Tuesday, May 7, 2013

மொழி படிக்காமல் சொற்கள் வராது - மாத்தளை சோமு மே 2013 அமுதசுரபி மாத இதழில்.


தாய் மொழிக் கல்வி நலிந்து வருகிறது. இதனால், முன்னோர் பயன்படுத்திய தமிழ்ச் சொற்களைத் தமிழர்கள் மறந்து விட்டனர். அந்த இடத்தினை ஆங்கிலச் சொற்கள் கைப்பற்றிக் கொண்டன.

இரவு அல்லது ராத்திரி என்ற சொல்லுக்குப் பதிலாக “நைட்” - ஐத்தான் பயன்படுத்துகிறோம்.

”சோறு” மறந்து போய் விட்டது. ”ரைஸ்” சரியான தமிழ்ச் சொல்லாகிவிட்டது. நெல், அரிசி, சோறு என்றால் தமிழில் தனித்தனி அர்த்தம் உண்டு. ”அரிசிக்கும்” சோற்றுக்கும் “ரைஸ்” என்று தமிழில் சொல்லித் திரிகின்ற கொடுமையை எங்கே சொல்வது?

எந்த மொழியையும் படிக்காமல், பேசவோ, எழுதவோ முடியாது. தாய்மொழியே ஆனாலும் அதனை முறைப்படிப் படிக்க வேண்டும். தமிழை அவ்வாறு படித்திருந்தால், ”நைட்” “ரைஸ்” என்ற சொற்கள் வரவே வராது.


தமிழில் ஏராளமான சொற்கள் இருக்கின்றன. அவற்றைத் தமிழ் இலக்கியங்களிலிருந்து தேடி எடுக்கவேண்டும். அப்படியும் கிடைக்காவிட்டால்தான் புதிய சொற்களை உருவாக்கவேண்டும்; அல்லது பிற மொழிகளிலிருந்து கடன் வாங்க வேண்டும்.   

ஆங்கில மொழி 15-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர்தான் எழுச்சி பெற்றது. அது செம்மொழி அல்ல. செம்மாந்த பழைய இலக்கியங்கள் இல்லாத மொழி. ஆனால், எல்லா மொழிச் சொற்களையும் தன் வசப்படுத்தி, தன் சொற்களாகத் தழுவிக் கொள்கிற மொழி. ஆகவேதான் வேடிக்கையான சொற்கள்கூட ஆங்கிலத்தில் வினைச் சொற்களாக இருக்கின்றன. அஃறிணைச் சொற்களும் உயர்திணைச் சொற்களும் ஒன்றாயிருக்கின்றன. உதாரணமாக CRIKET PLAYER மற்றும் RECORD PLAYER ஆகிய சொற்கள். கிரிக்கெட் பிளேயர் “உயிர்” உள்ளவர். “ரெகார்டு பிளேயர்” உயிரற்றது. ஆனால் இரண்டுக்கும் பொதுவான சொல்லாக “பிளேயர்” இருக்கிறது.

தமிழைப் படித்துக்கொண்டே போனால் அதன் கதவுகள் திறந்துகொண்டே போகும். அந்தக் கதவுகள் திறந்தால்  ரைஸ், நைட் போன்ற சொற்கள் சாதாரண உச்சரிப்பில் “வராது”  


 சங்க இலக்கியம் தரும் சொற்கள் :

உசாவுதல் - கேட்டல்

பாடு - வாழ்க்கை, பெருமை ( ஈழத் தமிழர்கள் சந்திக்கின்றபோது “உங்கபாடு எப்படிப் போவுது” என்று கேட்பார்கள் )  ( நெல்லையிலும் பயன்படுத்துவர் )

பகடி - நகைச்சுவை

தூக்கிலி - ( துக்கிலியாய் மாறியது ) - ஆராய்ந்து பாராதவன்

அத்தா - ( இராமநாதபுர முஸ்லீம்கள் தந்தைக்காகப் பயன்படுத்தும் சொல் ) தந்தை   ( அத்தா உனக்காளாயினி அல்லேல் எனலாமே -தேவாரம் )

நாளங்காடி - பகலில் திறந்திருக்கும் கடை

அல்லங்காடி - இரவில் திறந்திருக்கும் கடை

அயின் - உணவு

குழை - ( ஆண்கள் அணிவது ) - காதணி

விளம்புவுவாம் - சொல்லுவோம்

உத்தரியம் - மேலாடை

பாடகம் - காலணி ( BOOTS )

அங்காடி - கடைத்தெரு

கேட்டிசின் - கேட்பாயாக

உவாத்தி - ஆசிரியர் ( ஈழத்தில் ஆசிரியரை உவாத்தியாய - உவாத்தி என்று அழைப்பர். உவாத்தியே வாத்தியாராயிருக்கலாம்.

வெண்ணெல் - வெள்ளை சம்பா

எலுவ - தோழ ( சிங்களத்தில் யாழவா - எலுவ என்ற சொல்லே யாழவா என்று மாறியிருக்கலாம்.

இயல் - உலாவி ( எனவே MOBILE PHONE -ஐ இயலி பேசி என அழைக்கலாம்.( வேறு சொற்கள் கைப்பேசி, உலா பேசி, செல்பேசி என்பன).

வெஞ்சோறு - சூடான சோறு

புலவு - புலால் ( இதுவே புலாவ் என ஏனைய மொழிகளில் மாறியிருக்கலாம்.

கம்பங்கோழிகள் - கிராமத்துக் கோழிகள் ( கம்பங் என்பது மலாய் மொழியில் கிராமத்தைக் குறிக்க கம்பம் என்று மாறியிருக்கிறது )

தாதை - தந்தை ( இதுவே மலாய் மொழியில் டத்தோ என மாறியிருக்கலாம். )

முடுக்கு - குறுக்குத் தெரு ( இலங்கையில் முடுக்கத் தெரு என அழைப்பர் )

ஊன் சோறு - இறைச்சிச் சோறு ( பிரியாணிச் சோற்றை இப்படி அழைக்கலாம் )

பொதியறை- நிலவறை

பெருஞ்சோறு - விருந்து

நுளம்பு - பெரிய கொசு , மாட்டுக் கொசு ( ஆனால் ஈழத்தில் கொசுவை நுளம்பு என்றே அழைப்பர் )

அடுக்ககம் - பல மாடிக் கட்டிடம்

தொலைநகல் ( FAX ) - சாயை, தொலை பதிவு

கோநகரம் - தலைநகரம்

அறக்கூழ்ச்சாலை - ஏழை மக்களுக்கு உணவு வழங்குமிடம்

சதுக்கம் - SQUARE,

முடுக்கு - CLOSE

மறுகு - LANE 

நன்றி :-அமுதசுரபி, மே ,2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.