Wednesday, July 3, 2013

காணாமல்போன அரசு ஊழியர் குடும்பத்தினர் ஓய்வூதியம் பெறலாம் !

காணாமல் போன அரசு ஊழியரின் குடும்பத்தினர் அவருக்கு சேர வேண்டிய ஓய்வூதியம் உள்ளிட்டவற்றை பெறலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பான புதிய வழிமுறைகளை மத்திய ஊழியர், ஓய்வூதியத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பது: ஒரு அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் பெறுபவர் காணாமல் போனால், அவரது குடும்பத்தினர் உரிய அலுவலகத்தில் மனு செய்து உரிய தொகைகளைப் பெறலாம். இந்த வகையில் சம்பள பாக்கி, குடும்ப ஓய்வூதியத் தொகை, பணம் பெறத்தக்க விடுப்புத் தொகை, வருங்கால வைப்பு நிதித் தொகை, பணிக்கொடை ஆகியவற்றை பெற புதிய உத்தரவு வழி செய்கிறது.

தீவிரவாதிகள் அல்லது பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியம் பெறுபவரின் குடும்பத்தினர் அவருக்கு சேர வேண்டிய தொகையைக் கோரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் குற்றம்புரிந்துவிட்டு மறைந்து வாழ்பவர் அல்லது மோசடியைத் தொடர்ந்து கண்மறைவாக இருப்பவருக்கு உரிய ஓய்வூதியம் உள்ளிட்ட எந்த தொகையையும் அவரது உறவினர்கள் பெற முடியாது என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது
.
மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்களுக்கும் இந்த அறிவிக்கை கடந்த வாரம் அனுப்பப்பட்டுள்ளது.

நன்றி :- தினமணி, 03-07-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.