Saturday, August 24, 2013

மும்பையில் பெண் புகைப்பட நிருபர் பலாத்காரம்: இளைஞர் கைது !



                                     பலாத்கார சம்பவத்தில் தொடர்புடைய
                                                  5 பேரின் வரைபடங்கள்.

மும்பையில் பெண் புகைப்பட நிருபர், 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானார். இதில் தொடர்புடையதாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 4 பேரைத் தேடும் பணியில் மும்பை போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. பலாத்கார சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும், மத்திய மாநில அரசுகளைக் குற்றம்சாட்டியும் மும்பையிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மகளிர் அமைப்பினர், பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

புகைப்படம் எடுக்கச் சென்றார்: மும்பையில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் புகைப்பட நிருபராகப் பணிபுரிந்து வந்த 23 வயது பெண், வியாழக்கிழமை மாலை தனது ஆண் நண்பர் ஒருவருடன் புகைப்படம் எடுப்பதற்காக மும்பை லோயர் பேரல் பகுதியில் ஆள் அரவமின்றி பாழடைந்து கிடக்கும் சக்தி மில்ஸ் வளாகத்துக்கு சென்றுள்ளார். அங்கு 5 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழி மறித்தது. அப்பெண்ணின் நண்பரை தாக்கி, கட்டிப் போட்டது. பின்னர் அந்த 5 பேரும் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மாலை 6-லிருந்து 6.30 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவம் இரவு 8.30 மணியளவுக்கே போலீஸýக்கு தெரியவந்தது. முன்னதாக 8 மணியளவில் அப்பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மும்பை ஜேஸ்லோக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அப்பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளது. அதே நேரத்தில் பெண்ணுக்கு உள்காயம் அதிகமாக ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர் கைது: இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களில் ஒருவரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் 4 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இவர்கள் அனைவரும் 24 முதல் 30 வயதுக்கு உள்பட்டவர்கள்.

பாதிக்கப்பட்ட பெண்ணுடன் சென்ற அவரது நண்பர் கூறிய அடையாளத்தின்படி குற்றவாளிகளின் படங்கள் வரையப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் இருவர் குடிபோதையில் இருந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனர் சத்யபால் சிங் கூறியது: பாலியல் பலாத்கார சம்பவத்தில் தொடர்புடையவர்களில் ஒருவரை கைது செய்துள்ளோம். சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற நால்வரின் பெயர், விவரங்களை அவர் கூறியுள்ளார். எனவே மற்றவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றார்.

கைது செய்யப்பட்ட இளைஞர் பெயர் முகமது அப்துல் என்ற சந்த். மற்றவர்கள் விஜய் ஜாதவ், குவாசிம் பெங்காலி, சலீம், அஸ்பக் எனத் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் சுமார் 20 பேரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். அதே சமயம், குற்றத்தில் ஈடுபட்ட 5 பேரும் கைது செய்யப்பட்டு விட்டனர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் முரளி தேவ்ரா கூறியுள்ளது முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்

தில்லி சம்பவத்தைப் போன்று மும்பையிலும் பலாத்கார சம்பவம் நிகழ்ந்துள்ளது பெண்களுக்கு உள்ள பாதுகாப்பு குறித்து கேள்வியை எழுப்பியுள்ளது. இந்த சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கக் கோரியும் மும்பையிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்களும், சமூக நல அமைப்பினரும் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

பலாத்கார சம்பவம் தொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனரிடம் பேசி விவரங்களைத் தெரிந்து கொண்டேன். இது மிகவும் சோகமான, துரதிருஷ்டவசமான நிகழ்வு. இது தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்குமாறு மும்பை போலீஸூக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

- மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே

மிகவும் கண்டிக்கத்தக்க இந்தக் குற்றத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் மருத்துவச் செலவுகளை மாநில அரசு ஏற்றுக் கொள்ளும். குற்றவாளிகளை விரைவில் கைது செய்யுமாறு போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படுவது உறுதி செய்யப்படும்.

- மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவாண்
இந்த சம்பவம் தொடர்பாக மிகத்தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

- மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல்                                               
நன்றி :- தினமணி, 24-08-2013                                          


0 comments:

Post a Comment

Kindly post a comment.