Monday, April 15, 2013

செங்கல் சூளைத் தொழிலாளர் வாரிசுகள் பொறியாளர்களாக உயர்த்தப்பட்ட உண்மைக் கதை !

சேவாலயாவின் மிகப்பெரிய சாதனை!
இந்நிகழ்ச்சியில் "சேவாலயா' நிர்வாக அறங்காவலர் முரளிதரன் பேசியது: 25 ஆண்டுகளுக்கு முன்பு சிவன்வாயல் என்ற கிராமத்தில் சாலை வசதி, மின்சார வசதி என்ற எந்த அடிப்படை வசதியும் இல்லாத காலத்தில் 5 மாணவர்கள், 2 பணியாளர்களுடன் "சேவாலயா' தொடங்கப்பட்டது.

அதன் பின்னர் திருநின்றவூர் பேரூராட்சி நிர்வாகத்தினர் இரயில் நிலையம் அருகில் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது, அதை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறி பேரூராட்சியிலும் தீர்மானம் நிறைவேற்றினர். இதையடுத்து அந்த இடத்தை முறைப்படி சேவாலயாவுக்குச் சொந்தமாக்கிக் கொள்ள அதிகாரிகளை அணுகியபோது, பல்வேறு கட்டங்களை அந்த கோப்பு கடந்து செல்ல வேண்டும். மீண்டும் அதே வழியில் அனுமதி பெற்று வரவேண்டும் என்றனர்.

அதற்கும் முயற்சி செய்து பார்க்கலாம் என 2, 3 கட்டங்கள் வரை அந்த கோப்பை நகர்த்தினோம். ஆனால் அவர்கள் கேட்ட லஞ்சம் நிலத்தின் மதிப்பைவிட அதிகளவில் இருந்தது. அதனால் லஞ்சம் கொடுக்க மனமில்லாமல் அந்த இடத்தை விட்டுவிட்டு கசுவா கிராமத்தில் ஒதுக்குப்புறமாக மலிவான விலைக்குக் கிடைத்த ஒன்றரை ஏக்கர் நிலத்தை வாங்கத் திட்டமிட்டேன்.

அப்போது திருநின்றவூர் நிர்வாகத்தினர் "நாங்கள்தான் தீர்மானம் போட்டு அந்த இடத்தை உங்களுக்குக் கொடுத்தோமே, நீங்கள் ஒரு கொட்டாய் அமைத்து ஆக்கிரமிப்பு செய்துகொள்ளுங்கள். நாங்கள் யாரும் உங்களை கேட்க மாட்டோம்' என்று கூறினர்.

நான் ஆக்கிரமிப்பதென்றால் எனது பள்ளியில் பாரதியார், மகாத்மா காந்தி மற்றும் சுவாமி விவேகானந்தரின் படங்களை வைக்க முடியாது. அதை வைக்கத் தகுதியற்றவனாகி விடுவேன் என்றேன்.

அப்போது, நான் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துக் கொண்டிருந்த நேரம், என்னுடன் பணிபுரிந்த 60 நண்பர்களுடன் அமெரிக்கா செல்வது குறித்து பேசும்போது, இந்த இடம் வாங்குவது குறித்து பேச்சு எழுந்தது. என்னுடைய நண்பர்கள் பணம் தர முன் வந்தனர். அமெரிக்கா சென்று வந்த பின்னர் படிப்படியாக அந்த பணத்தை 3 மாத காலத்தில் வசூலித்து அந்த ஒன்றரை ஏக்கர் நிலத்தை ரூ.1.50 லட்சம் கொடுத்து வாங்கினோம். 1989-ல் சேவாலயாவை கசுவா கிராமத்துக்குக் கொண்டு வந்தோம்.

அதன் பின்னர் சுற்றியுள்ள கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள செங்கல் சூளை தொழிலாளர்களிடம் பேசி அவர்களது பிள்ளைகளைப் படிக்க அழைத்து வந்தோம். பல மாதங்களாக தொடர்ந்து மறுத்து வந்த மக்கள் முதலில் தங்களது ஆண் பிள்ளைகளை மட்டும் அனுப்ப சம்மதித்தனர். அப்போது 100 சதவீதக் குழந்தைத் தொழிலாளர்கள் சுற்றியுள்ள கிராமத்தில் இருந்தனர். அந்த நிலைமையை மாற்றி இப்போது 1 சதவீதம்கூட குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத நிலைமையை உருவாக்கியுள்ளோம்.

சேவாலயா நிறுவனம் இன்று ஆலமரமாக உயர்ந்து வெள்ளி விழா கொண்டாடுகிறது. 1989-ம் ஆண்டு சேவாலயா ஆதரவற்றோர் இல்லமாக தொடங்கி 1991-ல் தொடக்கப் பள்ளியாக உருவாக்கி 1996-ல் உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டது. 
 
இன்று அந்த செங்கல் சூளை தொழிலாளர்களின் பிள்ளைகள், பொறியாளர்களாகவும், தொழில் நுட்பக் கல்வி பயின்றவர்களாகவும் நல்ல நிலைமையில் உள்ளனர். இதுவே சேவாலயாவின் மிகப்பெரிய சாதனை என்றார்.                                                                                                    

நன்றி :- தினமணி, 15-04-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.