Tuesday, October 1, 2013

ஏர்வாடியில் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா கோலாகலம் !

ஏர்வாடி தர்காவில் வலம் வந்த சந்தனக்கூடு


இராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக் காட்டாக நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே ஏர்வாடி தர்கா உள்ளது. இங்கு மகான் சுல்தான் செய்யது இப்ராகீம் ஷகீது வலியுல்லா அடக்கமாகியுள்ளார். தீராத நோய்கள்,பில்லி, சூனியம் பாதித்தோர், கண்டறிய முடியாத நோயினால் பாதிக்கப்பட்டோர் இங்கு தங்கினால் குணமாவதாக நம்பிக்கை.

இதனால் இந்த தர்காவுக்கு தமிழகம், கேரளா,ஆந்திரம் போன்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர்.

ஏர்வாடி தர்காவில் 831ஆம் ஆண்டு உரூஸ் என்னும் தேசிய ஒருமைப்பாட்டு சந்தனக் கூடு விழாவை முன்னிட்டு செப்டம்பர் 7ஆம் தேதி முதல் தினமும் மவ்லீது என்னும் புகழ் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 16ஆம் தேதி மாலை கொடியேற்றத்துக்கான அடிமரம் ஊன்றும் நிகழ்ச்சியும், 17ஆம் தேதி மாலை ஏர்வாடி தர்காவில் உள்ள மேடையில் கொடியேற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

உரூஸ் என்னும் சந்தனக்கூடு திருவிழா நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இரவு துவங்கி,  திங்கள்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் நடைபெற்றது. ஏர்வாடி குடியிருப்பில் உள்ள முஜாபர் நல்ல இபுராகீம் மகாலில் வைத்து சந்தனம் கரைக்கப்பட்டது.

ஏர்வாடி தர்கா ஹக்தார் கமிட்டி தலைவர் அம்ஜத் ஹூசைன், செயலாளர் செய்யது பாரூக் ஆலிம் அரூஸி, உதவித் தலைவர் செய்யது சிராஜூதீன், முன்னாள் செயலாளர் துல்கர்ணை பாட்சா லெவ்வை ஆகியோர் ஊர்வலத்தைத் துவக்கி வைத்தனர்.

இந்த ஊர்வலத்தில் யானைகள், நாட்டியக் குதிரைகள் நடனமாடியவாறு வந்தன. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதம் மேள தாளங்கள், வாணவேடிக்கைகள் முழங்க எடுத்து வரப்பட்டது.

அனைத்து மதத்தினரும் ரதத்தை இழுத்து வந்தனர். அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஏர்வாடி தர்கா வளாகம் வந்ததும் 3 முறை வலம்வந்து மகான் மக்பராவில் தர்கா ஹக்தார்கள் சந்தனம் பூசினர். மாவட்ட டவுன் காஜி சலாஹூதீன் பிரார்த்தனை செய்தார். இந்தத் திருவிழாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கீழக்கரை உட்கோட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் சோமசேகர் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் முத்துராஜா, கணேசன் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

விழா ஏற்பாடுகளை ஏர்வாடி தர்கா ஹக்தார் கமிட்டியினர் செய்திருந்தனர்.
அக்.6ம் தேதி காலை குர்ஆன் ஓதி மாலை 5 மணியளவில் கொடியிறக்கப்பட்டு, 30 நாள் விழா நிறைவடைகிறது. அன்று மாலை பக்தர்கள், யாத்ரீகர்களுக்கு தப்ரூக்(நெய்ச் சோறு) வழங்கப்படுகிறது

தினமணி, 01-10-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.