Sunday, October 13, 2013

காஞ்சிபுரம் ஆட்சியர் உட்பட இரண்டு துணை தாசில்தார்கள் பணியிடை நீக்கம் !

மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன்


காஞ்சிபுரம் மாவட்டத்தில் மணல் கொள்ளையைத் தடுக்க தவறியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனனை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் மேலும் 2 துணை தாசில்தார்கள் மாவட்ட நிர்வாகத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் தாலுகா, பழையசீவரம் ஆகிய பகுதிகளில் மணல் மலை போல் குவித்துவைக்கப்பட்டு, சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நீண்ட காலமாக நடைபெற்று வரும் மணல் கொள்ளையை அதிகாரிகள் தடுத்து நிறுத்த தவறியுள்ளனர். மேலும் இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

மணல் கொள்ளையால் அரசுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

மணல் கொள்ளை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கூடாது என்றும், மாவட்ட வருவாய் அலுவலர்கள் கொண்ட குழுவுக்கு விசாரணை நடத்த அதிகாரம் உள்ளது என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி உறுதியளித்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் செப்டம்பர் 18-ஆம் தேதி பிரச்னைக்குரிய மணல் சேமிப்பு மையங்களுக்கு ஆட்சியர் தடை விதித்தார். மேலும் அன்றைய தினம் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மணல் சேமிப்பு மையங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தி, நீதிமன்ற உத்தரவு வரும் வரை இங்குள்ள மணலை வெளியே கொண்டு செல்லக்கூடாது என்று உத்தரவிட்டனர்.

இதற்கிடையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனனை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை இரவு உத்தரவிட்டது. மேலும் ஆட்சியர் பொறுப்பை முழு அதிகாரங்களுடன் மாவட்ட வருவாய் அலுவலர் சம்பத்குமார் ஏற்பார் என்றும் அறிவித்தது. இதைத் தொடர்ந்து ஆட்சியர் பொறுப்பில் இருந்து லி. சித்ரசேனன் விடைபெற்றார்.

மாவட்ட வருவாய் அலுவலர் சம்பத்குமார் உடனடியாக ஆட்சியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

முதல் உத்தரவு: இந்த நிலையில் காஞ்சிபுரம் தாலுகா பழையசீவரம் துணை தாசில்தார் கே. செந்தில்குமார், மதுராந்தகம் தாலுகா கருங்குழி துணை தாசில்தார் எம்.டி. ராஜேந்திரன் ஆகியோரை ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட சம்பத்குமார் பணியிடை நீக்கம் செய்து தமது முதல் உத்தரவில் கையெழுத்திட்டார். இதில் செந்தில்குமார் பழையசீவரம் மணல் சேமிப்பு மையத்துக்கும், ராஜேந்திரன் கருங்குழு மணல் சேமிப்பு மையத்துக்கும் பொறுப்பாளர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர கனிமவளத் துறை, பொதுப்பணித்துறையை சேர்ந்த அதிகாரிகள் சிலர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது. இது குறித்த அறிவிப்பு அவர்கள் சார்ந்த துறையின் தலைமை அதிகாரிகள் அறிவிப்பார்கள் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி - 13-10-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.