Tuesday, June 11, 2013

தலைமுறை இடைவெளியைக் குறைக்கலாம் - ப.செ.சங்கரநாராயணன்

இப்போதெல்லாம் வீடுதோறும் முதியவர்களின் தனிமையும் இளைய தலைமுறையின் புறக்கணிப்பும் குடும்ப வாழ்க்கையின் அம்சங்களாகிவிட்டன. தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக முதியோரும், அனாவசியமாகத் தங்கள் வாழ்க்கையில் குறுக்கிட்டு எந்த முடிவையும் எடுக்க முடியாமல் (முதியோர்) தடுப்பதாக இளைய தலைமுறையும் கருதுகின்றன. இந்த இரண்டுமே சரியல்ல.

மூத்தோர் சொல்லும், முதுநெல்லிக் கனியும் முன்னால் கசக்கும், பின்னால் இனிக்கும் என்பர். இன்றைய தலைமுறையினருக்கு வீடுகளில் முதியவர்கள் பேச ஆரம்பித்தாலே கசக்கிறது. ""உங்கள் காலம் வேறு; எங்கள் காலம் வேறு'' என வியாக்கியானம் செய்து வாயை அடைத்து விடுகின்றனர்.

பல விஷயங்களில் தமது பிள்ளைகள் தெரிந்தே போய் படுகுழியில் விழுகிறார்களே என பெற்றோர்களுக்கு ஆதங்கம். ஆனால், யார் காது கொடுத்து கேட்கிறார்கள்? முதுமைக்கும், இளமைக்கும் தலைமுறை இடைவெளி இருந்தாலும், அது ஒன்று மட்டுமே அவர்கள் புறக்கணிக்கப்படுவதற்குக் காரணம் இல்லை.

அனுபவமிக்க முதியவர்களின் கருத்துகளால் குடும்ப விவகாரங்களில் சில பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கிறது. ஆனால், பொருளாதார விஷயங்களில் தற்போதைய நடைமுறைக்கு ஒவ்வாத சில ஆலோசனைகளால் பலருக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதையும் மறுக்க முடியாது.

தெரிந்த நண்பர் ஒருவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு தங்களது மூதாதையரின் சொத்துகளை விற்று, அதன் மூலம் நகருக்கு அருகில் சில மனைகளை வாங்கிப் போட முடிவெடுத்தார். ஆனால், அவரது தந்தை வலுக்கட்டாயமாகத் தடுத்து, சொத்துகளை விற்றுக் கிடைக்கும் பணத்தை, அரசு வங்கியில் பாதுகாப்பாக "டெபாசிட்' செய்யும்படி வற்புறுத்தினார். கடைசியில், தந்தையின் பேச்சைக் கேட்டு மகனும் அப்படியே செய்தார்.

ஆனால், தற்போது அவர் வாங்க நினைத்திருந்த மனைகளின் சந்தை மதிப்பு எங்கேயோ போய்விட்டது. வங்கியில் போட்டு வைத்திருந்த பணத்தின் மதிப்போ அதல பாதாளத்தில். எப்படியிருக்கும் அவரது மகனுக்கு? இந்தப் பிரச்னையால் ஏற்பட்ட மன உளைச்சலால், ஒரே வீட்டில் இருந்தாலும் தந்தையும், மகனும் சரிவரப் பேசிக் கொள்வதேயில்லை..!

இப்படி எந்த விஷயத்தில் தலையிட வேண்டும்; எதில் தலையிடக்கூடாது எனத் தெரியாமல் முதியவர்கள் பலர் வீடுகளில் அவமானப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை.

மூத்தோரின் மேலான ஆலோசனைகளை நடைமுறைப்படுத்திவிட்டு, பொருந்தாத ஆலோசனைகளை, தான் ஏன் செயல்படுத்தவில்லை என்பதை விவரமாக விளக்கிக் கூறும் பொறுமையும், பக்குவமும் இளையவர்களுக்கு கைகூட வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் கூட்டுக் குடும்பங்களும் சிதையாது.

நாம் சொல்வதையே கேட்க மாட்டேன் என்கிறார்களே, என முதியவர்கள் புலம்ப வேண்டிய நிலையும் ஏற்படாது.

அலுவலகம் செல்லும் வழியில் ஒரு பள்ளியை ஒட்டிய மரத்தடி திண்ணை. அதன் அருகே, மாலை வேளைகளில் ஆறேழு முதியவர்கள் எப்போதும் அமர்ந்து மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பார்கள். அப்படி, அவர்கள் என்னதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் எனக் கேட்கும் வாய்ப்பு ஒருநாள் கிடைத்தது. பெரும்பாலும் அவர்களது உரையாடலில் தங்களது மகன், மருமகளைப் பற்றிய குற்றங்குறைகளே அதிகம் இருந்தன. அதில், ஒருவர் கூட தங்கள் வாரிசுகளைப் பற்றி நல்லவிதமாகப் பேசவில்லை. என்னதான் வீடுகளில் பிரச்னை என்றாலும், அதை மூன்றாம் மனிதர்களிடம் சொல்லிப் புலம்புவதால் என்ன பயன்?

இதனால், அவர்களுக்கு ஓரளவுக்கு மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைத்தாலும், என்றாவது ஒருநாள், அந்த மூன்றாம் மனிதர் மூலம் அவர்கள் கூறியது பிள்ளைகளுக்குத் தெரியவந்தால் என்ன ஆவது? ஆண்கள்தான் இப்படியென்றால், பெரும்பாலான வயதான பெண்களின் செயல்களும் அவ்வாறே இருப்பது வேதனை அளிக்கிறது.

முதுமைக் காலத்தைப் பற்றிய எந்தவிதத் திட்டமிடலும் இல்லாமல் பலர் அவஸ்தைப்பட்டு வருவதற்கு, இதுபோன்ற பல காரணங்கள் உண்டு. மகனோ, மகளோ புறக்கணிக்கிறார்கள் என எந்தவொரு முதியவராவது புலம்பினால் அவர்களது குடும்ப உறவுகளைத் தவிர்த்து, மூன்றாம் மனிதர்களால் என்ன செய்து விட முடியும்? அப்படி, அவர்களால் சட்டத்தின் மூலமோ அல்லது ஏதாவதொரு விதத்திலோ நியாயம் கிடைக்க வழி ஏற்பட்டாலும், பின்னாளில் வம்பு, வழக்கு என ஏதாவது வந்து விடுமோ என அஞ்சியே பலரும் ஒதுங்கிப் போய்விடுவது கண்கூடு. சரி, பிரச்னைக்கு என்னதான் தீர்வு?

"பயாலஜிக்கல் கிளாக்' (உயிரியல் கடிகாரம்) என்பார்கள்..! அந்த கிளாக் ஒவ்வொருவரின் மூளைக்குள்ளும் இருந்துகொண்டு, காலச்சக்கரச் சுழற்சியில் நம்மை நேர, நியதிப்படி இயங்க வைத்துக் கொண்டிருக்கும். ஐம்பது வயதைக் கடந்தவுடன் அந்த கிளாக்கில் முதல் அலாரம் அடிக்கும்..! அப்போதே உஷாராகிவிட வேண்டும். அறுபது வயதைக் கடந்து விட்டாலோ இன்னும் உஷாராகி விடவேண்டும். தாமரை இலைத் தண்ணீர் போல வாழலாம்.

ஒருவேளை வாரிசுகளால் தனிமைப்படுத்தப்படும்போது, சுயமாக இயங்கும் நிலையில் உள்ள ஒவ்வொருவரும் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு உதவிகளை (பண உதவி மட்டுமல்ல) உண்மையிலேயே சிரமப்படும் பிறருக்குச் செய்ய முன்வர வேண்டும்.

இதன்மூலம் கிடைக்கின்ற புதிய உறவுகளால், நமது நம்பிக்கைகள் பலப்பட்டு முதுமையில் உற்சாகமாக இயங்கத் தெம்பும் கிடைக்கும். அதைவிடுத்து ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம் என எஞ்சிய காலத்தை புலம்பிக் கொண்டு கழிப்பதால், எந்தவொரு நன்மையும் விளையப் போவதில்லை.

0 comments:

Post a Comment

Kindly post a comment.