Thursday, October 3, 2013

கல்லூரிகளில் இழுத்து மூடப்படு,ம் எம்.சி.ஏ., ஐ.டி.துறைகள் !



மாணவர்கள் சேர்க்கை வெகுவாகக் குறைந்ததைத் தொடர்ந்து ஏராளமான தனியார் பொறியியல் கல்லூரிகள் எம்.சி.ஏ., ஐ.டி. துறைகளை இழுத்து மூடத் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக ஆயிரக்கணக்கான பேராசிரியர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க நிதி நெருக்கடி, இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆள்குறைப்பு, ஊதியக் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில், கல்லூரிகளும் வரவேற்பு இல்லாத கம்ப்யூட்டர் படிப்புகளை இழுத்து மூடி வருகின்றன.

கலை, அறிவியல் கல்லூரிகளில் மட்டுமல்லாமல், பொறியியல் கல்லூரிகளிலும் எம்.சி.ஏ. படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பி.இ. முடித்தவர்களுக்கு இணையாக எம்.சி.ஏ. படிப்பை முடித்தவர்களையும் பணிக்கு எடுத்து வந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கடந்த சில ஆண்டுகளாக எம்.சி.ஏ., முடித்தவர்களைப் பணிக்கு எடுப்பதைக் குறைத்துக் கொண்டன.

 பி.இ. முடித்தவர்களுக்கே முன்னுரிமை அளித்து வருகின்றன.
இதுபோன்ற காரணங்களால் எம்.சி.ஏ. படிப்பில் மாணவர் சேர்க்கை குறைந்தது. மாணவர் சேர்க்கை குறைந்ததைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக ஏராளமான தனியார் பொறியியல் கல்லூரிகள் எம்.சி.ஏ. துறையை இழுத்து மூடிவிட்டு, பணிபுரிந்த பேராசிரியர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றன.

இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கம்ப்யூட்டர் பொறியியல் படிப்புகளிலும் (பி.இ.) மாணவர் சேர்க்கை குறைந்து வருவதைத் தொடர்ந்து, அந்தத் துறைகளையும் இழுத்து மூடுவதற்கான நடவடிக்கையை கல்லூரிகள் எடுத்து வருகின்றன.

எம்.சி.ஏ. துறையைப் போல் பி.இ. தகவல் தொழில்நுட்பத் துறையையும் சில கல்லூரிகள் இப்போது இழுத்து மூடி வருகின்றன. மேலும், பி.இ. - இசிஇ, சிஎஸ்இ படிப்புகளிலும் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையை எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
.
இது குறித்து தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகி ஒருவர் கூறியது: கம்ப்யூட்டர் துறை படிப்புகள் மீதான மாணவர்களின் ஆர்வம் கடந்த சில ஆண்டுகளாகக் குறைந்து வருகிறது.

நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் மட்டுமல்லாமல், அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம், கம்ப்யூட்டர் துறை படிப்புகளை தேர்வு செய்பவர்களின் எண்ணிக்கையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெகுவாகக் குறைந்துள்ளது.

நடந்து முடிந்த 2013-14 கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வில் இசிஇ பிரிவில் உள்ள அரசு ஒதுக்கீட்டிலான 42,966 இடங்களில் 24,992 இடங்கள் நிரம்பியுள்ளன. பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் உள்ள 33,505 இடங்களில் 15,684 இடங்கள் நிரம்பியுள்ளன. பி.இ. தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி.) துறையில் மொத்தமுள்ள 16,466 இடங்களில் 6,705 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.

சில கல்லூரிகளில் பி.இ. தகவல் தொழில்நுட்பம் மற்றும் எம்.சி.ஏ. படிப்புகளில் ஒரு இடங்கள் கூட நிரம்பவில்லை. இதன் காரணமாக மாணவர் சேர்க்கை இல்லாத துறைகளை இழுத்து மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றார்.

இது குறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியது:

தகவல் தொழில்நுட்பத் துறையில் தேவை அதிகம் இருக்கின்றபோது, அதுதொடர்பான படிப்புகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதற்கான அனுமதியை பொறியியல் கல்லூரிகள் பெற்றுக் கொள்கின்றன. இதற்கு ஏற்ற வகையில், அதிக ஊதியம் கொடுத்து பேராசிரியர்களையும பணிக்கு அமர்த்தி விடுகின்றன.

ஆனால், மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறையும்போது, உடனடியாக அந்தத் துறையை இழுத்து மூடி விடுவதோடு, பேராசிரியர்களையும் வீட்டுக்கு அனுப்பி விடுகின்றன. இதனால், பேராசிரியர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

இதை ஒழுங்குபடுத்த சென்னை அண்ணா பல்கலைக்கழகமும், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலும்தான் (ஏஐசிடிஇ) நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது போன்று அடிக்கடி மாணவர் சேர்க்கை எண்ணிக்கையைக் குறைக்கக் கோரிக்கை விடுக்கும் கல்லூரிகளுக்கு, மீண்டும் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதற்கான அனுமதியை வழங்கக் கூடாது என்றார்.            

தினமணி, 03-10-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.