Sunday, October 13, 2013

ஆட்டோ - உள்ளத்தை உருகச் செய்யும் ஓர் சிறுகதை -எழுதியவர் : வையவன், பன்முகத் திறனாளி

https://mail-attachment.googleusercontent.com/attachment/u/0/?ui=2&ik=4eb1736441&view=att&th=141b13a185e24812&attid=0.1&disp=inline&realattid=f_hmq3adjk0&safe=1&zw&saduie=AG9B_P988tMWmkviS9y9IxjlXRtt&sadet=1381674509914&sads=kxwO4SbdQDtEuMuxPkYKG-wHgXs


பத்தே காலுக்குத்தான் அட்சதை தருவார்கள். முகூர்த்தம் ஒன்பது பத்தரை. இருந்தாலும் மித்ரா வீட்டார் மகா சாங்கியக்காரர்கள். ஒரு சடங்கு விட்டு வைக்கவோ அவசரப்படவோ மாட்டார்கள்.
கடைசி கால் மணி நேரத்தில் தான் மாங்கல்ய தாரணம் நடக்கும். மூன்றாம் வருஷம் மித்ராவின் அக்கா சௌம்யா கல்யாணத்தல் போய் உட்கார்ந்து, இப்படி லேட் ஆகி ஆபீசுக்குப் பதினொன்றுக்கோ அதிகமாகவோ போன ஞாபகம்.
கல்யாணி உட்கார்ந்திருந்த ஆட்டோ, டிரைவர் விநாயகம் வீட்டெதிரில் நின்றிருந்தது.
“ஒரு டூ மினிட்ஸ் மேடம்! ஊர்லருந்து தங்கச்சி வந்திருக்கான்னு பையன் வந்து சொல்லிட்டுப் போனான். தலைய காட்டிட்டு வந்துட்றேன்.”
அவள் அனுமதி பெற்றுத்தான் வீட்டிற்குள் போயிருந்தான். 
அது அலுவலகம் போகிற வழி. இரண்டு நிமிஷம் ஐந்து நிமிஷமாகப் போகிறது. டிரைவர் விநாயகம் வரவில்லை.
வரட்டும். பத்து நிமிஷமானாலும் பரவாயில்லை. அவனைக் கடிந்து கொள்ள முடியாது. மாமூல் ஆட்டோ என்பதற்கு மட்டுமல்ல.
மித்ராவின் கல்யாணத்திற்கு அவள் போகப் போவதில்லை. நேராக ஆபீஸுக்குப் போகிறாள். அது அவனுக்குத் தெரியும்.
பாவம் மித்ரா! ரொம்ப எதிர்பார்ப்பாள். தன்னை விட நாலு வயது இளையவள். இருபத்து நாலிலேயே அவளுக்குத் தாலி பாக்கியம் லபித்து விட்டது.
கல்யாணி கசப்போடு சிரித்துக் கொண்டாள். 
இந்தப் பெண்கள் ரேஷன் கியூவில் மண்ணெண்ணெயோ பாமாயிலோ கிடைத்து விட வேண்டும் என்று பறப்பது போல் இந்தக் கல்யாணத்துக்கு என்ன பரபரக்கிறார்கள்.
இத்தனைக்கும் மித்ராவின் அக்கா சௌம்யா கல்யாணம் ஒரு தோல்வி.
கியூவில் மண்ணெண்ணெய் கிடைக்காமற் போனவர்களின் மன இடிவு தனக்கு வந்துவிடக்கூடாது என்று என்ன அலை அலைந்தாள் -
 மித்ரா.கல்யாணத்திற்குக் கட்டாயம் போக வேண்டும். போவாள் என்றுதான் விநா - டிரைவர் விநாயகத்தின் ஆட்டோ ஸ்டாண்ட் பெயர் - எதிர்பார்த்தான். அவள் உயிர்ச் சிநேகிதி என்று விநாவுக்குத் தெரியும்.
ஆட்டோ ஸ்டாண்ட் கல்யாணி வசிக்கிற தெரு முனையில் அவன் ஆட்டோ கொண்டு வந்து நிறுத்தி நாலு வருஷமாகப் போகிறது. அவள் பஸ் சவாரி நிறுத்தி ஆட்டோ ஏறத் தொடங்கி மூன்று வருஷம்.
அவள் குடும்பமே அவனுக்குத் தெரியும். ரிடையராகிப் பென்ஷன் பேப்பர் எங்கோ சிக்கிவிட அதற்கு மல்லாடிக் கொண்டிருக்கும் அப்பா, எப்போதும் வாழ்க்கையைச் சபிக்கிற அம்மா, நாலுபேர் போல சுரிதார் அணிய முடியாமல் சலிக்கிற ப்ளஸ்டூ படிக்கிற தங்கை, பி.எஸ்ஸி. படிக்கும் தம்பி.
எல்லாம் தெரியும்.
அவளது ரிசப்ஷனிஸ்ட் உத்தியோகத்தில், ஒற்றைச் சம்பளத்தில், குடும்பச் சக்கரம் முக்கல் முனகல்களோடு சுற்றுவதும் தெரியும்.
பல கல்யாணங்களுக்கு அவன் ஆட்டோவிலேயே போய் கல்யாணி தலைகாட்டி அட்சதை தூவி மொய் எழுதி வந்திருக்கிறாள்.
அவன் சாட்சி.
அவர்கள் எல்லாம் அவ்வளவு நெருக்கமில்லை. இந்தக் கல்யாணம் அப்படியல்ல. மித்ரா மிக மிக நெருக்கம். எல்லோருக்குமே தெரிந்த விஷயம் அது.
கல்யாணத்திற்குப் போய் நின்றவுடனே ஒப்பீடு தொடங்கிவிடும்.
தான் இருபத்தெட்டில் வெறுங் கழுத்தோடு நிற்க, இருபத்து நாலில் அவள் கழுத்தில் மஞ்சள் கயிறு ஏறுவதை, மௌனமாகவோ வாய்விட்டோ அலசுகிற கூட்டம் எல்லாக் கல்யாண மண்டபங்களைப் போல் அங்கும் இருக்கும். அதற்கே போக விரும்பவில்லை.
வரவர இந்த உணர்வு ரொம்பத்தான் உறுத்துகிறது. தனக்குக் கல்யாணம் ஆகாதது தன் குற்றம் என்கிற மாதிரி.
ஏதோ பெண்ணாகப் பிறந்த ஒவ்பவொருத்தியின் இறுதி லட்சியமே அவளுக்குச் சீக்கிரம் கல்யாணம் ஆகிவிட வேண்டும் என்று அங்கிங்கெனாதபடி எங்கும் பரவிவிட்ட பிரமை.
வேளை வர வேண்டும் என்று வாய்ப் பசப்பலாகப் பேசுகிறவர்களுக்குக் கூட வரத் தாமதிக்கும் அந்த வேளைத் தவறுதலுக்கு, தன் துரதிருஷ்டமே காரணம் என்ற உள்ளெண்ணம்.
விநா மட்டும்தான் அவளை நன்கு புரிந்து கொண்டான். அவன் தன்னை விட மூத்தவன். முப்பத்திண்டு. தன் மாதிரியே குடும்பச் சூழ்நிலை. தன் மாதிரியே, தப்பித்துக் கொண்டு, தன்னலம் தன் சுகம் தேடாமல் குடும்ப வண்டியில் சக்கரம் தள்ளுபவன்.
எத்தனை வகையான ஆண்கள். அலுவலகம், வெளியுலகம். அடடா எத்தனை வழிசல்கள்! எத்தனை பேடி விண்ணப்பங்கள்! எவ்வளவு ஊமைக் காமங்கள்!
இருபத்தெட்டு வரை கட்டு விடாமல், முகப் பொலிவு மங்காமல், ஒரு கல்யாணமாகாத பெண் தென்பட்டால் மனுஷ புத்தி என்னமாய் வக்கரிக்கிறது!
விநாவும் அவளை ஏற்றிச் சென்ற முதல் சவாரியில் இப்படிச் சிறிது அசடு வழிந்திருப்பானோ!
சீச்சீ... அவன் ஜென்டில்மேன்.
ஜென்டில்மேனானால் என்ன? முதலில் ‘மேன்’ ஆண். கல்யாணமாகாதவன்.
நான் பெண். கல்யாணமாகாதவள். அவனுக்கு அப்படி ஓர் எண்ணம். இருந்திருக்கலாம். இப்போது இல்லை. அவனுள்ளிருந்த ‘மேன்’ மாறி ஜென்டில்மேனாகி ரொம்ப நாள் ஆகிவிட்டது.
அவன் எதெதற்கு சாட்சியாக இருந்திருக்கிறான்!
மித்ராவின் அக்கா சௌம்யா விவாகரத்திற்கு, தக்க விவேகமான துணையில்லாததால், வக்கீலிடம் கல்யாணி அலைந்திருக்கிறாள் அவன் ஆட்டோவில்.
கணவனை விட்டு ஓடி வந்து பதினெட்டு நாள் புகலிடம் தேடி வந்தாளே பூர்ணிமா. அந்தக் கணவன் வீட்டுக்குக் கல்யாணி சமரசம் செய்ய அலைந்திருக்கிறாள் அவன் ஆட்டோவில்.
ஐந்தாறு வரன்கள் அவளைப் பார்க்க வந்த போதெல்லாம், அவர்கள் திரும்பிப் போக அவன் ஆட்டோவைத்தான் அமர்த்த வேண்டி வந்திருக்கிறது.
விநா ஒரு நபரல்ல.
இன்னும் துடிக்கும் கருணை, பரிவு, கண்ணியம் என்ற மனுஷத் தன்மையின் சிறு துளித் தத்தளிப்பு. ஒருவேளை அதுவும் வற்றிப் போகலாம். போகட்டும் போ.
“கல்யாணி, உன் கல்யாணம் என்னவாயிற்று? எப்போ எங்களுக்கெல்லாம் சாப்பாடு போடப் போறே? நீயா முயற்சி எடுக்கலேன்னா ஒங்க வீட்டிலே யாருக்கும் ஒறைக்கப் போறதில்லே. கல்யாணி, பருவத்தே பயிர் செய்யணும்மா.”
ஆட்டோக்கார விநாயகத்திற்கும் அவளுக்கும் சிநேகமாம் என்ற கசமுசல், டைனிங் டேபிளில் அவளில்லாத போது ஓடி உலவிய பின் எத்தனை ஞானோபதேசங்கள்!
பொறுக்க முடியாமல் ஒருத்தியிடம் கல்யாணி முகத்திலறைந்தாற் போலச் சொல்லி விட்டாள்.
“த பாரு நீலா! நான் கல்யாணம் பண்ணிக்கறதாயில்லை. அந்த ஆட்டோக்காரனை வச்சிண்டிருக்கேன். நோ ட்ரபிள். போறுமா? நீங்கள்லாம் கல்யாணம் பண்ணி, காதல் பண்ணி என்ன கிழிச்சு எந்தக் குப்பை - என்ன குப்பை கொட்டினீங்க?”
“அடியேய், அடியேய்ய்ய்...” என்று நீலாவுக்கு உடல் நடுங்குவது கண்கூடாய்த் தெரிந்தது. அவள் நம்பி விடப் போவதில்லை. இருந்தாலும் தங்கள் ‘டேபிள்வம்பு’ ரகசியம் தெரிந்து கல்யாணி இந்தப் போடு போடுவாள் என்று எதிர்பார்க்கவில்லை.
ஒரு வாரம் அலுவலகத்தில் அவளைச் சுற்றி மயான அமைதி.
கல்யாணிக்கு ஒரு குரூர திருப்தி, தினவெடுத்த நாக்குகளை ஒரு வாங்குவாங்கிய நிறைவு.
என்ன? வாய் கொழுத்தவள் என்று விமர்சனம் நிலவும்! கவலையில்லை.
இப்படிச் சொன்னதை யாரிடமாவது சொல்லிச் சிரிக்க வேண்டும் போலிருந்தது. விநாவிடமே சொன்னாள், சிரித்துக் கொண்டே.
அவன் சட்டென்று வண்டியை நிறுத்தினான்.
“என்ன விநா?”
மெல்லிய விசும்பல்.
“விநா... விநா... விநா...”
அவன் வாய்விட்டு ஒரு பெண் மாதிரி அழுதான். என்ன இவன்? இவ்வளவு அசடா! இவனைப் போய் ஜென்டில்மேன் கின்டில்மேன் என்று நினைத்தோமே!
ஒருவேளை நான்தான் வெறுப்பேறி வக்கரித்துப் போனேனோ!
சீ, இதைப் போய் இவனிடம்...
ஆனால் இவன் வெறும் இவன் இல்லையே! நானாய் அப்படி நினைத்தேனா?
இப்படிச் சொல்வது அவன் தப்பாக எடுத்துக் கொள்ளத்தானே தூண்டியது போலிருக்குமென்று நினைக்கத் தவறி விட்டேனா..
.
சே, இவன் ஏன் அழுகிறான் இதற்கு?
அன்று ஐந்து நிமிடம் கல்யாணி மௌனமாயிருந்தாள். அப்புறம் தொண்டை கனைத்துப் பேசினாள்.
“ரொம்ப ஸாரி விநா.”
“இனிமே நீங்க வேற ஆட்டோவில் போறதா இருந்தாலும் போங்க மேடம்!” கம்மிய தொண்டை.
“பச்! இதான் கோழைத்தனம். அத விடு நீ ஏன் அழுதே?”
இன்று வரை விநா அதற்குப் பதில் சொல்லவில்லை. அவன் பார்வை, அவன் காட்டும் மரியாதை இவற்றில் ஒரு மாற்றம். கூடுதல் பரிவு. கை கூப்பும் கருணை.
“விநா, எனக்கு இது பிடிக்கலப்பா. பீடம் உயர்த்தி நீயும் என்னை ஒரு விலக்கத்தில் வச்சுடாதப்பா.”
கல்யாணி கெஞ்சவில்லை. பார்த்தாள், புரிந்திருக்கும். ஆனால் அவன் அந்த மரியாதையை மாற்றிக் கொள்ளவில்லை.
திடீரென்று ஒரு நாள் ஆட்டோ பயணத்தில் அவள் சிரித்தாள்.
“என்ன மேடம் சிரிக்கிறீங்க?”
“ஒண்ணு ஞாபகம் வந்தது.”
“சரி!” அவன் பேச்சை நிறுத்திக் கொண்டான்.
“சொல்லட்டுமா?”
“இஷ்டப்பட்டா சொல்லுங்க.”
“ஆமாம். கேட்டுட்டு நீ பொம்பள மாதிரி அழுவே.”
“இல்லே மேடம்!” விநா தேறியவன் போல் சொன்னான்.
“இந்த வேலைக்கு முன்னாடி நான் பொன்னேரி தாலுக்கா ஆபீஸ்ல, டெம்பரவரியா கிளர்க் வேல பார்த்தேன். தெனம் ரெண்டு முறை ஸ்டேஷன் தரிசனம். அப்ப ஒரு சமயம் ஸ்டேஷன்லஒரு கூட்ஸ் என்ன காரணத்தாலோ ரொம்ப நாள் நின்னு போச்சு.
லைன் ஓரமா நடந்து ஸ்டேஷனுக்கு வருவேன். ரெண்டு மாசம். கூட்ஸைப் பாத்தா ஐயோ பாவம்னு இருக்கும். அப்புறம் இது எப்படா கௌம்பிப் போவும்னு எனக்கே ஒரு ‘போரா’ப் போச்சு.”
‘ம்ம், அப்புறம்?”
“ஒருநாள் அது பொறப்பட்டுப் போயிடுச்சு. அப்புறம் ஸ்டேஷன் வெறிச்சோடிப் போச்சு.”
விநா சிரித்தான். ஏன் எதற்குச் சொல்கிறாள் என்று புரிந்து கொண்டான். அழுவதை விடச் சிரிப்பது மேலென்று முதிர்ச்சி வந்திருந்தது.
“எங்கேயும் எதுவும் லேட்டாயிடக் கூடாதுன்னு ஏண்டா பதர்றோம்னு அப்ப நெனச்சேன்.”
அது என்றோ ஒருநாள் சொன்னது. வர வர மனசு சலித்து வருகிறது. வெறுப்பு, எதைப் பார்த்தாலும் கடுப்பு. இது நல்லதில்லை என்று தனக்கே கூட உறைக்கிறது.
எதிரில் வந்த ஓர் ஆட்டோ நின்று கல்யாணியின் சிந்தனை கனவு கலைந்தது.
“நிறுத்துப்பா, நிறுத்து!” என்று கட்டளை யிட்டது ஒரு தெரிந்த குரல். 
சௌம்யா. அடடே, கூட நீலாவும்!
இருவருமே இறங்கி வந்தனர். ஆட்டோவில், தான் உட்கார்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு வருகிறார்களோ? தங்கை மித்ராவின் கல்யாணத்தை விட்டு விட்டு சௌம்யா எங்கே வந்தாள்?
“ஒன்னைப் பாத்துட்டுத்தான் கல்யாணி எறங்கினேன்!”
“என்ன விஷயம்?”
“கல்யாணத்துக்கு தானே வந்துண்டிருக்கே?”
என்ன சொல்வதென்று தெரியாமல் கல்யாணி மௌனமாய் இருந்தாள்.
“கொஞ்சம் அவசரமா என்னோட வர்றியா? என்னோட டிவோர்ஸுக்கு வாதாடின வக்கீல் ராமபத்ரனை அர்ஜண்டா கூட்டிண்டு வரணுமே!”
“ஏன்... என்ன சங்கதி?”
“காலைலே பிடிச்சு என் விவாகரத்து விஷயம் ஒரு இஷ்யூவாகி மித்ரா கல்யாணம் இழுபறி ஸ்டேஜுக்கு வந்துட்டது.”
திடுக்கிட்டாள் கல்யாணி.
இழுபறி நிலையா? கல்யாணம் நின்றுவிடுமா? சேச்சே, அப்படி நடக்கக் கூடாது. பாவம் சௌம்யா வீட்டார்! என்ன ஆவார்கள் இந்த மற்றோர் அதிர்ச்சியால்?
“யார் தகராறு பண்றது?”
“மாப்பிள்ளையோட அப்பா! யாரோ அவருக்குத் தெரிஞ்சவன், எங்காத்துக்கு வேண்டப்படாத ஆசாமி என்னமோ கயிறு திரிச்சு விட்டிருக்கான்.”
“என்னண்ணு?”
“என்னோட நடத்தை சரியில்லேண்ணு தான் ஆம்படையான்காரன் விவாகரத்து வாங்கிண்டு போயிட்டான்னு.”
“வாட் ரப்பிஷ்?”
“நாம் அப்படி சொல்லலாம். அவா நம்பணுமே?”
கல்யாணியின் முகம் வெளுத்தது. விஷயமே தலைகீழ். அவன் நடத்தை கெட்டவன். அதற்காக சௌம்யா வாங்கிய விவாகரத்து அது.
“ஜட்ஜ்மெண்ட் காப்பி ஒன்னண்டே இல்லியா? எடுத்து அவங்க மொகத்திலே விட்டெறியறது தானே!”
“அதெல்லாம வக்கீலண்டயே கொடுத்துட்டேன்!”
“சரி, நீ கல்யாண மண்டபத்துக்குப் போ! நான் அந்த ஜட்ஜ்மெண்ட் காப்பிய வாங்கிண்டு, வக்கீலையும் கையோட அழச்சுண்டு வர்றேன்.”
“நீ மட்டும் தனியாவா போறே? நானும் வர்றனே.”
“வேணாம். இந்த நேரத்திலே நீ என்னோட வந்தா ஏதோ செட்டப் பண்றாப்பிலே ஆயிடும்.”
“நீலாவையாவது கூட அழைச்சுண்டு போயேன்!”
விநாவைக் கல்யாணியோடு இணைத்து டேபிள் வம்பு பேசி வாங்கிக் கட்டிக் கொண்ட நீலா, முகம் கறுத்துத் தலை தொங்கி நின்றாள்.
“வர்றதானா வரட்டும். இது விநாயகத்தோட ஆட்டோ”
சௌம்யாவுக்கு அவர்களிடையே நடந்தது தெரியாது.
“ஏன், இந்த ஆட்டோவிலே இவ ஏற மாட்டாளோ? அப்படீன்னா நான் வந்த ஆட்டோவில் போய்க்கயேன்.”
கல்யாணி நீலாவைப் பார்த்தாள்.
அதற்குள் விநா ஓட்டமும் நடையுமாக வந்தான்.
“ஸாரி மேடம்! ஒங்களைக் காக்க வச்சுட்டேன் ஆபீஸுசுக்கு லேட்டாவப் போவுது... அட இவங்க எங்க வந்தாங்க? தங்கச்சி கல்யாணமில்லே.”
நீலா அவனது மாசற்ற சௌஜன்யத்தைப் பார்த்தாள். அவன் முகம் குன்றியது.
“இந்த ஆட்டோவிலேயே போய்க்கறேன், சௌம்யா.” என்று நீலா திரும்பி அவளிடம் சொன்னாள்.
“சீக்கிரம்... சீக்கிரம்... எல்லாம் ஒன் கைலயும் வக்கீல் கைலயும் தான் இருக்கு கல்யாணி!”
சௌம்யாவின் முகம் பரிதவித்தது.
“நீ கவலையே படாதே!”
விநா இருவரையும் மாறி மாறிப் பாரத்தான்.
நீலா வந்து உட்கார, ஆட்டோவிற்குள் இடம் விட்டு நகர்ந்தாள் கல்யாணி.
“விநா, வண்டியத் திருப்பிக்கோப்பா! வக்கீல் ராமபத்ரன் வீட்டுக்குப் போகணும்.”
மறுகேள்வி கேட்காமல் விநா ஆட்டோவை வளைத்துத் திருப்பினான்.
“கொஞ்சம் வேகமாப் போகணும் விநா! முகூர்த்த நேரம் முடியறத்துக்குள்ளற வக்கீலைக் கல்யாண மண்டபத்துக்குக் கையோட கூட்டி வரணும்!”
ஏதோ பிரச்சினை என்று விநாவுக்குப் புரிந்தது. வேறொருத்தி கூட உட்கார்ந்திருந்ததால் என்னவென்று கேட்க விரும்பவில்லை.
ஆட்டோவின் வேகம் கூடியபோது, கல்யாணி இன்னும் இன்னும் அதன் வேகம் அதிகரிக்காதா என்று பதைத்தாள்.
இந்த நீலா, இந்த விநா, சற்று முன்பு நெஞ்சில் உயர்ந்திருந்த வெறுப்பின் கரையான் புற்று, எல்லாமே சிறுத்துச் சிதிலமாகி சாமான்யமாகி விட்டனர்.
மித்ரா... மித்ரா...
‘ஒரு வக்கீல் வந்து, ஒரு ‘ஜட்ஜ்மெண்ட் - காப்பி’ பார்த்து, ஒரு தற்காலிக சமரசம் நேர்ந்து, உன் கழுத்தில் மூன்று முடிச்சு, நீ அலையோஅலை என்று அலைந்த மூன்று முடிச்சு விழுந்து விட்டால் மட்டும் போதுமா?

அப்புறம்? ஆரம்பத்திலேயே அபஸ்வரம் வாசிக்கிற இவர்களிடம் நீ எப்படி குப்பை கொட்டுவாய்?’
கல்யாணி அந்தக் கவலையை ஒத்திப் போட்டாள்.
வக்கீலிடம் என்ன பேசுவது? எப்படி அவரை அழைத்து வருவது?
பரபரவென்று யோசனைகள் மொட்டு விரிந்து ஒவ்வொன்றாய் உதிர்ந்தன. அவள் உள்ளேயிருந்து வேறொரு கல்யாணி, ஒரு குதிரை வேகம் கொண்ட பஞ்ச கல்யாணி வெளியேறி வந்தாள்.
நின்றுவிட்ட ஆட்டோவுக்கு ‘செல்ஃப்’ எடுத்து வண்டியோட்டம் சிந்தித்த மாதிரி, ஒரு தன்  இயக்கம் உணர்ந்தாள் கல்யாணி என்ன விடுதலை அது!   

0 comments:

Post a Comment

Kindly post a comment.