Friday, October 4, 2013

கந்து வட்டிக் கொடுமை: 'தி இந்து' செய்தியை பொது நல மனுவாக ஏற்றது உயர் நீதிமன்றம்




கடந்த 2003-ம் ஆண்டில் தமிழ்நாடு கந்து வட்டி தடுப்புச் சட்டத்தை உறுதியாக அமல்படுத்திட மாநில உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். 

திருப்பூரில் நிலவும் கந்து வட்டி கொடுமை தொடர்பாக தி இந்து’ தமிழ் நாளேட்டில் வந்த செய்தியையே பொது நல மனுவாக உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பாக மாநில உள்துறைச் செயலாளர், காவல் துறை டி.ஜி.பி. ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

'கந்து வட்டிக் கும்பல் பிடியில் திக் திக் திருப்பூர்' என்ற தலைப்பில் திருப்பூர் நகரில் நிலவும் கந்து வட்டிக் கொடுமைகள் குறித்த செய்தி கடந்த செப்டம்பர் 23-ம் தேதி தி இந்து’ தமிழ் நாளேட்டில் வெளியாகி இருந்தது. 

இந்த செய்தியைப் படித்த உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன், கடந்த செப்டம்பர் 26-ம் தேதி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) ஆர்.கே.அகர்வாலுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். தி இந்து’ நாளிதழ் செய்தியையே உயர் நீதிமன்றம் பொது நல மனுவாகக் கருதி தாமாக முன் வந்து வழக்காக எடுக்கலாம் என தலைமை நீதிபதிக்கு அவர் அந்தக் கடிதத்தில் பரிந்துரை செய்துள்ளார். 

இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி (பொறுப்பு) ஆர்.கே.அகர்வால், தாமாக முன் வந்து பொது நல வழக்காக எடுத்துக் கொண்டார். 

இதனையடுத்து இது தொடர்பாக உதவிப் பதிவாளர் (ரிட் மனு பிரிவு) மனு தாக்கல் செய்தார். கடந்த 2003-ம் ஆண்டின் தமிழ்நாடு கந்து வட்டி தடுப்புச் சட்டத்தை உறுதியாக அமல்படுத்திட மாநில உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். மேலும், இந்த சட்டம் அமலுக்கு வந்த 2003-ம் ஆண்டிலிருந்து இதுவரை இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரம், மற்றும் அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை குறித்த விவரங்களை அவர்கள் தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு குறித்து தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வு கடந்த செப்டம்பர் 30-ம் தேதி விசாரணை மேற்கொண்டது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக மாநில உள்துறைச் செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் அக்டோபர் 22-ம் தேதிக்குள் பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்                                                                                                        

தி இந்து, 04-10-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.