Monday, September 2, 2013

பெற்றோரே கண்காணிப்பு தேவை !


Image


காதல் புனிதமானது', "அதை அனுபவித்தவர்களுக்குத்தான் அருமை புரியும்' என்றெல்லாம் காதலுக்கு மரியாதை செலுத்துவது வாடிக்கையாகிவிட்டது. காதல் தேவைதான். எங்கே, எதற்கு காதல் தேவை என்பதுதான் முக்கியம்.
முன்பெல்லாம் காதலுக்கு சிறிதளவுதான் எதிர்ப்பு இருந்து வந்தது. அந்தக் காலக் கட்டத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக விரல் விட்டு எண்ணத்தக்க வகையில் காதல் பிரச்னைகள் தலைதூக்கி வந்தன. இவற்றால் பெரிய அளவில் சமுதாய பிரச்னைகள் உருவாகவில்லை.

இன்றைக்கு பல்வேறு இடங்களில் காதல் என்பது சமூக பிரச்னைகளுக்கு தலையாய காரணகர்த்தாவாக மாறியிருப்பதுதான் வேதனை. காதல் தேவையா, இல்லையா என்ற உள்விவகாரத்தை ஆய்வு செய்வதால் பயனில்லை.

அதேசமயம், இன்றைய காலகட்ட காதல் எங்கே, எப்படி உருவாகி, எப்படி பிரச்னைகளை உருவாக்குகிறது என்பதுதான் தலையாயப் பிரச்னையாக காணப்படுகிறது. ரெண்டும் கெட்டான் வயதான 16-க்கும் 20-க்கும் இடைப்பட்ட வயதில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள், காதல் என்ற வலையில் சிக்கி தங்களது எதிர்காலத்தை வீணாக்கி வருவதாக, புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் கொடுமை என்னவென்றால், காதல் என்றால் என்னவென்பதே அறியாமல் நண்பர்கள், தோழிகள் பெருமைபடப் பேசுவதை நம்பி, காதல் என்ற பெயரில் பெரும்பாலான இளைஞர்கள், பெண்கள் தங்களது வாழ்க்கையைச் சீரழித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

சமீபத்தில், நண்பர் ஒருவரின் மகளான பள்ளி இறுதியாண்டு படிக்கும் மாணவி, குடும்ப நண்பர் ஒருவரிடம் கூறுகையில், "எனது வகுப்பறையில் படிக்கும் மாணவர்களில் குறிப்பிட்ட ஒரு மாணவன் மீது என்னை அறியாமல் ஆர்வம் ஏற்பட்டது.

அவனது நடவடிக்கைகள் சரியில்லாதபோதும், அவனை விட அழகான, நன்றாகப் படிக்கும் சில மாணவர்கள் இருந்தபோதும் அவனிடம் பழகவே எனது மனம் துடித்தது. என்னை நானே கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் தவிக்கிறேன்.

இதனால், எனது படிப்பும் பாதிக்கப்படுகிறது' என்ற அந்த மாணவி, இந்த குழப்பத்திலிருந்து விடுபட ஆலோசனை வழங்குமாறு கூறியிருக்கிறார். அந்த நண்பரும் ஆலோசனைகள் வழங்கியிருக்கிறார். ஆனாலும், அவரது மனதில் குழப்பம் நீடிப்பதாகவும், படிப்பில் முழு ஈடுபாடு காட்ட முடியாமல் தவிப்பதாகவும் கூறப்படுகின்றது.

இந்த மாணவி மட்டுமின்றி, இதே நிலையில் இவரது வயதுடையவர்கள் தவிப்பதை அறிய முடிகிறது. இதற்கு தற்கால திரைப்படங்கள் காட்சிகள், தொலைக்காட்சி தொடர்கள் என பொத்தாம் பொதுவாக கருத்துகளை கூறிவிட்டு ஒவ்வொரு பெற்றோரும் தாங்கள் தப்பித்துக் கொள்வதிலேயே கவனமாக இருக்கின்றனர். தங்களது குழந்தைகள் காதல் பாதைக்கு செல்வதற்கு காரணம் என்ன என்பதை பெரும்பாலான பெற்றோர்கள் அறியாமலேயே இருப்பது தான் கொடுமையிலும் கொடுமை என்கின்றனர் கல்வியாளர்கள்.

முந்தைய காலத்தில் இருந்த கூட்டுக்குடும்ப கட்டமைப்பில் பெற்றோர் மட்டுமின்றி, பிற குடும்பத்தினரும் குழந்தைகளைக் கண்காணிப்பர். பல்வேறு வகையான ஆலோசனைகளும் கிடைக்கும். தவறி பாதை மாறிச் செல்லும்போது கண்காணித்து நல்வழிப்படுத்தவும் வாய்ப்பு கிடைத்தது. கூட்டுக் குடும்பங்கள் சிதைந்துவிட்ட நிலையில், தனிக் குடும்ப கட்டமைப்பில் பணத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்ற சூழலில், குழந்தைகளை கவனிப்பதில் இருந்து பெரும்பாலான பெற்றோர் தவறிச் செல்கின்றனர். சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படத்தில் கூட, பெற்றோரின் கவனிப்பிலிருந்து குழந்தைகள் எப்படியெல்லாம் பாதை மாறிச் செல்கின்றனர். முக்கியமான விஷயங்களில் கூட பெற்றோர் விழிப்பாக இல்லாமல் போவதை இயக்குநர் சுட்டிக் காட்டியுள்ளார். இவர்களைப் போன்றவர்கள் காதல் என்ற பெயரில் செய்த தவறால் அநாதை குழந்தைகள் உருவாவதாக, அந்த திரைப்படத்தில் முடிவை கொண்டு சென்றிருந்தாலும், இருவரது பெற்றோரும் செய்யத் தவறும் சில கடமைகளை ஓரளவு தைரியமாக சுட்டிக் காட்டியுள்ளார்.

எனவே, இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் காதல் என்ற வலையில் வீழ்ந்து பாதை மாறிச் செல்வதற்கு பெற்றோரின் கண்காணிப்பில் ஏற்பட்டுள்ள குறைபாடே முக்கிய காரணம் என்பதை புறந்தள்ளி விட முடியாது. தனிக் குடித்தன வாழ்க்கை முறையில் குழந்தைகள் பாதை மாறிச் செல்ல ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன.

இன்றைய பணத் தேவை அதிகம் உள்ள சூழலில், அவற்றுக்காக ஓடுவதற்கே நேரமில்லாத நிலையில், குழந்தைகளைக் கண்காணிப்பதற்கு எங்களுக்கு எங்கே நேரம் இருக்கிறது என பெரும்பாலான பெற்றோர்கள் கேள்வி எழுப்புவது அர்த்தமற்றது. பணம் தேவைதான். கோடிகோடியாக செல்வத்தைக் குவித்தாலும், அதற்கெல்லாம் மேலான குழந்தைச் செல்வத்தின் எதிர்காலம் முக்கியம் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். எத்தனை நெருக்கடிகள் இருந்தாலும், குழந்தைகளைக் கண்காணித்து நல்வழிப்படுத்தும் பணியை ஒவ்வொரு பெற்றோரும் செய்து விட்டோமென்றால், அவர்களை நல்வழிப்படுத்தி விடலாம்.

கே.எஸ். பசும்பொன்முத்து, மதுரை.

நன்றி :-தினமணி, 02-09-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.