Sunday, August 25, 2013

தினமணி தமிழ்மணியில் 6 கவிராயர்கள் அறிமுகம்- 25-08-2013

கவிராயர்கள்



செஞ்சாலி வன்னியப்பக் கவிராயர்

இவர் செஞ்சாலி என்ற ஊரில் வாழ்ந்தவர். தஞ்சை இராசமன்னார் கோயில் சாமிநாத பாகவதரிடம் கல்வி பயின்றவர். "பாபநாசம் உலகம்மை பதிகம்' என்ற நூலை இயற்றியுள்ளார்.

முருகதாசக் கவிராயர்

இவர் குலசேகரபுரத்தில் (சேரநாடு) பிறந்தவர். இவரது இயற்பெயர் சிவராமலிங்கம் பிள்ளை. முருகன் திருவருள் வாய்க்கப்பெற்ற இவர், குற்றாலம் அருகில் உள்ள "திருமலை'க்குத் தலபுராணம் பாடியுள்ளார். திருமலைக் குமரன் திருப்புகழ், திருமலைக் குமரன் அந்தாதி, திருமலைக் குமரன் பதிகம் முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார்.

வைரவநாதன் கவிராயர்

இவர் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள அணியாபரணநல்லூரில் பிறந்தவர். அடைக்கலச் சதகம், திருச்செந்தூர் யமகக் கோவை, போற்றி மாலை, கழுகாசலர் கோவை, திருச்செந்தூர் சிலேடை வெண்பா முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.

சங்கரமூர்த்திக் கவிராயர்

இவர் இராஜபாளையத்தில் பிறந்தவர். திருவாவடுதுறை சிவஞான முனிவரிடம் இலக்கண-இலக்கியங்களையும் சைவ சிந்தாந்தங்களையும் கற்றவர். சேற்றூர் அவைக்களப் புலவராக விளங்கிவர். கன்னிவாடி மலையாண்டி சுப்பைய நாயக்கர் மீது ஐந்திணை கோவை, மாலைமாற்று, சித்திரக்கவி ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

ச. திருமலைவேற் கவிராயர்

கரிவலம்வந்தநல்லூருக்கு அருகிலுள்ள எட்டிசேரி என்ற கிராமத்தில் பிறந்த இவர், சங்குப்புலவரின் மகன். தன் பாட்டனார் திருமலைவேற் புலவரிடம் இலக்கண-இலக்கியங்களைப் பயின்றவர். ஊற்றுமலை மன்னர், சேற்றூர் மன்னர் ஆகியோரிடம் பாடிப் பரிசில் பெற்றவர். கருவைத் தலபுராணத்தை (1345 பாடல்கள்) இயற்றியுள்ளார். மேலும், பால்வண்ணநாதர் வண்ணம், மும்மணி மாலை, குருநாதத் தேவர் காதல், கோமதி பதிகம், வெண் செந்துறைப் பாமாலை, கருவை சந்தப்பா முதலிய நூல்களையும் பல தனிப்பாடல்களையும் இயற்றியுள்ளார்.

வேங்கடத்துறைவான் கவிராயர்

இவர் ஆழ்வார் திருநகரியில் பிறந்தவர். ராமன் மீது மிகுந்த பக்தி கொண்ட இவர், ஆழ்வார் திருநகரி, ஆழ்வார் கோயில் திருமுழுக்குப் பணியைச் செய்தவர். "மாறன் கோவை' (526 பாடல்கள்) என்ற நூலை இயற்றியுள்ளார்.

நன்றி:- தமிழ்மணி, தினமணி, 25-08-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.