Friday, October 25, 2013

தமிழகத்தில், தமிழ் ஈழம் - முதல் மேப் வரைந்தவர் யார்?. ஈழ விடுதலைக்கு முதல் நிதி வழங்கியவர் யார் ?

Home

தோற்றம் 24 - 09 -1936                                     மறைவு 19 - 04 - 2013
 

தமிழ் ஈழ விடுதலைப் போர்க் கவிஞர், காசி ஆனந்தன், ஈழத்துக்காரரான அவர் சென்னையில் படித்தார். அப்போதே சி.பா. ஆதித்தனாருடன் நெருங்கிய தொடர்பு கொண்டார். "நாம் - தமிழர்" இயக்கப் பேச்சாளராக விளங்கினார் "உணர்ச்சிக் கவிஞர்" என்று இவருக்கு அமரர் ஆதித்தனார் பட்டம் அளித்தார்.. சென்னையில் ஆதித்தனார் சிலை பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள " காலத்தினால் வந்த ஆதித்தனாருக்கு ஒரு காவியம் செய்து வைப்போம்." என்ற பாடலை எழுதியவர். இவர் சின்னய்யா "சிவந்தி ஆதித்தனார் எனக்கு சடையப்ப வள்ளலாக விளங்கினார் என்று சொல்லுகிறார்
.
கவிஞர் காசி ஆனந்தனின் நினைவலைகள்

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. " தந்தையைப் போல தனயன்" என்பது அது. அந்தப் [அழமொழி "தாயைப்போல பிள்ளை, நூலைப்போல  சேலை " என்று தமிழ் நாட்டில் சொல்லுவார்கள்.

இதன் உண்மையை சின்னைய்யா டாக்டர் பா.சிவந்தி ஆத்திதனாரிடம் நான் கண்டேன். பெரிய அய்யா அமரர் ஆதித்தனாரை சின்னய்யாவிடம் நான் பார்த்தேன். இதற்கு சில நிகழ்ச்சிகளைச் சொல்ல விரும்புகிறேன்.

முதல் நிதி

"தமிழ் ஈழம்" என்று முதல் முதல் வரைபடம் ( மேப் ) வரைந்தவர், பெரிய அய்யா. அது போல , ஈழத் தமிர்களின்  விடுதலைப் போருக்குத் தமிழ்நாட்டில் முதல் முதல் நிதி தந்தவர் சின்னைய்யா.

அது 1980-ஆம் ஆண்டாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.  அப்போது விடுதலைப் போருக்கு நிதி தேவைப்பட்டது. எனது கவிதைகலைத் தொகுத்து நூலாக வெளியிட்டு விற்று நிதி திரட்டலாம் என்று நானும் தம்பி பிரபாகரனும் முடிவு செய்தோம்.

கவிதைகளைத் திரட்டிவிட்டேன். ஆனால், அதை நூலாக அச்சிட்டு வெளியிட நிதிவசதி இல்லை. அப்போது சின்னையாவைச் சந்தித்தேன். அவர் 25,000/- ரூபாய் கொடுத்தார். தமிழ்நாட்டில் ஈழ விடுதலைக்குக் கிடைத்த  முதல் நிதி இதுதான். எம்.ஜி.ஆர். கொடுப்பதற்கு முன்பு, இந்திய அரசு கொடுப்பதற்கு முன்பு கிடைத்த நிதி இது.

அந்தப் பணத்தைக் கொண்டு "காசி ஆனந்தன் கவிதைகள் முதல் தொகுதி " என்ற நூலை அச்சிட்டோம். சென்னையில் நடந்த விழாவில் முதலமைச்சர் கருணாநிதி அந்த நூலை வெளியிட்டார். விடுதலைப் போருக்கு  அது மிகவும் உதவியாக இருந்தது.

என்னைப் பார்க்கும்போதெல்லாம் சிவந்தி ஈழத்  தமிழர் நிலை பற்றி என்னிடம் கவலையுடன் கேட்பார்.

சடுகுடு...சடுகுடு..

சடுகுடு தமிழர் விளையாட்டு. பெரிய அய்யா ஆதித்தனார் நாடெங்கும் சடுகுடு போட்டிகளை நடத்தி அதற்குப் புத்துயிர் கொடுத்தார். சின்னய்யா அதற்கும் ஒருபடி மேலே போய், சடுகுடுவை ஆசிய விளையாட்டுப் போட்டிகலில் ஒன்றாகச் சேர்த்தார்.

குட்டிபோட்ட கட்டிடம்

பெரிய அய்யா அவர்கள் திருச்செந்தூரிலொரு கல்லூரி கட்டினார்.அதற்கு அடிக்கல் நாட்டுவிழா நடந்தபோது அய்யா என்னையும் அழைத்துப் போயிருந்தார். அடிக்கல் நாட்டிவிட்டு, "கவிஞரே, இந்தக் கட்டிடம் குட்டி போடும்" என்று என்னிடம் அய்யா கூறினார்கள். அதுபோல் சின்னய்யா திருச்செந்தூரில் புதிதாக ஆறு கல்லூரிகள் தொடங்கினார்.

தமிழ் வளர்ச்சி.

பெரிய அய்யா முத்தமிழையும் வளர்த்தார். இயல், இசை, நாடகத் தமிழ் வளர்ச்சிக்கு உதவி செய்தார். நாடகப் போட்டி நடத்தி பரிசுகள் தந்தார்.

சின்னைய்யாவும் தமிழ் வளர்ச்சிக்கு ஆதரவும் , ஆக்கமும் அளித்தார். தமிழ் எழுத்தாளர்களுக்குப் பரிசு கொடுத்து ,ஊக்கப்படுத்தினார். ஆண்டுதோறும் பெரிய அய்யா பிறந்த நாளில் ஒரு தமிழ் எழுத்தாளருக்கு ஒரு லட்ச ரூபாயும், ஒரு தமிழ் மூதறிஞருக்கு ஒன்றரை லட்சமும் வழங்கினார்.

இலட்ச ரூபாய்

சிவந்திக்கு எனது கவிதைகள் மிகவும் பிடிக்கும். நான் அடிக்கடி அவரைச் சந்திப்பேன். அவர் எனக்கு சடையப்ப வள்ளலாக விளங்கினார்.

நான் எழுதிய "நறுக்குகள்" என்ற கவிதைத் தொகுதியை அவருக்குக் கொடுத்தேன். அதைப் புரட்டிப் பார்த்தவர், "அடுத்த வாரம் வாருங்கள்" என்று சொன்னார். அடுத்த வாரம் போய்ப் பார்த்தேன். கவிதைத் தொகுதியிலிருந்த ஒவ்வொரு பாடலையும் படித்து ரசித்து ருசித்துச் சொன்னார். எனக்கு வியப்பாக இருந்தது.

"வைத்துக் கொள்ளுங்கள்" என்று எனக்கு இலட்ச ரூபாய் கொடுத்தார். நான் அதிர்ந்து போனேன். ! இப்படி ஒரு வள்ளலா? சங்க்க கால மன்னர்களையும் மிஞ்சி விட்டார், சின்னையா.

 நன்றி :சிவந்தி ஆதித்தனார் சாதனைச் சரித்திரம் 

 அ.மா.சாமி

முதல் பதிப்பு: 2013 செப்டம்பர் 24

விலை ரூபாய்.250/-

கிடைக்குமிடம்:

தந்தி பதிப்பகம்

86, ஈ.வே.கி.சாலை,

சென்னை-600 007

www.dailythanthi.com

support@dt.co.in 

நாம் தமிழர் இயக்கம் வலுப்பெற்றிருந்தால் தமிழகம் தமிழகமாகவே இருந்திருக்கும். இன்று  தமிழ்நாட்டில் வாழும் மனிதர்களில் 75 விழுக்காட்டிற்குமேல் தமிழைப் படிக்க வழிகாட்டியாகவும், தூண்டுகோலாகவும் திகழ்ந்து வருவது தினத்தந்தி.

இந்தியாவின் எந்த மூலையிலிருந்து தமிழகத்திற்குப் பிழைப்புத்தேடிவரும் கல்வியறிவு அற்றோர் நமது தாய்மொழியாம் தமிழை- முதலில் படித்திட -பின்னர் தெளிவாகப் பேசிட- ஏன் ? எழுதவும் கற்றுக் கொண்டு தமிழக மக்களுடன் ஐக்கியமாகத் துணை நிற்பது தினத்தந்தி நாளிதழ்.

அண்மையில் மறைந்த அதன் உரிமையாளரின் வரலாறு, மூத்த பத்திரிகையாளர் அ.மா.சாமியால்,

சிவந்தி ஆதித்தனார் சாதனைச் சரித்திரம்

என்ற பெயரில் எழுதப்பெற்றுள்ளது. அதனை வலைப்பூ அன்பர்களுக்கு அறிமுகப்படுத்தும் இந்தப்பதிவு தமிழன்னைக்கு ஓர் காணிக்கை..


0 comments:

Post a Comment

Kindly post a comment.