Monday, September 2, 2013

ஏனிந்த வெளிநாட்டு மோகம் ?பாரதம் போன்ற பரந்து விரிந்த தேசத்தில், இளைஞர்களின் கனவுக் கோட்டையான உயர்கல்வியின் வளர்ச்சி ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே செல்வதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. கற்பதில் மட்டுமே மனதையும், அறிவையும் ஒருமுகப்படுத்தி கட்டுப்பாட்டுடன் கூடிய தரமிக்க மாணவர்களாய் விளங்குபவர்கள் தங்களது ஒளிமயமான எதிர்காலக் கனவை நனவாக்கும் பொருட்டு அந்நிய மண்ணுக்குப் பறந்து, உயர்கல்வி கற்பது ஒன்றையே வாழ்க்கையில் லட்சியமாக, இலக்காக எண்ணி செயல்பட்டு வருகின்றனர்.

இதற்கான கல்விக் கடனை அள்ளி வழங்கிட நமது பொதுத் துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும் ஒன்றோடொன்று போட்டி போட்டுக் கொண்டு முன்வந்தாலும், அவர்கள் சொல்லக்கூடிய வழிகாட்டு விதிமுறைகளை எந்தவித தயக்கமும் இன்றி நிறைவேற்றி முடிக்க இங்கே பொருள் படைத்த மேல்தட்டு மக்களால் மட்டுமே சாத்தியப்படுகிறது என்பது கசப்பான உண்மை!

ஆனால், அதே சமயத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தினர் இந்த ஆசையை தமது குழந்தைகளுக்கும் பெற்றுத் தர ஆசைப்பட்டால், கை பிசைந்து நிற்பதைத் தவிர வேறு மார்க்கமில்லை.

இந்த சுதந்திர பூமியில், அந்த பாமர மக்களால் அதீதமான கற்பனை உலகில் வாழ்வதைத் தவிர நிஜத்தில் பெரிதாக எதையும் செய்யவோ, சாதிக்கவோ இயலவில்லை என்பதுதான் உண்மை.

இவ்வாறு, ஒரு சாராருக்கே உரித்தானதாக மாறியுள்ள இந்த உயர்கல்வி ஆராய்ச்சிப் படிப்பை (எம்எஸ்) படித்து அறிய வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக மட்டுமே அந்த மாணவர்கள் அந்நிய மண்ணுக்குப் பறக்க ஆசைப்படுவதில்லை.

படிப்பைத் தொடர்ந்து, துவக்கத்திலேயே அதிக ஊதியத்தில் ஒரு கெüரவமான வேலையைத் தேடுகிற படலத்தைத் துவக்கி, எளிதாக வெற்றியும் பெற்று விடுகிறார்கள். அதனைத் தொடர்ந்து நல்லதொரு இடத்தில் கல்யாணச் சந்தையில் ஒரு வியாபாரம். கல்யாணம் முடித்த கையோடு நிரந்தரமாய் அங்கேயே குடியுரிமை வாங்கி, எஞ்சிய வாழ்நாட்களை எந்த பிக்கல் பிடுங்கல் இல்லாமல் சந்தோஷமாய் நகர்த்துவதற்கு முடிவு எடுத்து விடுகிறார்கள்.

அதையடுத்து, முடிந்தால் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை பிறந்த மண்ணுக்கு வந்து, விருந்தினராக ஒரு பத்துப் பதினைந்து நாட்கள் மட்டும் இங்கே இருந்து விட்டுப் போவது. அப்படியே வருகிற வேளையிலும் சொந்த ஊருக்கு வந்து, பிறந்து, வளர்ந்து, ஓடி விளையாடிய தாய் மண்ணை நேசித்து, சுவாசித்து ரசிப்பதில்லை, மகிழ்வதுமில்லை. பக்கத்திலிருக்கும் பெரிய நகரின் நட்சத்திர ஓட்டல் "குளு குளு' அறையில் தங்கிக் கொண்டு, ஒரு வாரம், பத்து தினங்களைத் தள்ள வேண்டியது. சொந்த வேலைகள் அத்தனையையும் பட்டியல் போட்டு, சட்டுபுட்டென முடித்துக் கொண்டு, மறுபடியும் அந்நியனாக வாழவே ஆசைப்பட்டு விண்ணில் ஏறி விரைவாய்ப் பறப்பது.

இதுதான் இன்றைய தேதியில், நமது நாட்டின் உயர்கல்விப் பங்களிப்பில் பெரும்பான்மையாக நடக்கிறது. இதற்காக, நமது மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் முக்கியமான நாடுகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ரஷியா போன்றவைதாம். பாரம்பரியத்திலும், மக்கள்தொகையிலும் நம்மைவிட அளவு குறைந்த நாடுகளான இவைகளுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் நம் நாட்டுப் பணத்தினை அள்ளிக் கொண்டு போய் கொட்டிக் கொடுக்கும் காரணம்தான் என்ன?

இத்தகைய ஆராய்ச்சிப் படிப்பை படிப்பதற்கும், படித்து முடித்த கையோடு கவர்ச்சிகரமான ஊதியத்தை அள்ளித் தரும் வேலைகளுக்கும் இந்திய மண்ணில் இடமில்லாது போன காரணமும் என்ன? நமது கல்வித் துறை சார்ந்த நிபுணர்களுக்கு இந்த சாமர்த்திய வழி தெரியாத ஒன்றா அல்லது செயல்படாத தன்மையினாலா?

அந்நிய ஆதிக்கத்திலிருந்து நமது தாய்த் திருநாடு விட்டு விடுதலையாகி ஆண்டுகள் அறுபத்தி ஆறு உருண்டோடி விட்டன.

ஆண்டு முடிந்த அத்தனை ஆட்சிக் காலத்திலும் வெளியுறவு அமைச்சர் துவங்கி பிரதமர், குடியரசுத் தலைவர் வரையிலான பிரபலங்கள் அடிக்கடி அயல்நாட்டுப் பயணத்தை தவறாது மேற்கொண்டுள்ளனர்.

பாரதத்துடன் தோழமை உணர்வு பாராட்டும் நட்பு நாடுகளுடனான உறவுகளை மென்மேலும் பலப்படுத்துவதிலும், அந்நாடுகளின் தொழில், வர்த்தக வளர்ச்சி போன்ற அத்தியாவசிய காரணங்களுக்காகவும் இந்த பயணங்கள் இதுகாறும் பயனுள்ளதாகவே அமைந்திருந்ததென சொல்லப்படுகிறது. அப்படி அவைகள் அமைந்திருந்தால் மெத்த மகிழ்ச்சியே.

அதேவேளையில், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு விஷயங்களில் மேற்சொன்ன நாடுகளில் செய்யப்பட்டுள்ள அடிப்படைக் கட்டமைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன? அங்கெல்லாம் அவை வெற்றிகரமாய் செயல்படுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் வழிமுறைகள் என்னென்ன? அவற்றின் அடியொற்றி நமது நாட்டிலும் செய்யப் பழகிக் கொண்டால், லட்சக்கணக்கான மாணவர்கள் ஆண்டுதோறும் இம் மண்ணிலிருந்து வெளியேறிப் போவதை தடுத்து நிறுத்தும் வழிவகையைக் காணலாமே. அவர்கள் உயர்கல்வி ஆராய்ச்சிக்காக அயல்நாடுகளில் செலவழிக்கிற பெரும் பணத்தை இங்கே உள்நாட்டிலேயே பயன்படுத்தினால், அது நமது நாட்டு வளர்ச்சிக்கு உதவும்தானே!

இவை தவிர்த்த இன்னொரு முக்கியமான அம்சத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். திறமையும், நேர்மை உணர்வும் உள்ள மாணவர்களில் கணிசமானவர்கள் நமது தாய்நாட்டை விட்டு ஆண்டுதோறும் வெளியேறிப் போவதால் ஏற்படும் அற்புதமான மனித ஆற்றல் இழப்பு நமது தேசத்துக்கு பெரும் துயரம் அல்லவா?

இதனை சரிப்படுத்தி நமது நாட்டு நலனுக்காக, மேன்மைக்காக உயர்கல்விப் படிப்பையும், அதன் தொடர்ச்சியான வேலைவாய்ப்பையும் இங்கேயே பெறுகிற வண்ணம், உரிய ஏற்பாடுகளை அரசு இனியும் தாமதிக்காது ஏற்படுத்தித்தர முயற்சி எடுக்க வேண்டும். இதுவே இன்றைய காலகட்டத்தின் அவசிய, அவசரத் தேவை!

வெ. கணேசன், அருப்புக்கோட்டை.

நன்றி: தினமணி, 02-09-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.