Tuesday, July 23, 2013

கல்பனா சாவ்லா போன்று ஆக நினைத்த இந்தியப் பெண் லண்டனில் தற்கொலை ?




லிவர்போல் : கல்பனா சாவ்லா போன்ற விண்வெளி ஆய்வில் சாதனை படைக்க நினைத்த சென்னையைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஜார்ஜினா தாம்சன், லண்டனில் தான் தங்கி இருந்த அறையில் மர்மமான முறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஜார்ஜினா தற்கொலை :

சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் எஸ்.தாம்சன் என்பவரின் மகள் ஜார்ஜியா தாம்சன். இவருக்கு விண்வெளி வீராங்கனை கல்பானா சாவ்லா போன்று விண்வெளி ஆய்வில் சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் சிறு வயது முதலே இருந்து வந்தது. மிகவும் புத்திசாலிப் பெண்ணான ஜார்ஜினா, லண்டனில் உள்ள லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு ஏரோஸ்பேஸ் இன்ஜியரிங் படிப்பில் சேர்ந்தார்.

இந்நிலையில் ஜூலை 12ம் தேதி பல்கலைக்கழக விடுதியில் தான் தங்கி இருந்த அறையில் ஜார்ஜினா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகள் தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்து தாம்சன் சென்னையில் இருந்து லிவர்பூல் புறப்பட்டுச் சென்றுள்ளார். ஆனால் ஜார்ஜினாவின் உடலை பார்க்க தாம்சன் 2 நாள் வரை அனுமதிக்கப்படவில்லை.

தற்கொலையில் சந்தேகம் :

தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தாம்சன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஜார்ஜினா தங்கி இருந்த அறையில் மின்விசிறியோ அல்லது இரும்பு வளையமோ ஏதும் இல்லை; அப்படி இருக்கும் போது அவள் எவ்வாறு தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்க முடியும்; துணி வைக்கும் 2 அலமாரிகள் மட்டுமே அங்கு உள்ளது; அவள் என்னை விட அதிக உயரமும் கிடையாது; அப்படி இருக்கும் போது அவள் தூக்கிட்டுக் கொள்ள வாய்ப்பே இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 தாம்சனின் நண்பர் லியோ பாஷ்யம் கூறுகையில், போலீசாரோ அல்லது விசாரணை அதிகாரிகளோ எங்களுக்குப்  போதிய ஒத்துழைப்புத் தரவில்லை; ஜார்ஜினா இறந்த சுமார் 5 நாட்களுக்கு பின்னரே அவரது உடலைப் பார்க்க அனுமதித்தனர்; ஜார்ஜினா இறப்பதற்கு முன் எழுதிய கடிதத்தையும் அவர்கள் இதுவரை எங்களிடம் ஒப்படைக்கவில்லை. இவ்வாறு அவர் குற்றம்சாட்டி உள்ளார். அதே சமயம் ஜார்ஜினாவின் மரணம் சந்தேகத்திற்குரியது அல்ல என போலீசார் தெரிவித்துள்ளனர்.

பரிதாபத்திற்குரிய தாம்சன்:

ஜார்ஜினாவின் மரணம் வருத்தம் அளிப்பதாகவும், போலீசாரின் விசாரணைக்குத் தாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், ஜார்ஜினாவின் நண்பர்களுக்கும் அவரது குடும்பத்திற்கும் தங்களின் வருத்தங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் லிவர்பூல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஜார்ஜினா தனது குடும்பத்துடன் போதிய தொடர்பில் இருந்ததில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் 2 அல்லது 3 இமெயில்கள் மட்டுமே அனுப்பி உள்ளார். கடைசியாக ஏப்ரல் மாதம் ஜார்ஜினா தனது தந்தைக்கு அனுப்பிய இமெயிலில் தான் நலமாக இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

 தனது பொருளாதாரப் பற்றாக்குறை சூழ்நிலை காரணமாக தனது மகளின் உடலை கொண்டு வர நிதியுதவி செய்யுமாறு இந்திய தூதரகத்தை அணுக தாம்சன் முடிவு செய்துள்ளார். தாம்சன் தனது வீட்டை மகளின் படிப்பிற்காக அடமானம் வைத்து குறிப்பிடத்தக்கது. மகளின் மரணம் குறித்த மர்மங்கள் தீர்க்கப்படும் வரை ஜார்ஜினாவின் பொருட்களை தான் பெற்றுக் கொள்ளப் போவதில்லை என தாம்சன் தெரிவித்துள்ளார். 

நன்றி :- தினமலர்,                                                           

(5 பக்கக் கடிதம் எழுதி வைத்துள்ளதாகவும் அதனை நீதிமன்றத்தில்தான் சம்ர்ப்பிக்க முடியும் என்றும் நிர்வாகம் கூறுவதாக, இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா தகவலைத் தந்துள்ளது )
Click Here

0 comments:

Post a Comment

Kindly post a comment.