Monday, April 8, 2013

யாழ்ப்பாணத்தில் இருந்து தினமணிக்கு வந்ததோர் வேண்டுகோள் கடிதம் !




யாழ்ப்பாணத்திலிருந்து கடந்த மாதம் 20 ஆம் தேதியிட்டு அனுப்பப்பட்ட ஒரு கடிதம், இரண்டு நாள்களுக்கு முன்புதான் கிடைத்தது.

அந்தக் கடிதத்தை வாசகர்களின் பார்வைக்கு எந்தவித மாற்றமும் செய்யாமல் அப்படியே வெளியிடுகிறோம்- ஆசிரியர். (  தினமணி )

வணக்கம்.

இலங்கைத் தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் மாணவர்கள் நடத்தும் தொடர் போராட்டங்களுக்கு மனமார்ந்த நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பிரச்னைக்கு ஒரு நிரந்தரமான தீர்வு ஏற்பட்டு, அதனை சரியான முறையில் செயல்படுத்தும் நிலை உருவாகி உறுதிப்படுத்தப்படும் வரையும், ஏன் அதற்குப் பின்னரும்கூட இந்த விஷயத்தில் கவனமாக இருக்குமாறு மாணவர்களிடம் தயவாகக் கேட்டுக் கொள்கிறேன்.

இலங்கையில், நாங்கள் இங்குள்ள அரசை எதிர்த்துப் போராடக் கூடிய நிலையில் இல்லை. ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் அல்லது பலரை இழந்து விட்டோம். பல குடும்பங்கள் முற்றாக அழிந்துவிட்டன.

பலர் குருடர், செவிடர், நொண்டி, உடலியக்கப் பாதிப்பு, மனநோய் முதலியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 95 ஆயிரம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். 1,40,000 பேருக்குமேல் காணாமல் போய்விட்டனர்.

இந்த நாட்டின் தலைமைக்கு எதிராக நாங்கள் வாயைத் திறக்க முடியாது. உயிரைவிடத் துணிந்தால் மட்டும் வாயைத் திறக்கலாம். ஒன்றும் பேசாவிட்டாலும்கூட புலி ஆதரவாளர் முத்திரை குத்தப்பட்டு கைது செய்யப்படலாம்; காணாமல் போகலாம். அரசின் ரகசிய ஒற்றர்கள் வெள்ளை வேன் வாகனத்தில் வந்து பிடித்துக் கொண்டு போய்விடுவார்கள். அதன்பின் ஆளைக் காண முடியாது.

சாட்சிகளுக்கு நிரந்தரமான பாதுகாப்பும், உயிருக்கு உத்தரவாதமும் அளிக்கப்பட்டால் இறுதிப் போரின்போது நடந்தவற்றை சொல்ல, உயிர் தப்பியவர்கள் தயாராக உள்ளனர். ஆனால், தற்போதைய நிலையில் அவர்களால் வாய் திறக்க முடியாது.

தமிழ்நாட்டு மாணவர்கள் மண்ணெண்ணெய், பெட்ரோல் ஊற்றி தீவைத்து உயிரிழப்பதை நாங்கள் முற்றாக விரும்பவில்லை. உண்ணாவிரதப் போராட்டத்தை இந்தியா உள்பட எந்த நாடும் மதிப்பதில்லை.

மனிதச் சங்கிலி, கடை அடைப்பினால் பயனில்லை. எங்கள் நாட்டுத் தலைவரின் உருவப் பொம்மைக்கு தீ மூட்டுவதால் எவ்வித பயனும் இல்லை.

மேலும், வழக்குரைஞர்கள் மதுரையில் மாதிரி நீதிமன்றம் அமைத்து, இலங்கை அதிபரை தூக்கிலிட்டதை நாங்கள் கோமாளிகளின் வேலையாகவே பார்க்கிறோம். நாங்கள் கேட்பது உண்மையான, நிஜமான சர்வதேச விசாரணை. எனவே, மாணவர்கள், பேஸ் புக், டுவிட்டர் போன்ற நவீன சாதனங்கள் மூலம் போராட்டம் நடத்துவதே வலிமையானது.

கருணாநிதி, 2009ஆம் ஆண்டு மத்திய அரசுக்கான ஆதரவை விலக்கியிருந்தால் (இந்திய நாடாளுமன்ற தேர்தல் காலம்) இறுதிப் போரில் கொல்லப்பட்ட 40,000 பேரைக் காப்பாற்றியிருக்கலாம். அந்த நல்ல வாய்ப்பை நழுவவிட்டு தற்போது ஆதரவை நீக்கியதில் (செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க செய்யாமை யானும் கெடும்-திருக்குறள்) எங்களுக்கு எவ்வித பயனும் இல்லை. அடுத்த தேர்தலில் வேண்டுமானால் இது அவருக்கு உதவக்கூடும். மாணவர்கள் தமிழ்நாட்டில் மட்டும் போராட்டம் நடத்தாமல் தில்லியில் போராட்டம் நடத்தினால்தான் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்கலாம்.

ஜெனீவா பிரேரணை தொடர்பான நாடுகளின் தில்லி அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தலாம். தில்லியில் அமெரிக்க தூதரகம் முன்பு போராட்டம் நடத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் போராட்டம் நடத்தும் மாணவர்களை மாநில அரசு கைது செய்வதாகச் சொல்லி ஜெயலலிதா ஆட்சியைக் கலைக்கச் செய்ய, கருணாநிதி ஆடும் கபட நாடகம் இலங்கைத் தமிழர்களுக்கு நன்றாகத் தெரியும்.

எங்களுக்கு ஜெயலலிதா, கருணாநிதி மட்டுமல்ல; தமிழகத்தில் உள்ள இதர அரசியல் கட்சிகளின் ஆதரவும் தேவை.

தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து போராடினால் லட்சியம் நிறைவேறியிருக்கும் என உபதேசம் செய்யும் கருணாநிதி, தற்போது ஜெயலலிதாவுடன் சேர்ந்து ஒற்றுமையாகிக் குரல் கொடுக்க முன்வராதது ஏன்?

சில தமிழர்கள் கருணாநிதியின் நிலைப்பாட்டை பிரசார தந்திரமாகவே பார்க்கிறார்கள். 2009இல் அவர் செய்த துரோகத்தை இலங்கைத் தமிழர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள், மன்னிக்கமாட்டார்கள்.

இப்படிக்கு,

தங்கள் அன்புள்ள

எஸ். கந்தசாமி, யாழ்ப்பாணம்.

தினமணி, 08-04-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.