Saturday, October 19, 2013

இளமையும் பெண்மையும் வென்ற மேன் புக்கர்: எலினார் கேட்டன்


எலினார் கேட்டன்


எலினார் கேட்டனுக்கு நேற்றுபோல் இன்று இல்லை. 2013-க்கான மேன் புக்கர் விருது அவருடைய ‘தி மினரீஸ்’நாவலுக்குக் கிடைத்த பிறகு, அவருடைய வாழ்க்கையின் திசையே அடியோடு மாறிவிட்டது. மிகவும் இளம் வயதில் (28) மேன் புக்கர் விருதை வென்றவர் என்ற சாதனையோடு இந்த விருதை வென்ற நாவல்களிலேயே மிகவும் பெரிய நாவலை (பக். 834) எழுதியவர் என்ற சாதனையும் இப்போது கேட்டனுக்குச் சொந்தம்

 நியூசிலாந்தைச் சேர்ந்தவருக்கு இந்த விருது கிடைப்பது இது இரண்டாம் முறை. முதல்முறை இந்த விருதை நியூசிலாந்துக்காரர் ஒருவர்- கெரி ஹல்ம்- வென்ற ஆண்டில் (1985) பிறந்தவர்தான் கேட்டன் என்பது ஒரு தற்செயல் ஆச்சர்யம். 

ஒருவழியாக, இந்த விருதால் கேட்டனுக்கென்று தனியறை ஒன்று கிடைக்கப்போகிறது. தற்போது, ஆக்லந்தில் ஒரு அடுக்ககத்தில் அமெரிக்கக் கவிஞர் ஸ்டீவன் தூசெந்துவுடன் சேர்ந்து வாழும் கேட்டனுக்கு எழுதுவதற்கென்று ஒரு தனியறை இல்லை. படுக்கையறைகளைத் தவிர, இருக்கும் ஒரு அறையை அவரது துணையான தூசெந்து தனது படிப்பறையாகப் பயன்படுத்திக்கொள்கிறார். ‘‘பெரிய வீட்டுக்குக் குடிபோகப்போவதை நினைத்தாலே பரவசமாக இருக்கிறது’’ என்கிறார் கேட்டன். 

புகழ் என்ற சுகமான சுமையை இந்த விருது தந்திருக்கும் தருணத்தில், பொதுத்தளத்தில் ஆண்களால் பெண்கள் நடத்தப்படும் விதத்தைப் பற்றிய கவலையில் ஆழ்ந்திருக்கிறார் கேட்டன். 

“பேட்டிகளின்போது ஆண் எழுத்தாளர்களிடம் அவர்கள் என்ன சிந்திக்கிறார்கள் என்றும் பெண் எழுத்தாளர்களிடம் அவர்கள் என்ன உணர்கிறார்கள் என்றும் கேட்கப்படுகிறது. அதாவது, பெண்களுக்கும் சிந்தனைக்கும் சம்பந்தம் இல்லையாம். 

பெரும்பாலான பெண் எழுத்தாளர்களிடம் ‘இந்த நிலையை அடைவதற்கு நீங்கள் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் அல்லவா?’ என்ற ரீதியில்தான் கேள்விகள் கேட்கப்படுகின்றன. பெண் எழுத்தாளர்களெல்லாம் சிந்தனையாளர்கள், தத்துவவாதிகள் என்ற அணுகுமுறையில் நேர்காணல்கள் செய்யப்படுவதில்லை’’ என்கிறார் கேட்டன். 

அவருடைய வயதைப் பற்றிப் பேசும்போது இன்னும் காட்டமாகிறார் கேட்டன். ‘தி லூமினரீஸ்’நாவல் இங்கிலாந்தில் நல்ல வரவேற்பைப் பெற்றாலும் நியூசிலாந்தில் அப்படியல்ல என்கிறார். அங்குள்ள போன தலைமுறையைச் சேர்ந்த ஆண் விமர்சகர்கள், பெரும்பாலும் 45 வயதைத் தாண்டியவர்கள், கேட்டனை மிகுந்த கேலிக்குள்ளாக்கியிருக்கின்றனர். 

அவருடைய வயது, பாலினம், தி லூமினரீஸ் நாவலின் தன்மை போன்றவை கேட்டனின் விமர்சகர்களை எரிச்சலுக்குள்ளாக்கியிருக்கிறது. “முக்கியமாக, எல்லோருடைய நேரத்தையும் வீணாக்கும் வகையில் இவ்வளவு பெரிய நாவலை எழுத இந்தப் பெண்ணுக்கு என்ன துணிச்சல் என்று பல விமர்சகர்களும் கருதினார்கள்” என்கிறார் கேட்டன்.

 ‘நீ யாரென்று உன்னை நினைத்துக்கொண்டிருக்கிறாய்? உன்னாலெல்லாம் இதைச் செய்ய முடியாது’என்பது போன்றுதான் இருந்தது விமர்சகர்களின் மனநிலை. நாவல் தன்மையில் சொல்லப்படாமல் கதாசிரியரின் குரலில் சொல்லப்பட்டிருப்பதுவும்கூட அவர்களுடைய எரிச்சலுக்கு ஒரு காரணம். 

“ஐம்பது வயதைத் தாண்டிய ஒரு ஆண் இப்படி எழுதியிருந்தால் அவர்களுக்குப் பிரச்சினையாக இருந்திருக்காது. என் வயதில் ஒருவர் அதுவும் ஒரு பெண், கதாபாத்திரங்களின் மனதில் புகுந்து பார்ப்பதுபோல் எழுதினால் யார்தான் பொறுத்துக்கொள்வார்கள்?’’ என்கிறார் கேட்டன். 

‘தி லூமினரீஸ்’, துப்பறியும் நாவல்களைப் போன்ற விறுவிறுப்பைக் கொண்ட நாவல். 1866-ல் தங்க வேட்டை நடந்த காலகட்டத்தில் ஹொகிதிகா என்ற ஊரில் மூடி என்பவன் சாலையோர விடுதியொன்றில் இருக்கும் புகைபிடிப்பதற்கான அறையில் நுழைகிறான். அங்கு 12 நபர்கள், மர்மமான பல்வேறு நிகழ்வுகளை அசைபோட்டுக்கொண்டிருப்பதை மூடி காண்கிறான். தங்க வேட்டையில் ஈடுபட்டிருந்த ஒருத்தன் திடீரென்று காணாமல் போனது, தனிமையில் வாழ்ந்த பணக்காரர் ஒருவரின் மரணம், பாலியல் தொழிலாளி ஒருத்தி கண்மூடித்தனமாகத் தாக்கப்படுதல் ஆகிய நிகழ்வுகள்தான் அவர்கள் பேச்சின் மையம். இவர்கள் அனைவரும் மேற்குறிப்பிட்ட சம்பவங்களோடு தொடர்புடையவர்கள் என்பது கூடுதல் சிறப்பு. 

புதுமையான முறையில் இந்த நாவலின் அத்தியாயங்கள் 

வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் முன்னால் ராசி மண்டலம் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு நட்சத்திரத்தோடு சம்பந்தப்படுத்தப்பட்டிருக்கும். அண்ட சராசரங்களின் இயக்கங்களுக்கு ஏற்ப கதாபாத்திரங்களும் செயல்படுகின்றன. ஒவ்வொரு அத்தியாயமும் முந்தைய அத்தியாயத்தில் பாதி அளவே இருக்கும். இப்படியாகத் தேய்பிறையாகிக்கொண்டேபோகிறது நாவல்.
‘‘விவரிக்கும்போது இந்த உத்திகளெல்லாம் மேலோட்டமானவையாகத் தோன்றும். அனுபவிக்கும்போதுதான் அப்படியல்ல’’ என்று தெரியும் என்கிறார் கேட்டன்.

 “இந்த நாவலின் கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவுகளே அவர்களின் விதியைத் தீர்மானிக்கின்றன. அதே நேரத்தில், அந்த விதி முன்னரே தீர்மானிக்கப்பட்டிருப்பது” என்கிறார் கேட்டன். 

“அலங்காரமான கட்டமைப்பைவிட அலங்காரமில்லாத கட்டமைப்புதான் மானுட இயல்பை அதிகம் கொண்டது என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், நுட்பங்களைப் பார்க்கும்போதுதான் மிகுந்த உயிர்ப்புடையவளாகவும் மானுட இயல்புடையவளாகவும் வியப்புணர்வு நிரம்பியவளாகவும் என்னை நான் உணர்கிறேன். வடிவங்களில் அர்த்தம் காணும் இயல்புதான் மனித குலத்துக்கே உரித்தான மகத்தான இயல்பாக நான் கருதுகிறேன்’’ என்கிறார் அவர். 

கேட்டனுடன் பேசும்போது நமக்குப் பளிச்சென்று தெரிவது அவருடைய படைப்பின் தீவிரத்தன்மைதான். “வழக்கமாக நாவல் சிந்திக்கும் விதத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் நாவலை கேட்டன் சிந்திக்கவைத்ததுதான் அவரைப் பிறரிடமிருந்து பிரித்துக் காட்டியது. 

எடுத்துக்காட்டாக, இந்த உலகை அணுகும் விதங்களாக சோதிடத்தையும் முதலாளித்துவத்தையும் ஒன்றுக்கொன்று போட்டியிடும் அமைப்புகளாகப் படைத்ததுடன், வீரியமிக்க வாசிப்பனுபவத்தையும் நமக்குத் தருகிறார் கேட்டன். முன்னுதாரணமற்ற நாவல் இது’’ என்கிறார் மேன் புக்கர் விருது நடுவர் குழுவில் ஒருவரான ஸ்டூவர்ட் கெல்லி. 

கேட்டனைப் பொறுத்தவரை நாவல் என்பது சிந்திப்பதற்கான ஒரு சாதனம், உணர்வதற்கானதும்கூட. ‘‘என்னைப் பொறுத்தவரை, தர்க்கரீதியான கருத்தாக்கங்களைவிடவும் நாவல்தான் தத்துவத்துக்கான சிறந்த களம்’’ என்கிறார் கேட்டன்.                                                                                                                      

தி இந்து - 18-10-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.