Friday, October 11, 2013

தபால் சேவை அவசியம் தேவை : அஞ்சல் நிலையங்கள் அனைத்தும் மக்கள் வங்கிகளாகட்டும் !
நவீன தொழில்நுட்பங்கள் வளர்ச்சியால் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ‘புதியன புகுதலும் பழையன கழிதலும்’ என்பதற்கேற்ப, சில தொழில்கள் மறைந்து வருகின்றன. தகவல் பரிமாற்றத்தில் பெரும்பங்கு வகித்த தபால் துறையும் அதிலிருந்து தப்பவில்லை. 

தபால்களை கையாள்வதில் தபால் பெட்டிகளின் பங்கு மகத்தானது. இருக்கும் இடத்தின் அருகிலேயே, அனுப்ப வேண்டிய தபால்களை போடுவதற்கு, தபால் பெட்டி வசதிகள், ஆங்காங்கே ஏற்படுத்தப்பட்டுள்ளன. இ-மெயில், எஸ்.எம்.எஸ். போன்ற பல்வேறு நவீன மாற்றங்கள், தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்டாலும், கடிதம் மூலம் அனுப்பப்படும் செய்திகள், தகவல்கள் மிகவும் உணர்ச்சியுடையவை என்பதை மறுக்க முடியாது. 

வளர்ந்த கதை
 
இங்கிலாந்தில், லோங்வில்லி மாகாண போஸ்ட் மாஸ்டர் ஜெனரல், மினிஸ்டர் ஃபாகத் என்பவரது மனைவியின் யோசனையில், முதல் தபால் பெட்டி 1653-ம் ஆண்டு அறிமுகமானது. தபால் பெட்டிக்கு மாதிரி வடிவத்தை கொடுத்தவர் சார்லஸ் ரீவ்ஸ். 

1851-ல் பிரிட்டிஷ் அரசு, அந்தோணி ட்ரோலயி என்ற நாவலாசிரியரை பிரிட்டிஷ் தபால் இலாகாவின் பணி மேம்பாட்டு அதிகாரியாக நியமித்தது. அவரது ஆய்வின் பயனாக, லண்டன் நகர் மற்றும் பல நகரங்களில் ஐந்தடி உயரமுள்ள இரும்புத்தூண் தபால் பெட்டிகள் வைக்கப்பட்டன. பிரான்ஸ் நாட்டில் அறிமுகமான தபால் பெட்டிகளைப் பின்பற்றி பிரிட்டிஷ், பெல்ஜியம், ஜெர்மனி நாடுகளில் தபால் பெட்டிகள் பரவலாயின. இவையெல்லாம் அதிகபட்சம் ஐந்தேகால் அடியாகவும், குறைந்தபட்சமாக நான்கு அடியாகவும் இருந்தன. ஜெர்சி மாகாணத்தில் 1852-ல் நான்கு தூண் தபால் பெட்டிகள் வைக்கப்பட்டன. 

பொதுமக்களை பெரிதும் ஈர்த்தது பிரிட்டிஷ் அரசின் தபால் பெட்டிகள். பிரிட்டிஷ் அரசின் சின்னமும், பிரிட்டிஷ் தபால் துறையின் ராயல் மெயில் சின்னமும் தபால் பெட்டிகளின் மேல்பாகத்திலும், முகப்பிலும் இடம்பெற்றன. மெயில் ரயில்கள், மெயில் பஸ்கள் போன்ற வாகனங்களிலும் தபால் பெட்டிகள் இடம்பெற்றன. 

மக்களின் கவனத்தை ஈர்க்க, தபால் பெட்டிக்கு பிரிட்டிஷ் அரசு தந்ததுதான் இந்த சிவப்பு வர்ணம். உலகிலுள்ள அனைத்து தபால் பெட்டிகளுக்கும் இந்த நிறத்துக்கு மாறின. இதுவே, ‘போஸ்ட் ஆபீஸ் ரெட்’ என்று பிரபலமானது. உள்ளூர் கடிதங்களைப் போட அறிமுகமானதுதான் பச்சை நிற தபால் பெட்டிகள். 

இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சி நடைபெற்று வந்தாலும், 83 சமஸ்தானங்கள் தங்களுக்கான தபால் சேவையை நிர்வகித்து வந்தன. 1837ல் இந்திய தபால் சட்டம் இயற்றப்பட்டபோது, பல்வேறு சமஸ்தானங்கள் படிப்படியாக, பிரிட்டிஷ் அரசு சேவையின் கீ்ழ் கொண்டு வரப்பட்டன. 

முதல் தபால் பெட்டி 

உதகமண்டலம் தபால்நிலையம் 1826-ல் ஆரம்பிக்கப்பட்டது. 1855-ம் ஆண்டு உதகைக்கு லண்டனிலிருந்து பில்லர் லெட்டர் பாக்ஸ் கொண்டு வரப்பட்டது. இதுவேதான் லண்டனிலிருந்து, இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட முதல் தபால் பெட்டி. 1856-57 ஆண்டுகளில், லண்டனிலிருந்து பெருவாரியான தபால் பெட்டிகள் இறக்குமதி செய்யப்பட்டன. 

தார்லார் சமஸ்தானத்தில், 4 அடி 3 அங்குலம் உயரம் கொண்ட மரத்திலான தபால் பெட்டிகள், எட்வர்ட் ஆட்சிக்காலத்தில் வைக்கப்பட்டிருந்தன.
1890-ம் ஆண்டுவாக்கில் வெறும் 200 தபால் பெட்டிகள் இருந்த இந்தியாவில், 

1913-14-ம் ஆண்டில் 49,131 தபால் பெட்டிகளாக அதிகரித்தது. தற்போது, தபால் பெட்டிகளின் எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் மேலாகிவிட்டது. தபால் நிலையங்களைவிட தபால் பெட்டிகளின் எண்ணிக்கை, நான்கு மடங்காக உள்ளது. இந்தியாவில் உள்ள தபால் நிலையங்களின் எண்ணிக்கை 2011-ம் ஆண்டில் 1,54,866. 

கடந்த 1984-ம் ஆண்டு, தபால் துறையில், சிறந்த சேவை, அர்ப்பணிப்புக்காக “மேகதூது” என்ற விருது அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகமான முதல் ஆண்டில் இந்த விருதுக்கு 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த நா.ஹரிகரன். கோவையில் வசிக்கும் இவர், தபால் துறையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி, ஓய்வுபெற்றவர். 

உற்ற நண்பன்
 
தற்போது, தபால் பெட்டிகளை சரிவர பராமரிப்பதில்லை. ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் தபால் பெட்டிகளை வைத்திருப்பதும், மரத்தில் கட்டிப்போட்டிருப்பதுமாக, முக்கியத்துவமே தரப்படாமல், பெயரளவில் உள்ளன. கிராமப் பகுதிகளில் இன்றும் தபால் பெட்டிகள், அவர்களுக்கு உற்ற நண்பனாக இருக்கின்றன. 

கடந்த காலங்களில் வேலை நியமனம், நேர்காணல் போன்ற அனைத்துத் தகவலும் தபால்களில்தான் வரும். இன்றும் ‘பாஸ்போர்ட்’ தபால்களில் மட்டும்தான் அனுப்பப்படுகின்றன. 

சின்னான்பதி கிராமத்தில், அதிரடிப்படை வீரர்களால், பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், பானுமதி தலைமையிலான கமிஷன் விசாரித்தது. தகவல் தெரிவிக்க எந்த வசதியும் அக்கிராமத்தில் இல்லாமல் இருந்ததால்தான், வெளி உலகத்துக்கு இக்கொடூரம் தெரியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில், உடனே அங்கு தபால் பெட்டி வைக்கப்பட்டது. அவ்வளவு முக்கியத்துவம் பெற்ற தபால் பெட்டிகள், தற்போது குப்பைப் பெட்டிகளோடு சேர்த்து வைத்திருப்பதுதான் வேதனையாக இருக்கிறது. 

தகவல் பரிமாற்றத்துக்கு மலிவானது, இன்றும் கடிதப் போக்குவரத்துதான். 15 பைசா செலவில் தபால் அட்டையில் தகவல் அனுப்பலாம் என்று தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார் நா.ஹரிகரன்.                                                     

தி இந்து, 11-10-2013

1 comments:

  1. அவசியம் தேவை தபால் சேவை அவசியம் தேவை !

    ReplyDelete

Kindly post a comment.