Sunday, September 8, 2013

கவிராயர்கள் எழுவர் -தினமணி -08-09-2013



நகரம் முத்துச்சாமிக் கவிராயர்

சங்கரன்கோயிலைச் சேர்ந்த "நகரம்' எனும் கிராமத்தில் பிறந்தவர். தேவியின் அருள் பெற்றவர்; வாக்குப்பலிதம் உடையவர். போடிநாயக்கனூர் பெருநிலக்கிழார் மீது அன்னம் விடு தூது, ஆத்திப்பட்டி சங்கிலி வீரப்பப் பாண்டிய வன்னியர் மீது பள்ளு, புரவிப்பாளையம் பெருநிலக்கிழார் மீது விஜயகும்மி, கருங்காலக்குடிக் காதல், கும்மிபதம், குறவஞ்சி முதலிய நூல்களையும் பல தனிப்பாடல்களையும் இயற்றியுள்ளார்.

மாம்பாக்கம் திருச்சிற்றம்பலக் கவிராயர்

இவர் மாம்பாக்கத்தில் வாழ்ந்தவர். அண்ணாமலைச் சதகம் என்ற நூலை இயற்றியுள்ளார். இவரை திருச்சிற்றம்பலக் கவிராயர் என்றும் அழைப்பர்.

கந்தசாமிக் கவிராயர்

வீராச்சி மங்கலத்தில் (கொங்கு மண்டலம்) வாழ்ந்தவரான இவர், சின்னக் கருப்பண்ண கவிராயரின் மகன். "வேளாளர் புராணம்' என்ற நூலை இயற்றியுள்ளார்.

முத்தமிழ்க் கவிராயர்

இவர் கி.பி.1994-இல் வாழ்ந்தவர். "சுசீந்திர தலபுராணம்' இயற்றியுள்ளார்.

பொன்னாயிரங் கவிராயர்

இவர் சேற்றூரில் பிறந்தவர். இயற்பெயர் சிந்தாமணிப் பிள்ளை. சேறைத் தலபுராணம் அரங்கேற்றத்தின்போது, மன்னர் பூமாரிப் பொழிந்து, 1000 பொற்காசுகளைக் கொண்டு கவிராயரை அபிஷேகம் செய்து போற்றியதால், "பொன்னாயிரங் கவிராயர்' எனப்பட்டார். சேறைத் தலபுராணம், புதுவை வடவாரீசர் புராணம், தென்மலைத் திரிபுரத்தீசர் புராணம், செந்தமிழ்ப் பாமாலை, திருவோலத்து வெற்புமை நான்மணிமாலை, சேறை பதிற்றுப்பத்தந்தாதி, கலம்பகம், உலா, ஒளிர்மணி மாலை, சங்கர குமாரர் பிள்ளைத்தமிழ், உபய விநாயகர் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

கோவை அருணாசலக் கவிராயர்

இவர் கோவையைச் சேர்ந்தவர். யவன காவியம், பேரூரு உலா, அவிநாசி உலா, பாம்பண்ணகாண்டன் குறவஞ்சி, மருதாசலக் கடவுள் பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.


சிறைமீட்டான் கவிராயர்

இவர் கொங்குநாட்டு "பாகை' எனும் ஊரில் பிறந்தவர். இவரது முழுப்பெயர் பிள்ளைப்பெருமாள் சிறைமீட்டான் கவிராயர். இவர், அர்த்தநாரீசுவரர் சந்திரசேகர மாலை, கபிலமலை குழந்தைக் குமாரர் வருக்கக் கோவை முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.                                             

நன்றி :- தமிழ்மணி, தினமணி-08-09-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.