Monday, October 7, 2013

தெலங்கானா - சரியான அணுகுமுறை எது? தி இந்து-05-10-2013
ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தனி தெலங்கானா அமைவது சாத்தியப்பட்டுள்ளது.
கோபம், பதற்றம், படபடப்பு, கவலை முதலான உணர்வுகள் இல்லாமல் மாநிலப் பிரிவினை நடந்திருப்பதாக வரலாற்றுப் பக்கத்தில் தகவல் இல்லை. இதற்கு தெலங்கானா மட்டும் விதிவிலக்கா என்ன? தெலங்கானாவும் இந்த அனுபவங்களுடன் பயணித்து வந்திருக்கிறது. 

வளர்ச்சியில் பின் தங்கியிருக்கும் ஒரு பகுதி, சரி நிகராய் முன்னேற்றம் காண்பதற்கு 'பிரிவினை' என்பது சரியான முடிவாக இருக்க முடியாது. எனினும், பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஒரு கோரிக்கையை முன்வைத்து நீண்ட காலமாக போராடும் பட்சத்தில், அரசியல் ரீதியாக பிரிவினைக்கு சம்மதம் தெரிவிப்பது இன்றியமையாததாகியுள்ளது. 

ஒரு விஷயத்தை, போராடிப் பெற முடியும் என்றால், போராட்டம் மூலமாக ஒரு நிகழ்வைத் தடுக்கவும் முடியும்தானே? தெலங்கானா உதயமாகக் காரணமாக இருந்தப் போராட்டப் பாதையை கையில் எடுத்துள்ளனர், சீமாந்திரப் பகுதியினர். 

சீமாந்திரா போராட்டங்கள் இதுவரை அமைதியாகவே நடைபெற்று வந்தாலும், போராட்டத்திற்கு அரசியல் தூண்டுதலால் வன்முறைகள் வெடிக்க வாய்ப்பு இருப்பது தெளிவாகத் தெரிகிறது. 

சீமாந்திரா மக்களின் நியாயமான கோரிக்கைகளை பரீசிலனை செய்ய வேண்டும் என்பதைக் கூட கருத்தில்கொள்ளாமல் மத்திய அமைச்சரவை தெலங்கானாவுக்கு அவசரமாக ஒப்புதல் அளித்துள்ளது. 

தெலங்கானா ஆதரவுப் போராட்டத்திற்கு பணிந்து, மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதா? சீமாந்திராவில் இயல்பு நிலையை காப்பதற்கு தவறிவிட்டதா என்பது தெளிவு பெறவில்லை. தேர்தல் அரசியல் கணக்குகளால் உந்தப்பட்டு, ஐ.மு.கூட்டணி அரசு இந்த முடிவை எடுத்துள்ளதா என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது. 

தெலங்கானா அமைவது என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்ட நிலையில், ஆந்திர பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தங்கள் கவனத்தை கிருஷ்ணா - கோதாவரி நதி நீர் பங்கீடு; புதிதாக உருவாகும் மாநிலத்துடன் சுமுகமான உறவை ஏற்படுத்திக் கொள்வது போன்ற ஆக்கப்பூர்வமான விஷயங்களில் திருப்புதல் அவசியமாகி இருக்கிறது. 

பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், இவ்விவகாரத்தை அரசியல் ரீதியாக அணுகுவதற்கான வழிகள் மிகவும் குறைவாக இருக்கின்றன. ஏனென்றால், மாநிலப் பிரிவினையை பொறுத்தவரை, மத்தியில் ஆளும் அரசின் கையே ஓங்கி நிற்கும் என்பது நிதர்சனம். 

ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் சரி, பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவும் சரி, இரண்டுமே தெலங்கானாவுக்கு ஆதரவாகவே இருக்கின்றன. 

இந்நிலையில், தெலங்கானா எதிர்ப்பு கட்சிகளான தெலுங்கு தேசமும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸும் தற்போது நடக்கும் எதையும் மாற்ற முடியாது என்பதே உண்மை. 2014 நாடாளுமன்ற தேர்தலிலோ அல்லது ஆந்திர சட்டசபை தேர்தலிலோ மகத்தான வெற்றிபெற்றால்கூட, தெலங்கானா விவகாரத்தில் இக்கட்சிகளின் கை, தளர்ந்தே இருக்கும் என்பதும் உறுதியாகிறது. 

பிரச்சனையின் போக்கினை கருத்தில்கொண்டு, பிரிவினையை முடிந்த வரை சுமுகமாக நடத்துவது அவசியம். அதேவேளையில் கடலோர ஆந்திரா, ராயலசீமா ஆகிய பகுதிகளின் கோரிக்கைகளையும் கருத்தில்கொள்ள வேண்டும். 

இரண்டு மாநிலங்களுக்கும் 10 ஆண்டுகளுக்கு ஹைதராபாத் பொதுவான தலைநகராக இருப்பதை அனுமதிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், மத்திய அரசு இன்னொரு காரியத்தையும் செய்யவேண்டியுள்ளது. வேலைவாய்ப்பு, அரசுக்குத் தேவையான வருவாய் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வது ஆகியவற்றில் இரு மாநில மக்களுக்கும் சமமான உரிமை வழங்க வேண்டியதே அந்தக் கடமையாகும். 

எனவே, சீமாந்திர மக்கள் கோபத்தையும் வருத்தத்தையும் தள்ளி வைத்துவிட்டு, வருவதை நம்பிக்கையோடு ஏற்றுக் கொள்ளவேண்டும். 

- The Hindu (அக்.5, 2013) தலையங்கம் பகுதியிலிருந்து.

0 comments:

Post a Comment

Kindly post a comment.