Monday, August 26, 2013

ஆஷ் துரை கொலை வழக்கு -பகுதி-1

Image


மணியாச்சி சந்திப்பில் ரயில் வந்து நின்றது. முதல் வகுப்புப் பெட்டி அந்த ரயிலிலிருந்து கழற்றப்பட்டது. அதில் ஆங்கிலேய துரை ஆஷ், அவருடைய மனைவி இருவரும் இருந்தனர். ஊர் மக்கள், ஆஷ் துரையைக் காண வந்திருந்தனர். அந்த ஊரில், ஏன் அந்த ஜில்லாவிலே ஏதாவது நடக்க வேண்டுமென்றால், அதற்கு துரை மனது வைத்தால்தான் முடியும்.

ஆஷ் துரை வந்த ரயிலின் பெட்டியை, போட் மெயில் ரயிலோடு இணைக்க வேண்டும். துரையும் அவரது மனைவியும் கொடைக்கானலில் இருந்த தங்களது நான்கு குழந்தைகளையும் பார்க்கப் புறப்பட்டிருந்தனர்.

போட் மெயில் வருவதற்கு இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன. அந்தச் சமயத்தில் இரண்டு வாலிபர்கள், துரை இருந்த ரயில் பெட்டிக்குள் நுழைந்தனர். ஒருவன் எடுப்பான தோற்றத்துடன் காணப்பட்டான். தன்னுடைய நீண்ட தலைமுடியை சீவி, கொண்டை போட்டிருந்தான். மற்றொருவன் வேட்டி, சட்டை உடுத்தியிருந்தான்.

ஆஷ் துரை தன்னுடைய மனைவி மேரியுடன் ஆர்வமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தார். மேரியும் துரையும் எதிரெதிராக அமர்ந்திருந்தனர். ரயில் பெட்டியினுள் இருவர் ஏறி வருவதை துரை கவனிக்கவில்லை. வந்தவர்களில் ஒருவன், துரைக்கு அருகாமையில் அவர் முன் நேராக நின்றான். பெல்ஜியத்தில் தயாரிக்கப்பட்ட, பிரவுனிங் என்ற தானியங்கித் துப்பாக்கியை எடுத்தான். துரையின் நெஞ்சில் சுட்டான். அதுவரை அமைதியாக இருந்த ரயில் நிலையம் அதிர்ந்தது. துரை அவர் அமர்ந்திருந்த இடத்தில் அப்படியே சரிந்தார். அவருடைய மனைவி அதிர்ச்சியில் உறைந்தார்.

துரையைச் சுட்டவன், பிளாட்பாரத்தில் இறங்கி ஓடினான். ரயில் நிலையத்திலிருந்த வெகுஜன மக்கள் அவனைத் துரத்திக்கொண்டு ஓடினார்கள். ஓடியவன் நேராக பிளாட்பாரத்திலிருந்த கழிவறையின் உள்ளே நுழைந்து தாழிட்டுக்கொண்டான். மற்றவன், பிளாட்பாரத்தின் இன்னொரு பக்கம் ஒடி மறைந்தான்.

கழிவறையில் மறைந்த அந்த வாலிபன், தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டான். துரையை, அவருடைய சிப்பந்திகள் திருநெல்வேலி மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே துரையின் உயிர் பிரிந்தது.
ஆஷ் துரையின் கொலை, மதராஸ் மாகாணம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பரப்பரப்பாக பேசப்பட்டது. இறந்தவர் சாதாரண ஆள் இல்லை. அவர் திருநெல்வேலி ஜில்லாவின் கலெக்டர். மேலும் ஆங்கிலேயர். சுட்டவன் ஓர் இந்தியன். கொலை நடந்த தேதி ஜூன் 17, 1910. இன்னும் 5 நாள்களில், இங்கிலாந்தில் 5 வது ஜார்ஜ் மன்னர் முடிசூடிக்கொள்ள இருந்தார்.

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து புரட்சிகரமான செயல்கள் பல நாட்டில் நடந்து கொண்டிருந்தன. ஆனால் அனைத்து புரட்சிகர சம்பவங்களும், வட நாட்டில் அதுவும் குறிப்பாக வங்காளத்தில்தான் நடைபெற்றன. யாரும் தமிழகத்தில் இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. யார் இதை செய்திருப்பார்கள்? அவர்களுடைய பின்னணி என்ன? விசாரணையில் இறங்கியது ஆங்கிலேயக் காவல்துறை.

துப்பாக்கிச் சூடு நடத்தியவன் இளைஞன். அவனுக்கு சுமார் 25 வயது இருக்கும். அவனுடைய சட்டைப்பையில் காவல்துறை எதிர்பார்த்தது கிடைத்தது. அது ஒரு துண்டுக் காகிதம். அதில், ‘ஆங்கிலேய மிலேச்சர்கள் நம் நாட்டைப் பிடித்ததோடல்லாமல், நம்முடைய சனாதன தர்மத்தை இழிவுபடுத்தி அதை அழிக்க முற்படுகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் மிலேச்சர்களை விரட்டிவிட்டு , சுந்தரம் பெற்று, சனாதன தர்மத்தை நிலைநிறுத்த போராடிக்கொண்டிருக்கிறான். ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்த சிங், அர்ஜூனன் வாழ்ந்த இந்த பாரதத்தில் பசு மாமிசத்தை உண்ணும், 5 வது ஜார்ஜ் என்ற மிலேச்சனுக்கு மணிமகுடம் சூட்டுவதா? ஐந்தாவது ஜார்ஜ் மன்னன் இந்தியாவில் அடியெடுத்து வைத்தவுடனேயே, அவரைக் கொல்ல 3000 மதராசிகள் உறுதி மொழி எடுத்திருக்கின்றனர். அதை வெளிப்படுத்தும் விதமாகத்தான், அக்குழுவின் கடைநிலைத் தொண்டனாக இந்த காரியத்தை இன்று செய்தேன். பாரதத்தில் உள்ள அனைவரும் இப்படிசெய்வதைத்தான் தங்களுடைய கடமையாக நினைக்க வேண்டும்!’ என்று குறிப்பிட்டிருந்தது.

காவல்துறையினர், துப்பாக்கிச் சூடு நடத்தியது யார் என்று விரைவிலேயே கண்டுபிடித்து விட்டனர். அவர் தான் வாஞ்சிநாத ஐயர்.
வாஞ்சிநாதனின் வீட்டில் காவல்துறை சோதனை நடத்தியது. அதில் அவர்களுக்கு சில கடிதங்கள் கிடைத்தன. கடிதங்களில் கண்ட விவரங்களின் மூலம், ஆஷ் துரையைக் கொல்ல ரகசியக்குழு ஒன்று கூட்டுச்சதி செய்திருப்பது தெரியவந்தது. அந்தக் கடிதங்களில் ஆறுமுகப்பிள்ளையின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. காவல்துறை ஆறுமுகப்பிள்ளையின் வீட்டை இரவோடு இரவாக முற்றுகையிட்டது. ஆறுமுகப்பிள்ளை கைது செய்யப்பட்டார். அவர் வீட்டிலும் சில கடிதங்கள் கிடைத்தன. காவல்துறை அவரை மேலும் விசாரித்ததில், அவன் சோமசுந்தரப்பிள்ளை என்ற இன்னொருவரை காட்டிக் கொடுத்தார். காவல்துறை சோமசுந்தரத்தை சுற்றி வளைத்தது. சோமசுந்தரமும் கைது செய்யப்பட்டார். ஆறுமுகப்பிள்ளையும், சோமசுந்தரமும் அரசு தரப்பு சாட்சிகளாக (அப்ரூவர்) மாறினர்.

ஆறுமுகப்பிள்ளையும் சோமசுந்தரமும் கொடுத்த வாக்குமூலத்தை வைத்து, காவல்துறை தென்னிந்தியா முழுவதும் தேடுதல் வேட்டையை நடத்தியது. பதினான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பின்வருமாறு.

நீலகண்ட பிரம்மச்சாரி (முக்கியக் குற்றவாளி) – தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்தவர். பத்திரிக்கையாளர். சூர்யோதையம் என்ற பத்திரிகையை நடத்திவந்தார். ஆங்கிலேய அரசாங்கம் அப்பத்திரிக்கையைத் தடை செய்தது. அதன் பின்னர் பல பத்திரிகைகளைத் தொடங்கினார். ஆனால் ஆங்கிலேய அரசாங்கம் அனைத்தையும் முடக்கியது. ஆயுதப்புரட்சியில் நம்பிக்கையுடையவர். அரவிந்த கோஷைப் பின்பற்றியவர். (அரவிந்த கோஷ் வங்காளத்தைச் சேர்ந்தவர். ஆங்கிலேயர்களை ஆயுதம் கொண்டு விரட்டமுடியும் என்று நம்பியவர். அலிப்பூர் குண்டு வெடிப்பில், குற்றம் சாட்டப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையான பிறகு அரசியலை விட்டு விலகி ஆன்மீகத்தில் ஈடுபட்டார். புதுச்சேரியில் குடிபுகுந்தார்.)
சங்கரகிருஷ்ண ஐயர் (வாஞ்சிநாதனின் மைத்துனன்) – விவசாயம் செய்துவந்தார்.
மாடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை – காய்கறி வியாபாரம் செய்துவந்தார்.
முத்துகுமாரசாமி பிள்ளை – பானை வியாபாரம் செய்துவந்தார்.
சுப்பையா பிள்ளை – வக்கீல் அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்தவர்.
ஜகனாதா அய்யங்கார் – சமையல் செய்யும் உத்தியோகம்
ஹரிஹர ஐயர் – வியாபாரி
பாபு பிள்ளை – விவசாயி
தேசிகாச்சாரி – வியாபாரி
வேம்பு ஐயர் – சமையல் செய்யும் உத்தியோகம்
சாவடி அருணாச்சல பிள்ளை – விவசாயம்
அழகப்பா பிள்ளை – விவசாயம்
வந்தே மாதரம் சுப்பிரமணிய ஐயர் – பள்ளிக்கூட வாத்தியார்
பிச்சுமணி ஐயர் – சமையல் செய்யும் உத்தியோகம்

கைது செய்யப்பட்டவர்களில் பல பேர், இருபது வயதிலிருந்து முப்பது வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்களைத் தவிர குற்றம் சாட்டப்பட்ட இருவர், தற்கொலை செய்து கொண்டனர். தர்மராஜா ஐயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வெங்கடேச ஐயர் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆங்கிலேய அரசு, ஆஷ் கொலை வழக்கு மற்றும் தேச துரோக நடவடிக்கைகளில், மேலும் சிலருக்கு பங்கு இருக்கக்கூடும் என்று சந்தேகித்தது. அவர்கள் :

1) வி.வி.எஸ். ஐயர்

திருச்சியில் பிறந்த வரஹனேரி வெங்கடேச சுப்ரமணியம் ஐயர், சட்டம் படித்து விட்டு வழக்கறிஞராக பணியாற்றினார். பின்னர் பாரிஸ்டர் பட்டம் பெற லண்டனுக்குச் சென்றார். அங்கே அவருக்கு வினாயக் தாமோதர் சாவகர்க்கரின் தொடர்பு ஏற்பட்டது. (சாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டவர். ஹிந்துத்துவா கொள்கையை முன்மொழிந்தவர். ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னாளில் மகாத்மா காந்தியைச் சுட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் நிரபராதி என்று அறிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்). ஆங்கிலேயர்களுக்கு எதிராக வி.வி.எஸ்.ஐயர் செயல்பட்டதால், அவரைப் பிடிக்க ஆங்கிலேயர்கள் வாரண்ட் பிறப்பித்தனர். இதையடுத்து இங்கிலாந்திலிருந்து தப்பித்த ஐயர், பாண்டிச்சேரியில் அடைக்கலம் புகுந்தார். புதுச்சேரியில் அவருக்கு பாரதியாருடனும், அரவிந்த கோஷுடனும் நட்பு ஏற்பட்டது. பின்னாளில், முதல் உலகப் போரின் போது ஜெர்மன் கப்பலான எம்டன், சென்னையில் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு காரணம் வி.வி.எஸ் என்று கருதிய ஆங்கிலேய அரசாங்கம், அவரையும் அவரது சகாக்களையும், ஆப்பிரிக்காவுக்கு நாடு கடத்தும்படி பிரெஞ்சு அரசிடம் வலியுறுத்தியதுதான். பிரெஞ்சு அரசு, வி.வி.எஸ் ஐயரின் மீது நிறைய குற்றங்களை சுமத்தி விசாரணை நடத்தியது. ஆனால் குற்றங்கள் எதுவும் நிரூபிக்கப்படாத சூழ்நிலையில், அவர் மீதான நடவடிக்கையை கைவிட்டது பிரெஞ்சு அரசு.
2) சுப்பரமணிய பாரதி

பாரதியார் திருநெல்வேலி ஜில்லாவில் உள்ள எட்டயபுரத்தில் பிறந்தவர். கவிஞர், பெண் விடுதலைக்காகப் போராடியவர், சமூக சீர்திருத்தவாதி, சிறந்த கட்டுரையாளரும் கூட. சுதேசமித்திரன் என்னும் பத்திரிக்கையை இவர் பதிப்பித்து வந்தார். ஆங்கிலேயருக்கு எதிராக அப்போது போராடி வந்த காங்கிரஸ் கட்சியில் இரு வேறு நிலைப்பாடுகள் இருந்தன. கோபால கிருஷ்ண கோகலேவும் அவரைச் சார்ந்தவர்களும், அறவழியில்தான் ஆங்கிலேயர்களிடம் சுதந்தரம் பெற வேண்டும் என்ற கருத்து கொண்டிருந்தனர். பால கங்காதர திலகரும் அவரைச் சார்ந்தவர்களும் புரட்சிகரமான போராட்டங்களை நடத்தித்தான் சுதந்தரம் பெற வேண்டும் என்று கருதி வந்தனர். பாரதி பால கங்காதர திலகரைப் ஆதரித்துவந்தார். வ.உ. சிதம்பரம் பிள்ளையின் மீது போடப்பட்ட தேச துரோக வழக்கில் நீதிமன்றத்துக்கு சென்று சாட்சியம் அளித்தார். மேலும்ஆங்கிலேயருக்கு எதிராக, தன்னுடைய பத்திரிக்கையில் எழுதி வந்ததால் ஆங்கிலேய அரசாங்கம் அவரைக் கைது செய்ய முற்பட்டது. அதனால் புதுச்சேரியில் தஞ்சம் புகுந்தார். புதுச்சேரியிலிருந்தபடி இதழ் பணிகளை நடத்தி வந்தார். புதுச்சேரியில் அவருக்கு அரவிந்த கோஷ், வி.வி.எஸ் மற்றும் பல சுதந்தரப் போராளிகளுடன் தொடர்பு ஏற்பட்டது.

மற்ற மூவர், 3) ஸ்ரீனிவாச ஆச்சாரி 4) நாகசாமி ஐயர் மற்றும் 5) மாடசாமி பிள்ளை.

மேற்சொன்ன ஐவரையும் கைது செய்யுமாறு, ஆங்கிலேய அரசு வாரண்ட் பிறப்பித்தது. ஆனால் வாரண்டை காவல் துறையால் நிறைவேற்ற முடியவில்லை. காரணம் முதல் நால்வர் புதுச்சேரியில் இருந்தனர். ஐந்தாமவரான மாடசாமி பிள்ளை எங்கே இருந்தார் என்று கடைசி வரைக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த மாடசாமி பிள்ளைதான் ஆஷ் துரை சுடப்பட்ட போது வாஞ்சிநாதனுடன் இருந்தவர்.

அன்றைய தேதிகளில் பல சுதந்தரப் போராளிகள், அரசியல் குற்றவாளிகள், ஆங்கிலேயர்கள் கெடுபிடியில் பாதிக்கப்பட்டவர்கள் என அனைவரும் புதுச்சேரியில்தான் தஞ்சம் புகுந்தனர். காரணம், புதுச்சேரி ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டில் இல்லை. பிரெஞ்சு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. ஆங்கிலேய காவல் துறை, பிரெஞ்சு ஆதிக்கம் உள்ள பகுதிக்குள் நுழைந்து ஒருவரை கைது செய்யமுடியாது. அப்படிச் செய்தால் மற்ற நாட்டின் இறையாண்மைக்கு பங்கம் விளைவித்தாக ஆகும்.

ஆங்கிலேய அரசால் தேடப்படும் குற்றவாளி, பிரெஞ்சு பகுதியில் இருந்தால் அவரை Extradite செய்ய முயற்சி செய்யவேண்டும். அதாவது எங்கள் நாட்டில் தேடப்படும் குற்றவாளி உங்கள் நாட்டில் ஒளிந்திருக்கிறான். அவனை எங்களிடம் ஒப்படையுங்கள் என்று கேட்கவேண்டும். சரி என்று அந்த நாடு உடனே ஒப்புக்கொள்ளாது. சம்மந்தப்பட்ட குற்றவாளி, அந்நிய நாட்டிடம் ஒப்படைக்கப்படவேண்டுமா, வேண்டாமா என்று அந்நாட்டின் நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களை ஒப்படைப்பதில், நிறைய சட்ட திட்டங்கள் இருக்கின்றன. எந்த விதமான குற்றம் இழைத்தவரை ஒப்படைக்க வேண்டும் அல்லது ஒப்படைக்கக் கூடாது என்பதற்கான விதிகள் ஏராளம். பொதுவாக அரசியல் குற்றங்கள் புரிந்தவர்களை, ஒரு நாடு மற்ற நாட்டிடம் ஒப்படைக்காது. அதனால் மேற்சொன்ன நபர்களை கைது செய்ய முடியவில்லை.

ஆனால் மற்ற விதத்தில் குடைச்சல் கொடுத்தார்கள். புதுச்சேரி எல்லையில், ஆங்கிலேய காவலர்கள் எப்பொழுதும் தயார் நிலையில் இருந்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் எப்போது தங்கள் நாட்டு எல்லையில் காலடி எடுத்து வைக்கின்றனரோ, அப்பொழுது அவர்களைக் கைது செய்வதற்கு தயாராக இருந்தனர். நிறைய உளவாளிகள் அமர்த்தப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வரும் கடிதங்கள், மனிஆர்டர்கள் ஆகியவை தடுக்கப்பட்டன. புதுச்சேரியில் அச்சிடப்பட்டு வெளியான புத்தகங்கள், பத்திரிக்கைகள் ஆகியவற்றை ஆங்கிலேய ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வினியோகிக்க முடியாமல் தடை செய்தது.

புதுச்சேரியில் இருந்த குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தவிர, கைது செய்யப்பட்ட ஏனைய குற்றவாளிகள் மீது காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

பொதுவாக குற்றம் எந்த இடத்தில் விளைவிக்கப்பட்டதோ, அந்த இடத்தின் மீது அதிகார வரம்புள்ள (Jurisdiction) நீதிமன்றத்தில்தான் வழக்கு விசாரணை நடைபெறும். ஆஷ் துரை கொலை வழக்கு, திருநெல்வேலி அமர்வு நீதிமன்றத்தில்தான் நடந்திருக்கவேண்டும். ஆனால் வழக்கத்துக்கு மாறாக சென்னை உயர் நீதிமன்றம், ஆஷ் கொலை வழக்கை தானே விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதற்கு காரணம், கொலை செய்யப்பட்டவன் ஒரு ஆங்கிலேயன், அதுவும் ஒரு ஜில்லா கலெக்டர்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியே (சர் ஆர்னால்ட் வைட்) விசாரணையில் பங்கு கொண்டார். அவருடன் விசாரணையில் பங்கு கொண்ட மற்ற நீதிபதிகள், நீதிபதி அய்லிங் மற்றும் நீதிபதி சங்கரன் நாயர்.

பொதுவாக கொலை வழக்குகளில் ஜூரி (நடுவர் குழு) நியமிக்கப்படும். ஆனால் ஆஷ் கொலை வழக்கில் ஜூரி அமைக்கப்படவில்லை. ஆஷ் கொலை, ஆங்கிலேயர்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையே நடைபெற்ற சண்டையாகத்தான் பார்க்கப்பட்டது. அதனால் ஜூரியில் இந்தியர்கள் இடம் பெற்றால் அவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு சொல்லலாம் என்றும், அதேபோல் ஜூரியில் ஆங்கிலேயர்கள் இடம்பெற்றால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக தீர்ப்பு கூறலாம் என்றும், அதனால் நடுநிலையாக வழக்கு விசாரணை நடக்காது என்றும் கருதிய நீதிமன்றம் ஜூரியை நியமிக்காமல், தன்னுடைய தீர்ப்புக்கு வழக்கை விட்டுவிட்டது.

(தொடரும்)

.P. சொக்கலிங்கம் @www.tamilpaper.net

0 comments:

Post a Comment

Kindly post a comment.