Saturday, September 28, 2013

வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமை: சிக்கல் அல்ல: சீர்திருத்தமே !


விருப்பமில்லாவிடில் அனைத்து வேட்பாளர்களையும் வாக்குப்பதிவின் போது நிராகரிக்க வாக்காளருக்கு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அரசியல் கட்சிகள் பரவலாக வரவேற்பும் ஆதரவும் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் மாற்றுக்கருத்துகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:

ரஷீத் ஆல்வி (காங்கிரஸ்): 

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதால் பல்வேறு பிரச்னைகள் எழும். தேர்தலின்போது 60 சதவீத வாக்குகள்தான் நம் நாட்டில் பதிவாகிறது. இந் நிலையில், வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமையைப் பயன்படுத்தி பெரும்பாலான தொகுதிகளில் வாக்குரிமை செலுத்தப்பட்டால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் எழும். எனவே, எந்தெந்த அம்சங்களை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் இத் தீர்ப்பை வழங்கியுள்ளது என்பதை ஆராய வேண்டும்.

முக்தார் அப்பாஸ் நக்வி (பாஜக): 

தேர்தல் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக உச்ச நீதிமன்ற தீர்ப்பைப் பார்க்கிறோம். இத் தீர்ப்பை வரவேற்கிறோம். 25-30 ஆண்டுகளுக்கு முன்பு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தலைத்தான் நாம் பார்த்தோம். ஆனால், இப்போது 4-5 மாதங்களிலேயே தேர்தல் நடைபெறுகிறது. இந் நிலை மாறுவதற்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கைகொடுக்கும்.

மாயாவதி (பிஎஸ்பி): 

வேட்பாளரை நிராகரிக்கும் வாக்காளரின் உரிமையை சட்ட மேதை அம்பேத்கர் வலியுறுத்தினார். அதை ஆமோதிக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் சிறப்பான தீர்ப்பை அளித்துள்ளது. இதன் மூலம் வருங்காலத்தில் குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் தேர்தலில் நிறுத்தாத நிலை ஏற்படும்.

டி. ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்): 

தேர்தல் சீர்திருத்தத்துக்கு இத் தீர்ப்பு ஒரு முன்னேற்றமே தவிர, அவை தேர்தல் முடிவுகளில் விளைவுகளை ஏற்படுத்தாது. குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் இதன் மூலம் நிறுத்தப்படமாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்த முடியாது.

விகிதாசார பிரதிநிதித்துவம் கொண்டு வரவும், பண பலம், ஆள் பலத்தைக் கட்டுப்படுத்தி அனைத்துத் தரப்பினரும் போட்டியிடும் சமநிலைதான் வெளிப்படையான தேர்தலுக்கு வழிவகுக்கும்.

சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): 

நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் தேர்தல்கள்தான் நேரடிப் பங்கு வகிக்கின்றன. தேர்தல்களில் நீதித் துறையும், தேர்தல் ஆணையமும் போட்டியிடப் போவதில்லை. அதை அரசியல் கட்சிள்தான் எதிர்கொள்கின்றன. எனவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சீர்திருத்தத்தின் சொற்பமான பகுதியாகத்தான் பார்க்கிறோம். நம் நாட்டுக்குத் தற்போதைய தேவை, பிரத்யேக தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகள்தான்.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி: 

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை முழு மனதுடன் வரவேற்கிறேன். நமது அரசிலமைப்பில் இந்த உத்தரவு மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. நமது ஐனநாயகத்தை வலிமைப்படுத்தும் தேர்தல் சீர்திருத்தங்களில் இது முக்கியமானதாகும். இத்துடன், வாக்களிப்பதைக் கட்டாயமாக்கும் சட்டமும் வந்தால், அது ஐனநாயகத்துக்கு மேலும் வலு சேர்க்கும்.

வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமையை அளிப்பதும், வாக்களிப்பதைக் கட்டாயமாக்குவதும் கருத்துரிமைக்கு எதிரானது அல்ல. மாறாக, இவற்றால் கருத்துரிமை முழுமைதான் பெறுகிறது. தேர்தலில்களில் வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமை வாக்காளர்களுக்கு கிடைப்பது குறித்து பல கட்சிகள் அவ நம்பிக்கையில் இருந்தாலும், இது நான் எதிர்பார்த்ததுதான்.

சோம்நாத் சாட்டர்ஜி (மக்களவை முன்னாள் தலைவர்): 

வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமைச் சட்டம் எந்த பலனையும் தராது. இந்த உரிமையைப் பயன்படுத்தி வெறும் 20 தொகுதிகளிலுள்ள வேட்பாளர்கள் அனைவரும் நிராகரிக்கப்பட்டால்கூட நாடாளுமன்றம் அமைவதும், அரசு அமைவதும் முடியாமல் போய்விடும்

இது போன்ற சட்டங்களை இயற்றுவதற்கு உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்புகள் மட்டும்தான் சொல்லமுடியும். நாம் அவற்றை மதிக்கக் கடமைப்பட்டுள்ளோம். அதற்காக அவற்றை சட்டமாக்கியே தீரவேண்டும் என்கிற அவசியம் இல்லை.                                        

தினமணி, 28 - 09 -2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.