Wednesday, October 9, 2013

மனைவியை தந்தூரி அடுப்பில் எரித்த வழக்கு: மரண தண்டனை ரத்து.

 மனைவியைக் கொன்று தந்தூரி அடுப்பில் எரித்த வழக்கில் குற்றவாளி சுஷில் சர்மாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் சுஷில் சர்மாவுக்காக வாதாடிய வழக்கறிஞர், 'சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில் சுஷில் சர்மாவுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இது அரிதினும் அரிதான வழக்கு அல்ல' எனத் தெரிவித்தார்.

இதை ஏற்ற தலைமை நீதிபதி பி. சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சனா பிரகாஷ் தேசாய் மற்றும் ரஞ்சனா கோகாய் ஆகியோர் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீர்ப்பளித்தனர். மேலும், 'இந்த கொலை சமூகத்திற்கு எதிரானது அல்ல. மனைவி மீது எழுந்த சந்தேகம் காரணமாக செய்யப்பட்டது.' எனக் கருத்து தெரிவித்தனர்.

டெல்லி இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த சுஷில் சர்மா, தன் மனைவி நைனா சஹானிக்கு அவரது நண்பர் மத்லூப் கரமுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டார். இதனால், கடந்த ஜூலை 2, 1995-ல் நைனாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று அவரது உடலை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அவற்றை டெல்லியின் ஜன்பத்திலுள்ள அசோக் யாத்ரி நிவாசின் பாக்யா எனும் உணவு விடுதியின் தந்தூரி அடுப்பில் போட்டு எரித்து சாம்பலாக்க முயன்றார். அப்போது இந்த வழக்கு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு தொடர்பாக, சுஷில் சர்மா, உணவு விடுதி மேலாளர் கேசவ் குமார் உட்பட 5 பேர் கைதுசெய்யப்பட்டனர். டெல்லி செஷன்ஸ் நீதிமன்றத்தில் நவம்பர் 3, 2003-ல் அளிக்கப்பட்ட தீர்ப்பில், கேசவ் குமாருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும் சுஷில் சர்மாவுக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. சுஷில் சர்மாவின் இந்த தண்டனையை, டெல்லி உயர் நீதிமன்றமும் மேல் முறையீட்டுத் தீர்ப்பில் உறுதி செய்தது.

இந்நிலையில், 7 ஆண்டுகளுக்குப் பின் தற்போது உச்ச நீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில் சுஷில் சர்மாவின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.

இதனால், கடந்த 18 ஆண்டு களாக சிறையில் இருக்கும் சுஷில் சர்மா தண்டனை முடிந்து விடுதலை அடைய அதிக வாய்ப்புகள் உள்ளன.                  

தி இந்து, 09-10-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.