Monday, April 15, 2013

தமிழ்ப் பல்கலை. பதிப்புத் துறைக்கு தனி இணையதளம்


தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத் துறைக்குத் தனி இணையதளம் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அதன் துணைவேந்தர் ம. திருமலை. தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி, தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத் துறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 50 சதவீத தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை தொடக்க விழாவில் அவர் மேலும் பேசியது:

பதிப்புத் துறைக்கு எனத் தனி இணையதளத்தை உருவாக்கி அதில் நூல்கள் தொடர்பாக விளம்பரங்கள் செய்யப்படும். இணையதளம் உருவாக்கும் நடவடிக்கை இரு மாதங்களில் முடிக்கப்படும்.

இத்துறை நூல்கள் மக்களை விரைவாக அடையக்கூடிய வகையில் தஞ்சையின் மையப் பகுதியில் நூல் விற்பனைக்காக வாடகைக்கு இடம் தேர்வு செய்யப்படவுள்ளது.

தமிழக அரசு அண்மையில் அளித்த ரூ. 2 கோடியிலும், பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு அளித்த ரூ. 70 லட்சத்திலும் ஒரு குறிப்பிட்ட அளவு தொகை பதிப்புத் துறைக்கு வழங்கப்படவுள்ளது. இந்தத் துறையில் இதுவரை 465 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இன்னும் அதிக அளவில் நூல்கள் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, முன் வெளியீட்டுத் திட்டத்தின் கீழ் ஏப்ரல் மாதத்துக்குள் 14 நூல்கள் வெளியிடப்படவுள்ளன.

கம்ப ராமாயணம் எளிய உரைநடை கையடக்க வடிவிலும், பாவேந்தர் பாரதிதாசனின் படைப்புகளை முழுமையாகக் கொண்ட பதிப்பும் வெளியிடும் திட்டமும் உள்ளது என்றார் திருமலை.                                                                         

நன்ரி :- தினமணி, 15-04-2013                  


0 comments:

Post a Comment

Kindly post a comment.