Saturday, October 12, 2013

சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் -30-09-2013 -கால சுப்ரமணியம் ஆனால் தமிழகத்தில் ?

மொழிபெயர்ப்புக் கொண்டாட்டம்


செப்டம்பர் 30 அன்று சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் உலகளவில் கொண்டாடப்பட்டது. பைபிளின் மொழிபெயர்ப்பாளரான புனித ஜெரோம், மொழிபெயர்ப்பாளரின் புனிதராகவும் போற்றப்படுகிறார். 

அவருடைய தினம் சர்வதேச மொழிபெயரப்பாளர்கள் கூட்டமைப்பால் 1991இல் இருந்து மொழிபெயர்ப்புத் தினமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.

தமிழகத்தில் எவ்வாறு எங்கெங்கே யார்யாரால் இத்தினம் கொண்டாடப்பட்டது என்ற சரியான தகவல்கள் இல்லை. 

மொழிபெயர்ப்புக் கென்று அரசில் சில தனிப்பட்ட துறைகள் இயங்குவது மட்டும் தெரிகிறது. பல்கலைக்கழகங்களில், தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் மட்டும் மொழிபெயர்பபுக்கென்று தனித்துறை இயங்குகிறது.

தமிழ்ப்பாட நூல் நிறுவனம், எண்பதுகளில் பலநூல்களை தமிழ்வழிப் பாடத்திட்டத்திற்கென்று தயாரித்து வெளியிட்டது. இவற்றில் பல நேரடி மொழிபெயர்ப்புகள். 

வழக்கமான வறட்சியான பாடத்திட்ட நூல்களாக, பல இருந்தாலும் சில அபூர்வமான அருமையான நூல்களும் அவற்றில் இருந்தன. ஆனால் அவை பயன்பாடற்று குப்பையாயின. 

எல்லாப் பொதுநூலகங்களுக்கும் பள்ளி, கல்லூரி நூலகங்களுக்கும் அவை இலவசமாக அளிக்கப்பட்டுக் கேட்பாரற்றுக் கிடந்து, இன்றைக்குப் பெரும்பாலும் அவை டிஸ்போஸ் செய்யப்பட்டுவிட்டன.

ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் நடந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அதிசயமாக ஒருமுறை மட்டும் அந்த மக்கிய பழைய புத்தகங்களில் பல ஒரு அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. 

பொதுநூலகங்களிலும் கல்லூரி நூலகங்களிலும் இவற்றைப் பார்த்து, சிலவற்றைப் படித்துமிருந்த நான், சில புத்தகங்களை அங்கே வாங்கினேன்.

தொண்ணூறுகளில் திடீரென்று சில இலக்கிய மொழிபெயர்ப்புகளை அரசு வெளியிட்டது. கலீல்கிப்ரானின் தீர்க்கதரிசி, ஆலிவர் கோல்ட்ஸ்மித்தின் வேக்பீல்டு பாதிரியார் போன்ற சில நூல்கள் வெளிவந்தன. 

அரசை நச்சிவாழும் சிலரின் மொழிபெயர்ப்புகள்தான் இவ்வகையில் வாய்க்கும். இப்போது செம்மொழிநிறுவனம் மொழிபெயர்ப்புகளைச் செய்துவருகிறது. பெரும்பாலும் தமிழர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்பபது என்பது அவர் எப்பேர்பட்ட எழுத்துவல்லமையுடையவர் என்றாலும் பயனற்றதானவே அமைகிறது என்பதுதான் நடைமுறை.

ஏ.கே.ராமானுஜத்தின் சங்க இலக்கிய, பக்தி இலக்கிய மொழிபெயர்ப்புகள்தான் சிறப்பாக அமைந்தன. 

ஜார்ஜ் எல் ஹார்ட் போன்ற வெளிநாட்டவர் மொழிபெயர்ப்புகள் மிகச்சிறந்தவை இல்லையென்றாலும் பாராட்டத்தக்கவையாகவே அமைந்துள்ளன. 

ஆனால் இங்கே தமிழ்நாட்டவர் செய்துள்ள சங்க இலக்கிய, காப்பிய மொழிபெயர்ப்புகள் இயல்பானவைகளாய் இல்லை என்பதுதான் உண்மை. ஆங்கிலோ-தமிழ் எழுத்தாளர்களின் மொழிபெயர்ப்புகள்கூட இப்படித்தான் உள்ளன. 

புகழ்பெற்ற பென்குயின் பதிப்பகம் வெளியிட்ட ம.லெ.தங்கப்பாவின் சங்க இலக்கிய நூல் கூட பரவாயில்லை என்ற நிலையில்தான் அமைந்துள்ளது. 

ஆங்கிலத்தில் வெளியான நவீன இலக்கிய மொழிபெயர்ப்புகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். லட்சுமி ஹோம்ஸ்ட்ரோமின் மொழிபெயர்ப்புகள் மிகமிகச் சாதாரணமானவை.

வேதமொழி, இதிகாச மொழி, சமஸ்கிருதம், பிராகிருதம் முதலிய வடமொழிப் பழம் இலக்கியங்கள் பல தமிழ்ப்படுத்தப்பட்டுள்ளன. ஜம்புநாதனின் வேதமொழிபெயர்ப்புகள், மகாபாரதத்தின் கும்பகோணம் பதிப்பு போன்றவை உண்மையில் கொண்டாடத்தக்கவை. ஜகந்நாதராஜாவின் பிராகிருத, பாளி மொழிபெயர்ப்புகள் குறிப்பிடத்தகுந்தவை.

இந்தி, வங்காளி, மராத்தி மற்றம் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிபெயர்ப்புகள் தமிழில் பேரளவில் வந்துள்ளன. தாகூர், சரத்சந்திரர், தாராசங்கர் பானர்ஜி, காண்டேகர் நூல்கள் அறுபதுகள் எழுபதுகளில் எக்கச்சக்கமாக தமிழ்ப்படுத்தப்பட்டன. 

இவ்வகையில் அமெரிக்க, ஆங்கில, ஐரோப்பிய இலக்கியங்களை தமிழ்ச்சடர் நிலையமும் ஜோதிநிலையமும் மொழிபெயர்த்து வெளியிட்டுத் தமிழுக்கு சேவைசெய்துள்ளன. 

அரபி, பாரசீக, உருது இலக்கியங்கள் முஸ்லீம் எழுத்தாளர்களால் தொடர்ந்து அதிக அளவில் தமிழாக்கப்பட்டுள்ளன.

த.நா.குமாரசாமி, ஆர்.ஷண்முகசுந்தரம், முக்கியமாக க.நா.சுப்ரமண்யம் ஆகியோரின் மொழிபெயர்ப்புகள் தமிழின் படைப்புமுகத்தையே மாற்றியமைத்தன என்றால் யாரும் மறுக்கமுடியாது. 

மாஸ்கோ முன்னேற்றப்பதிப்பக நூல்கள் தமிழுக்குக் கிடைத்த அரிய கொடையென்றுதான் கூறவேண்டும்.

இதற்கு எதிராக அமெரிக்கப் பிரச்சாரத்திற்காக வெளிவந்த பெர்ல் பப்ளிகேஷன் சில நல்ல அமெரிக்க இலக்கிய நூல்களை அளித்தது. 

க்ரியாவினுடைய மொழிபெயர்ப்புகளில் காஃப்கா, ஆல்பெர் காம்யு, அந்த்வான் து எக்சுபெரி ஆகிய எழுத்தாளர்களின் படைப்புகள் குறிப்பிடத்தகுந்தவை.

இன்றைய கணினி, இணைய, குளோபலைஷேசன் காலத்தில் பழைய மொழிபெயர்ப்புகளெல்லாம் மறுபதிப்புப் பெற்றுள்ளன. 

புதிய மொழிபெயர்ப்பாளர்கள் தோன்றியுள்ளனர். சமகால நூல்கள் இன்று மொழிபெயர்ப்பாக உடனுக்குடன் கிடைக்கும் சூழல் மெதுவாக உருவாகிவருகிறது.

இவ்வகையில் இன்றைய இந்த சர்வதேச மொழிபெயர்ப்புதினம், கோலாகலமாகக் கொண்டாடத்தக்கதாகவே இருக்கிறதுஎனலாம்.                          
தி இந்து - 12-10-2013 .                         

0 comments:

Post a Comment

Kindly post a comment.