான கருத்துகளை முன்வைக்கிறார் விக்னேஸ்வரன். தமிழகத்தின் தமிழீழ ஆதரவாளர்கள் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கை விவகாரம் கணவன் - மனைவிக்கு இடையிலான பிரச்சினையைப் போன்றது; இதில் பக்கத்து வீட்டுக்காரர் புகுந்து தம்பதிக்குள் விவாகரத்து கோர முடியாது; மேலும், அது தமிழகத் தலைவர்களின் வேலையும் அல்ல” என்றார். இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழகத்தில் முதல் குரல் எழுந்தபோதே, “இந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும். எதிலும் ஒதுங்கியிருந்து சாதிக்க முடியாது; இந்த மாநாட்டில் பங்கேற்று தமிழர்கள் நலன் சார்ந்து இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்றார். தேர்தலுக்குச் சில நாட்கள் முன்னர், “நாங்கள் கேட்பது பிரிவினையை அல்ல; சுயாட்சியை” என்றார். இவ்வளவுக்கும் பிறகுதான் பிரமாண்ட வெற்றியை விக்னேஸ்வரனுக்குத் தமிழ் மக்கள் அளித்துள்ளனர்.

தேர்தலுக்குப் பின், “மாகாண சபைகளுக்கு நில நிர்வாகம், காவல் துறை நிர்வாக அதிகாரம் கிடையாது” என்று இலங்கை அரசு அறிவித்தபோது இந்தியாவின் தலையீட்டைக் கோரினார் விக்னேஸ்வரன். இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் சமீபத்திய இலங்கைப் பயணத்தைத் தமிழக அரசியல் கட்சிகள் தோல்வி என்று வர்ணித்த நிலையில், “இந்தியா கொடுத்த அழுத்தங்களினால்தான், வடக்கு மாகாண சபைக்குத் தேர்தல் நடத்தப்பட்டது. நான் இன்றைக்கு முதல்வராக நிற்கிறேன் என்றால், அதற்கு இந்தியாதான் காரணம். இந்தியா எந்த அளவுக்கு உதவ முடியும் என்பது நுட்பமான விவகாரம். நாங்கள் காத்திருக்கிறோம்” என்றார். சமீபத்தில்கூட, “நீண்ட காலத் திட்டங்கள் அனைத்தும் அரசியல் அபிலாஷைகள். அவற்றை உடனடியாக நிறைவேற்றுவது கடினம். போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவது, அவர்களின் புனர்வாழ்வுப் பணிகள் ஆகிய குறுகிய காலப் பணிகளே இன்றைய உடனடித் தேவைகள்” என்று பேசியிருக்கிறார்.

இவை எல்லாம் விக்னேஸ்வரனின் குரல் மட்டும் அல்ல. இலங்கைத் தமிழர்களின் குரலாகவும் நாம் கொள்ள வேண்டும். போருக்குப் பின் அங்கு நிரந்தரமான அமைதி ஏற்பட சர்வதேசச் சமூகம் குறிப்பாக இந்தியா - தொடர்ந்து வலியுறுத்திவந்த விஷயம் அதிகாரப் பகிர்வு. இலங்கைப் பிரச்சினையில் ஆரம்பம் முதலே, மாகாணங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்றும் அவற்றுக்கு அதிகாரங்கள் பிரித்தளிக்கப்பட வேண்டும் என்றும் இந்தியா தீர்வை முன்வைத்துவருகிறது. இன்றுவரை சிங்கள இனவாத அரசியலின் நடுவே அது சாத்தியமாகவில்லை. மாகாணங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாகச் சமீபத்தில் பேசிய இலங்கை அரசு, “அனைத்து மாகாணங்களுக்கும் சமமான அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என்று அறிவித்திருக்கிறது. போரினால் சிதைந்த வடக்கு மாகாணத்தை மறுநிர்ணயம் செய்யக் கூடுதலான நிதியை விக்னேஸ்வரன் எதிர்பார்க்கிறார். ராணுவமயமாக்கல், சிங்களக் குடியேற்றத்தைக் குறைக்க வலியுறுத்துகிறார்.

தமிழக அரசியல்வாதிகளுக்கு இலங்கைத் தமிழர்கள் மீது உண்மையான அக்கறை இருக்கும்பட்சத்தில், நாம் இப்போது குரல் கொடுக்க வேண்டிய விவகாரங்கள் இவைதான். ஆனால், அவர்களுக்குப் பைசா பிரயோஜனம் அற்ற, இன்னும் சொல்லப்போனால், தீங்கிழைக்கும் வெறுப்பு அரசியலையே முன்னெடுக்கின்றனர் தமிழக அரசியல்வாதிகள். ஏன்?

உண்மையில், விக்னேஸ்வரனின் எழுச்சி தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களை வைத்துப் பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளைக் கலக்கத்தில் தள்ளியிருக்கிறது. புலம்பெயர் தமிழர்களின் கவனமும் இப்போது தமிழக அரசியல்வாதி களிடமிருந்து இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளை நோக்கிச் செல்வது நம்மாட்களின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. “விக்னேஸ்வரன் முதல்வரானதால், தமிழர்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை” என்று வைகோவும், “புலியின் இடத்தைப் பூனைகள் நிரப்ப முடியாது” என்று சீமானும் பிலாக்கணம் வைக்க இதுவே காரணம்.

“போருக்குப் பின்னரான காலகட்டத்தில் எம் மக்கள் அனைத்தையும் இழந்த நிலையில் வாழ்ந்துவருகிறார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பலவற்றால் அடிபட்டு தமது சுய கௌரவத்தை இழந்திருந்த மக்கள் தற்போதுதான் எழுந்து நிற்கிறார்கள். தங்கள் தங்கள் சுயலாபங்களுக்காக மக்களை மீண்டும் கலவரத்துக்குள் திணிக்கக் கூடாது என்பதுடன், ஒரு வன்முறைக் காலத்தைத் தாண்டி வந்துள்ளோம் என்பதையும் யாரும் மறந்துவிடக் கூடாது” என்று சில நாட்களுக்கு முன் கூறியிருக்கிறார் விக்னேஸ்வரன். தமிழகத் தலைவர்கள் கொஞ்ச நாட்களுக்கேனும் அந்த அபலைகளை விட்டுவைக்க வேண்டும்!            

தி இந்து - 17-10-2013

1 comments:

  1. எப்படி குரல் கொடுக்காமல் இருக்க முடியும். உணர்ச்சிகளைத்தூண்டி பதவி பணம் சம்பாதிப்பவர்கள் சிரங்கு கைக்காரன் சொறிந்து கொண்டுதான் இருப்பார்கள்.

    ReplyDelete

Kindly post a comment.