Tuesday, October 15, 2013

முள்ளிவாய்க்காலில் சிவாஜிலிங்கம் பதவிப்பிரமாணம்

இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஷ்வரன் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்ய மறுத்த சிவாஜிலிங்கம், முள்ளிவாய்க்கால் பகுதியில் திங்கள்கிழமை பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

 இலங்கையின் வடக்கு மாகாண தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 30 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக சி.வி.விக்னேஷ்வரன் பதவி ஏற்றார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த கட்சிகளான ஈபிஆர்எல்எப், டெலோ,பிளாட் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 9 மாகாண சபை உறுப்பினர்கள் கடந்த 11ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பதவிப்பிரமாண நிகழ்ச்சியைப் புறக்கணித்தனர்.  இவர்கள் அனைவரும் திங்கள்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதிக் கட்டப் போர் நடைபெற்ற  முள்ளிவாய்க்காலில் பதவிப்பிரமாணம் செய்யத் திட்டமிட்டிருந்தனர். எனினும், மன்னார் கிறிஸ்தவ ஆயர் ராயப்பு ஜோசப்பின் வேண்டுகோளை ஏற்று, இப்பதவிப்பிரமாண நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திங்கள்கிழமை சிவாஜிலிங்கம் மட்டும் முள்ளிவாய்க்காலில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். அவருக்கு வல்வெட்டித்துறையைச் சேர்ந்த டாக்டர் மயிலேறும் பெருமாள் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  டாக்டர் மயிலேறும் பெருமாள் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் இறுதி நாள்களின்போது சிகிச்சை அளித்தவர் ஆவார்.

முள்ளிவாய்க்காலில் பதவிப்பிரமாணம் செய்தது பற்றி சிவாஜிலிங்கம் கூறும்போது, தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் பிளவு எதுவும் ஏற்படவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 மாகாண சபை உறுப்பினர்களும் மக்கள் சேவையை  திறம்பட செய்வார்கள் என்றார்.

சிவாஜிலிங்கம் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தூரத்து உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி- 15-10-2013  

                                                               


0 comments:

Post a Comment

Kindly post a comment.