Wednesday, September 11, 2013

ஆசியாவில் 10ல் ஒரு ஆண் கற்பழிப்பில் ஈடுபடுகிறார் !

Image


ஆசியாவில் 10ல் ஒரு ஆண் கற்பழிப்பில்
ஈடுபடுகிறார்: ஐ.நா. ஆய்வில் தகவல் !


ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் ஆசியாவில் 10ல் ஒரு ஆண் பெண்களை கற்பழிக்கும் செயலில் ஈடுபடுகின்றனர் என தெரிவித்துள்ளது. ஆசியாவின் 6 நாடுகள் இந்த ஆய்வுக்காக எடுத்து கொள்ளப்பட்டன. அவை வங்காளதேசம், சீனா, கம்போடியா, இந்தோனேஷியா, பப்புவா நியூ கினியா மற்றும் இலங்கை ஆகும்.

கடந்த ஜனவரி 2011-டிசம்பர் 2012 வரையில் சுமார் 10,178 ஆண்களிடம் ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளில் ஒன்பது இடங்களில் கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால் அவற்றில், கற்பழிப்பு என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை.

அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளில், உங்களது மனைவி அல்லது பெண் நண்பர் செக்ஸ் விருப்பம் இல்லாவிட்டாலும் அவர்கள் ஏற்று கொள்வார்கள் என்று கருதி செக்சில் ஈடுபட்டதுண்டா? என ஒரு கேள்வி இருந்தது.

ஒரு பெண் அல்லது சிறுமி, அதிக போதையில் அல்லது அதிகமாக குடித்திருக்கும்போது, அவள் விரும்புகிறாளா அல்லது இல்லையா என்பதை தெரிவிக்க இயலாத நிலையில், நீங்கள் செக்சில் ஈடுபட்டதுண்டா? என மற்றொரு கேள்வி இருந்தது.

இக்கேள்விகளுக்கு பதிலளித்தவர்களில், பப்புவா நியூ கினியாவை சேர்ந்த 10ல் 6 பேர் வலுக்கட்டாயமாக ஒரு பெண்ணை செக்சிற்கு உட்படுத்தியதாக தெரிவித்துள்ளனர். இது வங்காளதேசத்தின் நகர்ப்புறங்களில் மிக குறைந்த அளவாக 10ல் ஒருவருக்கும் கீழ் என்றும் இலங்கையில் 10ல் ஒருவருக்கு மேல் என்றும் உள்ளனர். அதுவே, கம்போடியா, சீனா மற்றும் இந்தோனேஷியா நாடுகளில் 5ல் ஒருவர் என்ற அளவில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

நெருங்கிய உறவுகள் என கருதப்படும் மனைவி மற்றும் பெண் நண்பரை கற்பழித்ததாக ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டவர்களில் 4ல் ஒரு பங்கினர் தெரிவித்துள்ளனர். ஆய்வு அறிக்கையின்படி, மொத்தம் 24 சதவீதத்தினர் நெருங்கிய உறவுகளுடன் கற்பழிப்பில் ஈடுபடுவதாகவும், இது வங்காளதேசத்தில் 13 சதவீதமாகவும் மற்றும் பப்புவா நியூ கினியாவில் 59 சதவீதமாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------நன்றி :-தினத்தந்தி - 11-09-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.