Thursday, April 18, 2013

ரூ.200 கோடிக்கு ஏலம் போனது கோல்கொண்டா வைரம் !

பண்டைய இந்தியாவில் வெட்டி எடுக்கப்பட்ட "பிரின்ஸி' வைரம் சுமார் ரூ.200 கோடிக்கு ஏலம் போனது. தனியாருக்குச் சொந்தமான வைரம் ஒன்று இவ்வளவு அதிக தொகைக்கு ஏலத்தில் விலை போயிருப்பது இதுவே முதல்முறை.

 உலகில் 3-வது பெரிய இளஞ்சிவப்பு வைரமான இது,சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர மாநிலம் கோல்கொண்டா சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்பட்டது.

அமெரிக்காவின் கிறிஸ்டீஸ் ஏல நிறுவனம் இந்த வைரத்தை விற்பனை செய்துள்ளது. ஏலம் எடுத்தவர் தனது பெயரைத் தெரிவிக்க விரும்பவில்லை. அந்த நபர் பழமையான கலைப்பொருள்கள், வைரங்களை சேகரித்து வருகிறார் என்று மட்டும் அறிவிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வைரம் ஹைதராபாத் நிஜாம்களிடம் இருந்தது. 1960-ம் ஆண்டு முதல்முறையாக ஏலத்துக்கு வந்தது. ஹைதராபாத் நிஜாம்தான் அதனை ஏலம் விடுவதற்கு அளித்தார் என்பது தெரிவந்தது. அப்போது, பிரான்ஸின் நகைத் தயாரிப்பு நிறுவனமான வான் க்ளிஃப் அண்ட் ஆர்பெல்ஸ் அதனை சுமார் ரூ.5.5 கோடிக்கு ஏலம் எடுத்தது. இப்போது மீண்டும் நியூயார்க்கில் ஏலம் விடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு 2008-ம் ஆண்டில் சுமார் ரூ.132 கோடிக்கு வெள்ளை வைரம் ஒன்று ஏலம் போனது. இதுவும் ஹைதராபாத் நிஜாம்களுக்கு சொந்தமானதுதான். அந்த வைரத்தை நிஜாம் மன்னர்கள் மேஜை மீது வைக்கும் "பேப்பர் வெயிட்'டாகப் பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத் நிஜாம்களில் ஒருவரான உஸ்மான் அலிகான் சித்திக், உலகின் மிகப்பெரிய செல்வந்தராக இருந்தார். உலக வரலாற்றில் அதிகமான வைரங்கள் உள்ளிட்ட நவரத்தினங்களை வைத்திருந்தவர்கள் ஹைதராபாத் நிஜாம் பரம்பரையினர்தான்.

இவற்றில் பெருமளவு வைரங்கள் அவர்களது ஆட்சியின் கீழிருந்த கோல்கொண்டா சுரங்கத்தில் இருந்து கிடைத்தவை.

நன்றி :- தினமணி, 18-04-2013                                                      



0 comments:

Post a Comment

Kindly post a comment.